என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Friday, November 25, 2011

ஜாதகம்

வாசலில் நிழலாடியது. எட்டிப் பார்த்தார் ஏகாம்பரம்.

"இங்கே ஏகாம்பரம்னு?" வந்தவர் இழுத்தார்.

'நான்தான் அது! நீங்க யாருன்னு...?"

"நான் காஞ்சிபுரத்திலிருந்து வர்றேன், ராமமூர்த்தி..."

"வாங்க! என்ன விஷயம்? நான் என்ன செய்யணும்?"

''என் பெண்ணுக்கு  ஒரு வரன் விஷயமா விசாரிச்சிட்டுப்  போகலாம்னு வந்தேன். உங்க நண்பரின் பையன் வேணுவுக்கு  என் பெண்ணைக் கொடுக்கலாம்னு..."

"ஓஹோ? அந்த ஹிப்பித் தலையனுக்கா?"

"பையனை நான் இன்னும் பார்க்கலே . ஜாதகம் பொருந்தியிருக்குங்கற  விஷயத்தைச் சொல்லப்போனேன். அப்போ உங்களைப் பற்றியும் உங்களுக்கு திருமண வயசில் ஒரு பையன் இருக்கிறதையும் சொன்னார்."

"வேறே என்ன சொன்னார்?"

"உங்க பையன் சிகரெட் பிடிப்பானாமே! அவர் பையனுக்கு அதெல்லாம் பழக்கமில்லையாம்."

"அவர் பையன் குடிப்பானே! ஏன் மறைச்சார்?''

"தெரியாது! உங்க பையன் நன்றாக சீட்டு ஆடுவான்கிறதைச் சொன்னார். அவர் பையனுக்கு அதெல்லாம் தெரியாதாம்."

"அவன் பையன் ரேசுக்குப் போயி ஆடுறதைச் சொன்னாரா? இன்னும் என்னென்ன சொன்னார்?"

"ஆபீசில் நிறைய லோன் போட்டிருக்கானாம் உங்க பையன். பிடிப்பெல்லாம் போக கையில் வரும் சம்பளம் ரொம்பக் கம்மியாம்..."

"என் பையனாவது பரவாயில்லை. அவர் பையன் ஈட்டிக்காரனிடம் கடன் வாங்கி மாதா மாதம் வட்டி கட்டவே அவரால் முடியவில்லை. இவர்  என் பையனை குறை சொல்ல வந்துட்டானாக்கும்? வேறே ஒண்ணும் சொல்லலியா?"

"நீங்க உங்க பையனுக்கு வரதட்சணை,சீர் செனத்தின்னு  நிறைய கேட்பீங்களாம்"

"அவரோட பெரிய மருமகள் நிறைய சீர் கொண்டு வரலைன்னுட்டு, அடிக்கடி பிறந்த வீட்டிற்கு துரத்தி சீர் வாங்கிட்டு  வரச் சொல்லி துன்புறுத்தினாரே! இதைச் சொல்ல அவனுக்கு மூஞ்சி ஏது?" வெடித்தார் ஏகாம்பரம்.

"ரொம்ப தேங்க்ஸ்! கல்யாண தரகர் மூலம் கிடைத்த உங்க பையனின் ஜாதகமும் உங்கள் நண்பரின் பையன் ஜாதகமும் என் பெண்ணோட ஜாதகத்தோடு பொருந்தியிருக்கவே  உங்க பையனைப் பற்றி அங்கே இங்கே கேட்டதை  உண்மையான்னு உங்க வாயாலயே தெரிஞ்சிக்கலாமேன்னுதான் இப்படி ஒரு ஏற்பாடோடு வந்தேன். உங்க நண்பரை நான் பார்த்தது கூடக் கிடையாது. இரண்டு பையன்களோட ஜாதகத்தையும் பிட்டுப்பிட்டு வச்சுட்டீங்க. அப்போ நான் வேற இடம் பார்த்துக்கறேன்," என்றவாறே கிளம்பினார் ராமமூர்த்தி.

சிலையானார் ஏகாம்பரம்.  

( "சுமங்கலி" இதழில் வெளியான என் சிறுகதை )

Monday, November 7, 2011

அவர்கள் (ஒரு பக்கக் கதை)

குறிப்பு: கதையின் மேல் கிளிக் செய்து படிக்கவும் 


 (குங்குமம் இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

Friday, November 4, 2011

போதிக் கண்"வாசனை ஊதுவத்தி, நறு மண சாம்பிராணி வாங்கிக்குங்க சார்."

சம்பள நாள் அன்று பார்வை இழந்தவன் ஒருவன் அலுவலகத்தில் நுழைந்து விற்றுக் கொண்டிருந்தான்.

"ஏம்பா, யார் அவனை உள்ளே விட்டது?" கத்தினேன் நான்.

"ஹெட்கிளார்க்   சார்! இரண்டு கண்ணும் தெரியாதவன் அவன். பிச்சை எடுக்காம ஏதோ வியாபாரம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறான். கண்டுக்காம போங்க சார்" என்று டைபிஸ்ட் ஏகாம்பரம் கூறினான்.

எம்.டி, இன்ஸ் பெக்ஷன். எல்லோரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

"சார், உங்களை அந்த ஒர்க்ஸ் பைலை எடுத்துக்கொண்டு வரச் சொன்னார் எம்.டி." ஆபீஸ் பையன் வந்து சொல்லவும் மயக்கம் வராத குறைதான் எனக்கு.  என்ன கேட்கப் போகிறாரோ?"

"என்ன மிஸ்டர் இது? முக்கிய பைலில் இங்க்கை கொட்டி வச்சிருக்கீங்க? இதுதான் நீங்க செய்யற வேலையின் லட்சணமா?'

"சார்...அவசரத்தில் கை தவறி...கொட்டி... சாரி சார்...இனிமே..." வாய் குழறியது எனக்கு.

"லுக் மிஸ்டர், அவசரத்திலும் ஒரு நிதானம் இருக்கணும். ரயில்ல,பஸ்ல லாட்டரி டிக்கட்,ஊதுவத்தி, பிளாஸ்டிக் கவர்ன்னு விக்கற பார்வை இழந்தவர்களிடம் ரூபா நோட்டை நீட்டினா அதை இரண்டா மடிச்சு உள்ளங்கையில் வச்சு சைஸ் பார்த்து எவ்வளவு ரூபான்னு தீர்மானிச்சு மீதி சில்லறையை சரியா எண்ணிக் கொடுத்து வியாபாரம் பண்றதை  பார்த்திருக்கீங்களா? பார்வை இல்லாமலிருந்தும் நிதானமா நடந்துக்கற அவங்க உசத்தியா? இரண்டு கண்கள் இருந்தும் நிதானமில்லாம நடந்துக்கற நீங்க உசத்தியான்னு நல்லா யோசிச்சுப் பாருங்க" எம்.டி.கூறவும்,

போன மாதம் ஊதுவத்தி, விற்க வந்த அந்த பார்வை இழந்த இளைஞன் முகம் நினைவுக்கு வர, "இனிமே நிதானமா நடந்துக்கறேன் சார்" என்றேன் இருவருக்குமாகச் சேர்த்து. 

("குங்குமம்" 10.12.1999 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)
Wednesday, November 2, 2011

ஒரு கொலை;ஒரு சிலை! (படக் கதை)

(குறிப்பு: படத்தின் மேல் கிளிக் செய்து படிக்கவும்)(குங்குமத்தில் வெளியானது)