என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Wednesday, November 25, 2009

பாசிடிவ்

மெடிகல் ரெப் வேலைக்கான இண்டர்வியூ நடந்து கொண்டிருந்தது.

கடைகளில் கணக்கெழுதிச் சம்பாதிக்கும் அப்பா, நோயாளி அம்மா, கல்யாணத்துக்காக காத்திருக்கும் தங்கை என்று ஒவ்வொருவராய் நினைவில் வந்து போக... தன்னுடைய முறைக்காக காத்திருந்தான் குமார்.

இண்டர்வியூ முடிந்து வெளியே வந்தவர்கள் ' சம்பந்தமில்லாம கேள்விகேட்கிறாங்கப்பா ' என்று முணுமுணுத்தார்கள்.

ஜி.எம்.கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் குமார் உடனுக்குடன் பதிலைக் கூற... அவர் அவனிடம்...

"மிஸ்டர் குமார்! இண்டர்வியூவுக்கு வந்திருந்த எல்லோரும் சர்ட்டிபிகேட் மட்டும்தான் கொண்டு வந்திருந்தாங்க. நீங்க மட்டும்தான் எப்படியும் இந்த வேலை கிடைச்சிடும்கற தன்னம்பிக்கையில் மத்தியான சாப்பாட்டைக் கூட கையோடு கொண்டு வந்திருக்கீங்க! வெரி பாசிடிவ். இந்த மாதிரி தன்னம்பிக்கை உள்ளவங்களாலதான் எங்க கம்பெனி தயாரிக்கும் மருந்துகளை டாக்டர்களிடம் பேசி மார்க்கெட்டிங் செய்ய முடியும் ".

( 3.12.2008 குமுதம் இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை.)

நீ ஆசைப்படுவதைக் கடவுள் உனக்குத் தராமல் இருக்கலாம். ஆனால், உனக்கு எது நல்லதோ அதை அவர் நிச்சயம் தருவார்

Sunday, November 8, 2009

'முடிந்த பொழுது....'


மிச்சம்

வீட்டை பாகம் போட்டு
பிரித்துக் கொடுத்தவருக்கு
கடைசியில் கிடைத்தது
வீட்டுத் திண்ணையில் வாசம்.

<><><><><><><><><><><><><><><><><><><><>

நீக்கமற

கோவிலில் பார்த்தேன்
கடையில் பார்த்தேன்
வீட்டினுள் பார்த்தேன்
சாம்பிராணி புகை.
<><><><><><><><><><><><><><><><><><><><>

'முடிந்த பொழுது....'

ப்பா சொன்னார்.
அம்மா சொன்னாள்.
அக்கா தங்கச்சிகளும்:
' இப்போவாச்சும்
பண்ணிக்கோயேன்! '
நான் சொன்னேன்:
எல்லார் கல்யாணத்தையும்
பண்ணி வச்ச எனக்கு
நானும் பண்ணிண்ட மாதிரி
ஒரு திருப்தி.
இப்படியே இருந்துடறேனே
இனியுள்ள நாட்களும்!

--ரேகா ராகவன்.

நமது காலுக்கடியில் பாறை எது? மணல் எது என்பதை உணர்த்துபவை பிரச்சினைகள்.

<><><><><><><><><><><><><><><><><><><><><>

Saturday, November 7, 2009

தன்னிரக்கம்


னது இளமைப் பருவம் வெறும் கவலைகளால் நிறைந்த ஒன்று!
எனது மகிழ்ச்சியான விருந்தில் துயரங்களே பதார்த்தங்கள்!
எனது வயலில் விளைந்த பயிர்கள் களைகளே!
எனக்கு நல்லவை என்று எண்ணிக்கொள்ள முடிந்ததெல்லாம்
வெற்று நம்பிக்கைகளையே!
நாள் நகர்ந்துவிட்டது; ஆயினும் சூரியனை நான் காணவில்லை
நான் வாழ்கிறேன்; ஆனால் என் வாழ்க்கை முடிந்துவிட்டது.
னது கதை கேட்கப்பட்டது ; ஆயினும் சொல்லப்படவில்லை
என்னில் கனிந்தவை உதிர்ந்துவிட்டன; ஆயினும் எனது
இலைகள் பசுமையாகவே இருக்கின்றன.
எனது இளமை அழிந்துவிட்டது; ஆயினும் வயோதிகனாகிவிடவில்லை.
நான் உலகத்தைப் பார்த்துவிட்டேன்; ஆயினும் உலகத்தால்
நான் பார்க்கப்படவில்லை;
பந்தத்தின் இழைகள் அறுபட்டன; ஆயினும் பின்னப்படவில்லை
நான் வாழ்கிறேன்; ஆனால் என் வாழ்க்கை முடிந்துவிட்டது.
ன் மரணத்தைத் தேடினேன்; அது என் கருப்பையிலேயே இருந்தது;
வாழ்க்கையை நோக்கி நின்றேன்; அது வெறும் நிழலாக இருக்கக்
கண்டேன்.
மண்ணில் என் கால் பதிந்தது. என் கல்லறை இருப்பது
தெரிந்தது.
என் கோப்பை நிறைந்திருக்கிறது; இதோ அதுவும்
காலியாகிவிட்டது
நான் வாழ்கிறேன்; ஆனால் என் வாழ்க்கை முடிந்துவிட்டது.

(1972--ம் வருட கண்ணதாசன் புத்தகத்தில் வெளியான கவிதை. ரசித்த கவிதை என்பதால் டயரியில் குறித்து வைத்தேன்-- ரசித்த கவிதை முற்றும் .)
உலகிலேயே துயரம் நிறைந்த மனிதன் எதிலும் தயக்கம் காட்டுபவன்தான்

Monday, November 2, 2009

புகை


அடுப்பை ஊதி விட்டாள் மேகலை. புகை இன்னும் அதிகமானதே தவிர விறகு எரிவேனா
என்று அடம் பிடித்தது. விறகில் பொதிந்திருந்த ஈரம் புகையை மேலும் மேலும் அடர்த்தியாக்கியது.

"ஐந்து ரூபா அதிகமா செலவழிக்க முடிஞ்சிருஞ்சா நல்ல விறகா வாங்கியாந்திருக்கலாம், நல்லா எரிஞ்சிருக்கும்" -- தன் நிலையை நொந்து கொண்டே விறகை சரி செய்தாள்.

ரோடு போடற கூலி வேலைக்குப் போய், கமிஷனை எடுத்துக் கொண்டு மேஸ்திரி தரும் ரூபாயில் அரிசி பருப்புன்னு சகலமும் அவள் வாங்கியாக வேண்டும்.

அவள் புருஷன் மாரியோ ஒரு நாள் வேலைக்குப் போனால் பத்து நாள் போகமாட்டான்.

களைத்து வீடு திரும்பும் மேகலையை வழியிலேயே மடக்கி கூலிப் பணத்தில் பாதியை
பிடுங்கிக் கொண்டு போய் குடித்து விட்டு வருவான். வீட்டிலேயே முடங்கிக் கிடப்பான்.


அடுப்பு இன்னும் அதிகமாக புகையை கக்க, ஊதி ஊதி அவளின் கண்கள் இரண்டும் சிவந்து
மூச்சு முட்ட ஆரம்பித்தது.

இன்னமும் மிச்சம் மீதியிருந்த போதையுடன் குடிசையினுள் படுத்திருந்த மாரி கண்களை கசக்கிக் கொண்டே எரிச்சலுடன் எழுந்தான். நேராக அவளிடம் போய் தலைமுடியை பிடித்து இழுத்து கன்னத்தில் பளாரென ஒரு அறை விட்டான்.

"சனியனே! என்னடி சமையல் பண்றே? அடுப்பை சரியா எரிய வைக்க துப்பில்லை, வீடு பூரா ஒரே புகை, தூ...!"

அதிர்ச்சியில் உறைந்து போய் மேகலை உட்கார்ந்திருக்க... பாவீ நான் உழைச்ச காசையும் நீ பிடுங்கிக்கிறதால தானே இந்த ஈர விறகைக் கட்டிட்டு மாயறேன். நீயே என்னை அடிக்கிறியே! மனசில் வைதாள்.

குடிசைக்கு வெளியே போய் உட்கார்ந்தான் மாரி. பீடி ஒன்றை பற்ற வைத்து புகையை குப்பென்று இழுத்து சாவகாசமாய் வெளியே விட்டான்.

திண்ணையில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்த அவனின் மகள் மாலா பீடி புகையின் நெடி தாளாமல் இரும்ப ஆரம்பித்தாள்.

" சனியன் பிடிச்ச பீடி புகை நாத்தம். சுவாசிக்கவும் முடியலே, படிக்கவும் முடியலே " -- சொல்லிவிட்டு எழுந்து குடிசைக்குள் போனாள்.

பளாரென்று அறைந்தது மாதிரி இருந்தது மாரிக்கு.

(சர்வேசன் 500 – நச்னு ஒரு கதை 2009 – போட்டிக்காக எழுதிய கதை)

பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் துன்பங்களே ஆசிரியர்கள்

சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி