என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Tuesday, October 6, 2009

வராத கண்ணீர் வந்தபோது...

அது 1982-ம் வருடம் அக்டோபர் மாதத்தின் கடைசி நாள்.அப்போதெல்லாம் இப்போ மாதிரி வீட்டுக்கு வீடு டெலிபோன் வசதி இருக்காது. ஒரு தெருவில் ஒன்று அல்லது இருவர் வீட்டில் இருந்தால் ஆச்சர்யம். குழந்தை பிறந்ததை, உறவினர் இறந்ததை தெரிவிக்க இருந்த ஒரே சாதனம் தந்தி தான் .

அன்று இரவு மணி பதினொன்றரை ." சார் தந்தி" என்ற குரல் கேட்டு பதறியடித்து எழுந்தேன். "அப்பா இறந்து விட்டார். உடனே புறப்படவும் " என்ற தந்தி வாசகத்தை படித்துவிட்டு அப்படியே இடிந்து போய் உட்கார்ந்தேன். நான் இருப்பது சென்னை அம்பத்தூரில். அப்பா இறந்தது விழுப்புரத்தில். இப்போ மாதிரி இரவு பேருந்தெல்லாம் அப்போ கிடையாது. கொட்ட கொட்ட முழித்திருந்து அதிகாலை நாலு மணிக்கு வரும் ட்ரைன் பிடித்து சென்ட்ரல் போய் அங்கிருந்து தாம்பரம். ஒரு லாரி டிரைவரிடம் தந்தியை காண்பித்து ஏறி உட்கார்ந்து விழுப்புரம் போய் சேர்ந்த போது மணி ஒன்பதை தொட்டுவிட்டிருந்தது.

இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடெல்லாம் நடந்து கொண்டிருந்தது. கூடத்தில் கிடத்தப்பட்டிருந்த அப்பாவின் சடலத்தின் பக்கம் போய் உட்கார்ந்து அவரின் தலையை வருடிக்கொடுத்து சிறிது நேரம் அவரையே உற்று பார்த்துக்கொண்டிருந்துவிட்டு நிமிர்ந்தபோது எல்லோர் கண்களும் என்னையே உற்று நோக்குவதை கண்டேன். என் கண்களிலிருந்து ஒரு பொட்டு கண்ணீர் கூட வராதது அவர்களுக்கெல்லாம் ஆச்சரியமான ஆச்சரியம். "ஏண்டா அப்பா செத்ததுக்கு உனக்கு அழுகையே வரலயாடா?" என்று ஒரு உறவினர் வாயைத் திறந்து கேட்டே விட்டார். "வரல்லியே மாமா நான் என்ன பண்றது?" என்று அவரிடமே கேட்டேன். ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டார் அவர் . அதன் பின்பும் ஏனோ தெரியவில்லை மயானம் செல்லும் வழி நெடுகிலும் எனக்கு சுத்தமாக அழுகையே வரவில்லை. இத்தனைக்கும் என் அப்பாவுக்கு என் மேல் தனி பாசம் இருந்தது. " இப்படி அப்பாவியாக இருக்கிறாரே!" என்று நானும் அவர் மேல் கூடுதல் பாசத்தோடிருந்தேன்.
சடங்குகள் முடிந்ததும் வெட்டியான் "இன்னும் யாராவது பார்க்கணுமா? முகத்தை மூடப்போறேன் என்று கூறவும் தூரத்தே "அண்ணா!" என்று கத்திக்கொண்டே வெளியூரிலிருந்து  என் அத்தையும் இன்னொரு உறவினரும்அப்போதுதான் வரவும் சரியாக இருந்தது.

அதன் பின்பு நடந்ததுதான் கிளைமாக்ஸ்.

என் அத்தை பார்ப்பதற்கு அச்சு அசல் என் அப்பாவைப் போலவே இருப்பார். அவர் ஓடி வருவதைப்பார்த்ததும் எனக்கு என் அப்பாவே வருகிற மாதிரி தோன்றியதோ என்னமோ, உடனே " டேய் ஏண்டா எங்கப்பாவை எரிக்கறீங்க?" என்று ஆவேசமாகக் கேட்டுக்கொண்டே சிதையை கலைக்க முற்பட்டிருக்கிறேன். அதை பாய்ந்து தடுத்த உறவினர்கள் என்னை ஒரே அமுக்காக அமுக்கி பிடித்துக்கொள்ள என் பெரிய அண்ணன் சிதைக்கு தீ வைக்க அதை பார்த்து மயங்கி சரிந்திருக்கிறேன் நான். மயக்கம் தெளிந்த பின்னர் " நானா அப்படியெல்லாம் செய்தேன்?" என்று எனக்குள் ஒரு அதிர்ச்சி அலை .

" அதுதானே பார்த்தேன் என்னடா உங்கப்பா செத்ததுக்கு நீ துளி கூட அழலியேன்னு! அதையெல்லாம் தூக்கி அடிக்கற மாதிரி இப்படி பண்ணி எங்களையெல்லாம் பதற வச்சிட்டயே!" என்று என் உறவினர் ஒருவர் கேட்க எனக்கும் அப்போதுதான் விடை கிடைத்தது.

டெய்ல் பீஸ்: 10.10.1910-இல் என் அப்பா பிறந்தார். அவரது நினைவாக இப் பதிவு.
இந்த சம்பவத்தை நான் என் எழுத்தாள நண்பியிடம் விவரிக்கப் போக அவர் அதை ஒரு அழகிய சிறுகதையாக எழுதி அது பிரபல வாரப் பத்திரிகையில் பிரசுரமானது.
I HAD THE WHOLE WORLD IN MY HANDS BUT I GAVE IT AWAY


15 comments:

 1. தங்கள் அனுபவம் மிக உருக்கமாக உள்ளது. எதிர்பாராத அதிர்ச்சியில் மனம் ஒரு உன்மத்த நிலைக்குச் சென்றுவிடும். அதற்காகத்தான் அழு, அழு என்று வற்புறுத்துவார்கள். அந்த அழுகையைத் தூண்டுவதற்குத்தான் கூலிக்குப் பெண்களை ஏற்பாடு செய்வார்கள். இது உளவியல்ரீதியான ஒரு ட்ரீட்மெண்ட்!

  ReplyDelete
 2. எனக்கு நல்ல நினைவு இருக்கிறது. தாத்தா இறந்த போது எனக்கு சுமார் 11 வயது. அம்மாவும் அப்பாவும் நெய்வேலியில் இல்லை. ஏதோ ஒரு கல்யாணத்திற்கு சென்று இருந்தார்கள். 19-Block போஸ்ட் ஆபீஸில் இருந்து ஒரு போஸ்ட்மேன் வீட்டிற்கு வந்து தொலை பேசி வந்துள்ளதாக என்னையும் மல்லிகாவையும் அழைத்தனர். நாங்களும் சைக்கிளில் சென்று பத்து நிமிடங்கள் காத்திருந்தோம். மீண்டும் தொலைபேசி மணி ஒலிக்க போஸ்ட் மாஸ்டர் எங்களை பேச அழைத்தார். மல்லிகா பேசி விட்டு என்னிடம் தாத்தா இறந்த செய்தியை தெரிவிக்க அழுது கொண்டே வீட்டிற்கு வந்தோம். பிறகு நான், மல்லிகா, ராஜி மற்றும் அத்தை பாட்டி மூவரும் பஸ் பிடித்து விழுப்புரம் வந்து சேர்ந்தோம். எனக்கு தெரிந்து தொலைபேசியை பார்த்தது அது தான் முதல் முறை. மீண்டும் 1982-ஆம் வருடத்திற்கு சென்றது போன்ற ஒரு உணர்வு.
  பின்னோக்கி அழைத்து சென்றதற்கு நன்றி. நல்ல பதிவு.

  என்றென்றும் அன்புடன்

  Venkat
  New Delhi

  ReplyDelete
 3. கண்ணீர்! வரும்போதும் சங்கடம்,வராத போதும் சங்கடம்தானோ? உருக்கமான பதிவு. -- கே.பி.ஜனா

  ReplyDelete
 4. படிக்கும்போது அப்புறம் என்ன என்கிற படபடப்பு.. படித்து முடித்ததுமோ இனம் புரியாத சங்கடமும் தவிப்பும்.. ரிஷபன்

  ReplyDelete
 5. அன்பு ரேகா , கதை மிகவும் அருமை. எனக்கும் அனுபவம் உண்டு .
  அழாதவர ரம்போ கேவலமா பார்ப்பாங்க , உண்மை யாருக்கும் தெரியாது .
  - புதுவை சந்திரஹரி

  ReplyDelete
 6. "Eranthum Nammil Vazhndhukondum, Nammai Vazhavaithukkondum Irukkum Oru Uthamaraippatri Avartham "Pirappu Nootrandu Samayam" (10-10-2009 To 10-10-2010) Ninaivu Koornthatharku En Nandriyai Therivithukkolgiren"

  Natarajan.V.K., Canada.

  ReplyDelete
 7. இதழ்கள் ஊமையானால் கண்ணீர் மொழியாகும் என்பார்கள். கண்ணீர் ஊமையானால்? யாரும் தப்ப இயலாத மனம் கனக்கும் தருணங்கள் வாழ்க்கையில் உள்ளதை நினைவு படுத்துகிறது இப்பதிவு.

  ReplyDelete
 8. @@ ரவிபிரகாஷ்
  மேலதிக தகவல்களுக்கு நன்றிங்க சார்.
  @@வெங்கடராமன்
  நன்றி வெங்கட்.
  @@K.B.ஜனார்த்தனன்
  நன்றிங்க சார்.
  @@ரிஷபன்
  நன்றிங்க சார்.
  @@புதுவை
  நன்றிங்க சார்
  @@V.K.நடராஜன்
  நன்றி அண்ணா
  .@@SRK
  நன்றிங்க சார்

  ரேகா ராகவன்

  ReplyDelete
 9. உருக்கமான இடுகை
  நூறாவது ஆண்டு பிறந்த நாள் இன்று

  ReplyDelete
 10. நினைவுகளே என்றும் அழியாதவையாய்!

  ReplyDelete
 11. @@கதிர் - ஈரோடு
  @@பழமைபேசி
  வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிங்க.

  ரேகா ராகவன்.

  ReplyDelete
 12. நானும் அனுபவித்த வலி இது. நெகிழ்வான இடுகை.

  ReplyDelete
 13. ரேகா கதை அதுவும் உண்மைக்கதை ரொம்பவே உருக்கமாக இருந்தது.  போன் இப்ப தொட்டதிற்கெல்லாம் போன் அப்போ எஙகாவது ஒரு இடத்தில் போய் தான் பேசனும்.,

  ReplyDelete
 14. @@ வானம்பாடிகள்

  வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க.

  ரேகா ராகவன்

  ReplyDelete
 15. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க ஜலீலா மேடம்.

  ரேகா ராகவன்.

  ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "