என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Saturday, December 31, 2011

'வருகைக்கு நன்றி!'
பிறக்கப் போவதை வரவேற்க 
காத்திருக்கிறார்கள் 
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தோடு...

போகப் போகும் உன்னை
அம்போவென விட்டுவிட்டு!

நல்லதும் செய்திருக்கிறாய் நீ 
அல்லதும்  செய்திருக்கிறாய்...

பிறக்கப் போகும் அது
என்ன செய்யப் போகிறது?
அறியக் காத்திருக்க வேண்டும்! 

ஆரம்பத்தில் உன்னை 
ஆஹாஓஹோவென கொண்டாடிய 
அதே உலகம் தான் முடிவில் 
கண்டு கொள்ளாமல் போகிறது!

இதுதான் உனக்கு விதிக்கப்பட்டது
ஏன்,  இன்று பிறப்பதற்கும் அதுவே 
என்றுணர்ந்து கொள்.

இனிமேல் பிறவா வரம் கிடைத்த 
இரண்டாயிரத்திப் பதினொன்றே 
நீ பாக்யவான்!
உனக்கு என் வந்தனங்கள்!


0o0Thursday, December 29, 2011

தனக்குத் தானே...
'தானேப் புயல் தானே வருமா
இடி மின்னல்களுக்குப்
பின்தானே வருமா?'
என் கேள்விக்கு
'சாமிக்குத் தான் தெரியும்
நான் வெறும் ஆசாமி
எனக்கென்னத் தெரியும்?' என
வானத்தைக் காட்டி
வறுமையிலும்
வார்த்தை விளையாட்டு ஆடும்
அந்த முதியவரிடம்...

"வீட்டுக் கூரையைக் கூட
பிய்த்துக்கொண்டு  போகுமாமே, 
தெரியுமா அதுவாவது பெரியவரே?"
என் அடுத்த கேள்விக்கு
'கூரை  இருந்தால்தானே
பிய்த்துக்கொண்டு போவதற்கு?
வானமே கூரை எங்களுக்கு
பிளாட்பாரமே பஞ்சு மெத்தை
இருக்கிற கொஞ்ச காலத்தை
இப்படியே கழித்துப் போய்விட்டால்
எனக்கும் நல்லது,
பிறருக்கும் ஏனெனில்
அவர்களின் இருப்பிடத்தில்
பங்கு கேட்கமாட்டேன் பாரு!'!
கூறிய பொக்கைவாய்க் 
கிழவரிடம் இன்னும்
நிறைய இருக்கும்
நாம்  கற்றுக்கொள்ள!


0o0

Wednesday, December 28, 2011

மைனர்


"தம்பி ஊருக்குப் புதுசா... எந்த ஊரு...?"  என்று கேட்டார் மைனர்.

"வாங்க அண்ணே! நமக்குச் சொந்த ஊரு திருச்சி பக்கமுங்க.  போன புதன்கிழமைதான் 

கடையைத் திறந்தேன். ஒரு தடவையாவது நீங்க அவசியம் நம்ம கடைக்கு விஜயம்

செய்யனும்..." என்றான் ஆறுமுகம்.

"வர்றேன்! வர்றேன்! அதைச் சொல்லிட்டுப் போகத்தானே வந்திருக்கேன். நாளைக்குக் காலைல சரியா ஒன்பது மணிக்கு வந்துடறேன். ஸீட்டைக் காலியா வச்சிரு. எனக்கு முடி வெட்டிட்டு அப்புறம் அடுத்தவனுக்குச் செய். என்ன, நான் சொல்றது புரியுதா...?" என்றார் மைனர்.

"நாளைக்கா...? நாளை செவ்வாய்க் கிழமை நம்ம கடைக்கு லீவு அண்ணே! புதன் கிழமை வாங்க..." என்றான் ஆறுமுகம்.

"யார்ரா இவன், சுத்த புரியாதவனா இருக்கானே! டேய் லோட்டா...! நம்மளைப் பத்தி இவனுக்குக் கொஞ்சம் எடுத்துச் சொல்லுடா!" - என்றவாறே புறப்பட்டுப் போனார் மைனர்.

"தம்பி... நம்ம ஊரு மைனர் சொன்னா சொன்னதுதான்... அவரை எதிர்த்துக்கிட்டு யாரும் இந்த ஊர்ல வாழ்ந்ததுமில்லே... வாழப்போறதும் இல்லே! மரியாதையா நாளைக்குக் காலைலே ஒன்பது மணிக்கெல்லாம் கடையைத் திறந்து எல்லாத்தையும் ரெடி பண்ணி வெச்சுரு... அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்... முடி வெட்டிட்டு தப்பித் தவறி மைனர் கிட்டே பணம் கிணம் கேட்டுடாதே... அப்புறம் உன் கடையே காலியாயிடும்!" என்றான்  லோட்டா என்று மைனரால் அழைக்கப்பட்ட பரமசிவம்.

றுநாள்...

செவ்வாய்க்கிழமைதான் என்றாலும் ஆறுமுகத்தின் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. உள்ளே உட்கார இடமில்லாமல் நிறைய பேர் வெளியே நின்றிருந்தார்கள்.

'இன்று எல்லோருக்கும் இலவசமாக முடி வெட்டப்படும்!
என்று எழுதி ஒரு பெரிய போர்டு கடைக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டிருந்தது!

தனக்கு மட்டுமே ஸ்பெஷல் மரியாதை கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்த மைனருக்கு

ஆறுமுகம் வைத்திருந்த போர்டும், கடையில் நின்றிருந்த கூட்டமும் அதிர்ச்சியைத் 

தந்தன!

"டேய்... லோட்டா...!" என்று ஆத்திரத்தோடு கத்தினார்.

"சொல்லுங்க அண்ணே..." என்று மைனர் எதிரில் பவ்யமாக நின்றான் லோட்டா.

"இப்படி எல்லாரும் பயந்து  பயந்து எனக்கு ஜால்ரா அடிச்சே என்னை எதுக்கும் உதவாத பயலா ஆக்கிட்டீங்கடா... நேத்திக்கு வந்தவன் என் முகத்துல கரியைப் பூசிட்டாண்டா..." என்று சொன்ன மைனரின் குரலில் வருத்தம்.

"யாரு அண்ணே அவன்...?"

"நம்ம ஊர்ல புதுசா சலூன் திறந்திருக்கானே ஆறுமுகம்... அவன்தான்... அவன் எனக்கு நல்லா பாடம் கற்பிச்சுட்டான்... இந்த ஊர்லே எனக்கு இனிமே மரியாதை இல்லாம செய்துட்டான்... நான் இந்த ஊரைவிட்டே போயிடப் போறேன்... போற இடத்துலே புது மனுஷனா வாழப் போறேன்..."

- சொன்ன மைனரை வியப்போடு பார்த்தான் லோட்டா என்ற பரமசிவம்.

( ஆனந்தவிகடனில் வெளியான என் முதல் கதை - 30.10.88 இதழ் ) 


Thursday, December 22, 2011

கை (ஒரு பக்கக் கதை)ஏகப்பட்ட டென்ஷனில் இருந்தார் புரோக்கர் கண்ணுசாமி.

இன்னும் சிறிது நேரத்தில் பெற்றோர்களுடன் பெண் பார்க்க வரப் போகிறான் முரளி.

இந்தத் தடவையாவது முரளியின் அம்மாவுக்குப் பெண் பிடிக்க  வேண்டுமே என்று கவலைப்பட ஆரம்பித்தார்.

அதற்குக் காரணம் இருந்தது.

இப்போது முரளி பார்க்கப் போவது நாலாவது பெண்ணை.  ஏற்கனவே பார்த்துவிட்டு வந்த மூன்று பெண்களுக்கும் கை நீளம் என்று சொல்லி அவனின் அம்மா நிராகரித்துவிட்டாள்.

அம்மா பார்த்து சரி என்றால்தான் மேலே பேசுவேன் என்று அவனின் அப்பாவும் தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

வெறுத்துப் போய்விட்டார் கண்ணுசாமி.

'எதை வைத்து, பார்த்த பெண்களுக்கெல்லாம் கை நீளம் என்று முரளியின் அம்மா திருட்டுப் பட்டம் சூட்டுகிறாள்?'

இந்தத் தடவை பெண் பார்த்துவிட்டு வந்ததும் எப்படியும் இதைப் பற்றிக் கேட்டுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அவர்.  

ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

முரளியின் விருப்பத்தைக் கேட்டுவிட்டு, "என் மகன் வடபழனி கோயில்ல பூக்கடை வச்சிருக்கான். அவன் அங்கே, இங்கே போய்வரும் போதெல்லாம் அவனுக்குப் பொண்டாட்டியா வர்றவதான் கடையை கவனிச்சுக்கணும். பூ வியாபாரத்துல நீளமான கையால முழம் போட்டு வித்தா எங்களுக்கு நஷ்டம். உங்க பெண்ணுக்கு கை சின்னது. அதான் எனக்குப் பிடிச்சிருக்கு" என்றாள் முரளியின் அம்மா.

"அடடே...இதுதானா விஷயம்!" என்று தலையைச் சொரிந்து கொண்டார் கண்ணுசாமி.  

("குங்குமம் அக்.28 - 3 நவ. '94 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   

Friday, November 25, 2011

ஜாதகம்

வாசலில் நிழலாடியது. எட்டிப் பார்த்தார் ஏகாம்பரம்.

"இங்கே ஏகாம்பரம்னு?" வந்தவர் இழுத்தார்.

'நான்தான் அது! நீங்க யாருன்னு...?"

"நான் காஞ்சிபுரத்திலிருந்து வர்றேன், ராமமூர்த்தி..."

"வாங்க! என்ன விஷயம்? நான் என்ன செய்யணும்?"

''என் பெண்ணுக்கு  ஒரு வரன் விஷயமா விசாரிச்சிட்டுப்  போகலாம்னு வந்தேன். உங்க நண்பரின் பையன் வேணுவுக்கு  என் பெண்ணைக் கொடுக்கலாம்னு..."

"ஓஹோ? அந்த ஹிப்பித் தலையனுக்கா?"

"பையனை நான் இன்னும் பார்க்கலே . ஜாதகம் பொருந்தியிருக்குங்கற  விஷயத்தைச் சொல்லப்போனேன். அப்போ உங்களைப் பற்றியும் உங்களுக்கு திருமண வயசில் ஒரு பையன் இருக்கிறதையும் சொன்னார்."

"வேறே என்ன சொன்னார்?"

"உங்க பையன் சிகரெட் பிடிப்பானாமே! அவர் பையனுக்கு அதெல்லாம் பழக்கமில்லையாம்."

"அவர் பையன் குடிப்பானே! ஏன் மறைச்சார்?''

"தெரியாது! உங்க பையன் நன்றாக சீட்டு ஆடுவான்கிறதைச் சொன்னார். அவர் பையனுக்கு அதெல்லாம் தெரியாதாம்."

"அவன் பையன் ரேசுக்குப் போயி ஆடுறதைச் சொன்னாரா? இன்னும் என்னென்ன சொன்னார்?"

"ஆபீசில் நிறைய லோன் போட்டிருக்கானாம் உங்க பையன். பிடிப்பெல்லாம் போக கையில் வரும் சம்பளம் ரொம்பக் கம்மியாம்..."

"என் பையனாவது பரவாயில்லை. அவர் பையன் ஈட்டிக்காரனிடம் கடன் வாங்கி மாதா மாதம் வட்டி கட்டவே அவரால் முடியவில்லை. இவர்  என் பையனை குறை சொல்ல வந்துட்டானாக்கும்? வேறே ஒண்ணும் சொல்லலியா?"

"நீங்க உங்க பையனுக்கு வரதட்சணை,சீர் செனத்தின்னு  நிறைய கேட்பீங்களாம்"

"அவரோட பெரிய மருமகள் நிறைய சீர் கொண்டு வரலைன்னுட்டு, அடிக்கடி பிறந்த வீட்டிற்கு துரத்தி சீர் வாங்கிட்டு  வரச் சொல்லி துன்புறுத்தினாரே! இதைச் சொல்ல அவனுக்கு மூஞ்சி ஏது?" வெடித்தார் ஏகாம்பரம்.

"ரொம்ப தேங்க்ஸ்! கல்யாண தரகர் மூலம் கிடைத்த உங்க பையனின் ஜாதகமும் உங்கள் நண்பரின் பையன் ஜாதகமும் என் பெண்ணோட ஜாதகத்தோடு பொருந்தியிருக்கவே  உங்க பையனைப் பற்றி அங்கே இங்கே கேட்டதை  உண்மையான்னு உங்க வாயாலயே தெரிஞ்சிக்கலாமேன்னுதான் இப்படி ஒரு ஏற்பாடோடு வந்தேன். உங்க நண்பரை நான் பார்த்தது கூடக் கிடையாது. இரண்டு பையன்களோட ஜாதகத்தையும் பிட்டுப்பிட்டு வச்சுட்டீங்க. அப்போ நான் வேற இடம் பார்த்துக்கறேன்," என்றவாறே கிளம்பினார் ராமமூர்த்தி.

சிலையானார் ஏகாம்பரம்.  

( "சுமங்கலி" இதழில் வெளியான என் சிறுகதை )

Monday, November 7, 2011

அவர்கள் (ஒரு பக்கக் கதை)

குறிப்பு: கதையின் மேல் கிளிக் செய்து படிக்கவும் 


 (குங்குமம் இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

Friday, November 4, 2011

போதிக் கண்"வாசனை ஊதுவத்தி, நறு மண சாம்பிராணி வாங்கிக்குங்க சார்."

சம்பள நாள் அன்று பார்வை இழந்தவன் ஒருவன் அலுவலகத்தில் நுழைந்து விற்றுக் கொண்டிருந்தான்.

"ஏம்பா, யார் அவனை உள்ளே விட்டது?" கத்தினேன் நான்.

"ஹெட்கிளார்க்   சார்! இரண்டு கண்ணும் தெரியாதவன் அவன். பிச்சை எடுக்காம ஏதோ வியாபாரம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறான். கண்டுக்காம போங்க சார்" என்று டைபிஸ்ட் ஏகாம்பரம் கூறினான்.

எம்.டி, இன்ஸ் பெக்ஷன். எல்லோரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

"சார், உங்களை அந்த ஒர்க்ஸ் பைலை எடுத்துக்கொண்டு வரச் சொன்னார் எம்.டி." ஆபீஸ் பையன் வந்து சொல்லவும் மயக்கம் வராத குறைதான் எனக்கு.  என்ன கேட்கப் போகிறாரோ?"

"என்ன மிஸ்டர் இது? முக்கிய பைலில் இங்க்கை கொட்டி வச்சிருக்கீங்க? இதுதான் நீங்க செய்யற வேலையின் லட்சணமா?'

"சார்...அவசரத்தில் கை தவறி...கொட்டி... சாரி சார்...இனிமே..." வாய் குழறியது எனக்கு.

"லுக் மிஸ்டர், அவசரத்திலும் ஒரு நிதானம் இருக்கணும். ரயில்ல,பஸ்ல லாட்டரி டிக்கட்,ஊதுவத்தி, பிளாஸ்டிக் கவர்ன்னு விக்கற பார்வை இழந்தவர்களிடம் ரூபா நோட்டை நீட்டினா அதை இரண்டா மடிச்சு உள்ளங்கையில் வச்சு சைஸ் பார்த்து எவ்வளவு ரூபான்னு தீர்மானிச்சு மீதி சில்லறையை சரியா எண்ணிக் கொடுத்து வியாபாரம் பண்றதை  பார்த்திருக்கீங்களா? பார்வை இல்லாமலிருந்தும் நிதானமா நடந்துக்கற அவங்க உசத்தியா? இரண்டு கண்கள் இருந்தும் நிதானமில்லாம நடந்துக்கற நீங்க உசத்தியான்னு நல்லா யோசிச்சுப் பாருங்க" எம்.டி.கூறவும்,

போன மாதம் ஊதுவத்தி, விற்க வந்த அந்த பார்வை இழந்த இளைஞன் முகம் நினைவுக்கு வர, "இனிமே நிதானமா நடந்துக்கறேன் சார்" என்றேன் இருவருக்குமாகச் சேர்த்து. 

("குங்குமம்" 10.12.1999 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)
Wednesday, November 2, 2011

ஒரு கொலை;ஒரு சிலை! (படக் கதை)

(குறிப்பு: படத்தின் மேல் கிளிக் செய்து படிக்கவும்)(குங்குமத்தில் வெளியானது)

Monday, October 31, 2011

முதலீடு (ஒரு பக்கக் கதை)

குறிப்பு: படத்தின் மேல் கிளிக் செய்து படிக்கவும்
(குங்குமம் இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

Tuesday, October 25, 2011

பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுவது எப்படி?

செய்ய வேண்டியவை:
1) பட்டாசுகளை முடிந்தவரை உங்கள் கைகளுக்கு அருகில் இல்லாமல் தூரமாக வைத்து வெடிக்கவும்.
2) பட்டாசுகளை வெடிக்கும்போது பருத்தி (காட்டன்) துணிகளை மட்டுமே அணிந்திருக்கவேண்டும்.
3) பட்டாசு கொளுத்தும்போது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் அருகிலேயே வைத்துக்கொள்ளவும்.
4) பட்டாசுகளை திறந்த வெளியில் வெடிக்கவும்.
5) பட்டாசுகளை ஒவ்வொன்றாக வெடிக்கவும்.
6) வெடித்த பட்டாசுகளை ஒழுங்கான முறையில் அப்புறப்படுத்தவும்.
7) பட்டாசுகளை தனி அறையில் வைக்கவும்.
8) ராக்கெட் பட்டாசுகளை நேரான நிலையில் நிறுத்தி கொளுத்தவும் .

செய்யக்கூடாதவை :


1) பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் காயங்களுக்கு சாயங்களையோ மையையோ தடவக்கூடாது.
2) பட்டாசுகளை கொளுத்தும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணிய வேண்டாம்.
3) வெடிக்காத பட்டாசுகளை கைகளில் எடுக்காதீர்கள்'
4) அறைக்குள் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.
5) பட்டாசுகளை வெடிக்கும் போது மற்ற பட்டாசுகளை அருகில் வைக்கக்கூடாது.
6) பட்டாசுகளை டப்பாவிற்குள் வைத்து வெடிக்க வேண்டாம்.

முதலுதவி:

1) பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட காயங்களை பச்சை தண்ணீரில் நனைக்கவும்.
2) பிறகு சுத்தமான துணியால் காயத்தை மூடியபடி அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும்.
3) காயங்களில் துணி ஒட்டியிருந்தால் அதனை எடுக்க முயற்ச்சிக்காதீர்.
4) ஆராய்ச்சிகளின்படி தீக்காயங்களுக்கு சிறந்த முதலுதவி காயங்களை தண்ணீரில் துடைப்பது.

(இது ஒரு மீள் பதிவு)
Friday, September 30, 2011

உயரம்

குறிப்பு: கதையின் மேல் கிளிக் செய்து படிக்கவும். 


(தினமலர் வாரமலரில் (சேலம் பதிப்பு) இதழில் வெளியான என் சிறுகதை)

Monday, September 26, 2011

கொலை

(முன் குறிப்பு: கதையின் மேல் கிளிக் செய்து படிக்கவும்)
(26.9.2011 குங்குமம் இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

Monday, July 18, 2011

ஓலி
"பிரபல தொழிலதிபர் ஆதிமூலம் படுகொலை!" சன் நியூஸ் சேனலில் பிளாஷ் மின்னியது.

'பூஜை ரூமில் இருந்தவரை வெட்டிச் சாய்த்த கூலிப் படையின் வெறிச் செயல்! ' என்று அடுத்தடுத்து காட்டி பரபரப்பை கூட்டினார்கள்.

அடுத்த அரை மணியில் கை ரேகை நிபுணர்கள், மோப்ப நாய் என்று போலீஸ் பட்டாளமே அவர் வீட்டில் ஆஜாராகி விசாரணையை முடுக்கிவிடப்பட்டது.

உடலை ஆம்புலன்சில் அனுப்பிவிட்டு வீட்டுக்குள் நுழைந்த குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் அன்புச் செல்வன் அந்த வீட்டிலிருந்த வேலைக்காரனை விசாரித்தார்.

"அம்மாவும் குழந்தைகளும் நேத்துதான் சொந்த ஊருக்கு புறப்பட்டுப் போனாங்க. ஐயா மட்டும்தான் வீட்டில் இருக்காருன்னு தெரிஞ்சிகிட்டு பின் பக்கமா வீட்டுக்குள் நுழைஞ்சிருக்காங்க . தினமும் குளிச்சிட்டு அரை மணி நேரம் பூஜை ரூமில் இருப்பாரு.டேப்பில் பக்திப் பாடல் ஓடிக்கிட்டிருக்கும். அது முடிஞ்சதும் கற்பூரம் காட்டி சாமி கும்பிட்டுட்டுத்தான் அடுத்த வேலையை கவனிப்பாரு. அவரை இப்படி வெட்டி சாய்ச்சுட்டாங்களே ! "-- அழுதுகொண்டே கூறிய அவன் அதிர்ச்சியில் உறைந்திருந்தான் .

பூஜை அறையை ஒரு முறை தன் கண்களால் அளந்தார் அன்புச் செல்வன். முருகன் படத்தின் கீழே அர்ச்சனை செய்த பூக்கள் குவிந்திருக்க அதன் பக்கத்திலிருந்த டேப் ரெக்கார்டரை சோதித்த போது அது ஓடி முடிந்து ஆட்டோ ஸ்டாப் ஆகியிருந்தது. எடுத்து பத்திரப்படுத்தினார்.

மறுநாள் காலை ...

"கொலை செஞ்சவங்களை எப்படிய்யா நாலு மணி நேரத்தில் பிடிச்சிட்டே?" டி.எஸ்.பி. கேட்க...
டேப் ரெக்கார்டரை ஆன் பண்ணினார் இன்ஸ்பெக்டர். சூலமங்கலம் சகோதரிகளின் கணீர் குரலில் பாடல் ஆரம்பித்தது.

" இது எதுக்குய்யா இப்போ ? "

" பொறுத்திருந்து பாருங்க... "

ஓரிடத்தில் பாடல் நிற்க, பேச்சுக்குரல்கள்..

" ஏண்டா ராமசாமிக்கு போட்டியா இந்த ஊர்ல ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணா நாங்க விட்ருவோமா? வெட்றா இவனை! " யாரோ ஒருவன் கத்துகிறான்.தொடர்ந்து, "ஐயோ! ஐயோ!'' என்று ஆதிமூலத்தின் அலறல்.

பரபரப்பானார் டி.எஸ்.பி. "அட, கரெக்டா இதை யாருய்யா ரெகார்ட் பண்ணது?''

" அதை இவன் வாயாலேயே சொல்லட்டும்! " என்று பக்கத்தில் நின்ற கொலைகாரனை கை காட்டினார் அன்புச் செல்வன்.

"அவரை வெட்டறப்போ அவரு போடற சத்தம் வெளியே கேக்கக் கூடாதுன்னு நான்தான் டேப் வால்யூமை கூட்டச் சொன்னேன். இந்த நாதாரிப்பயல் பட்டுன்னு ஏதோ ஒரு பட்டனை அழுத்தித் தொலைச்சிட்டான். ஒரேயடியா சைலண்ட் ஆகிடுச்சு. என்னா ஏதுன்னு பார்க்க நேரமில்லே. வந்த வேலைய முடிச்சிட்டு எஸ்கேப் ஆகிட்டோம். இவன் அழுத்தினது ரெகார்ட் பட்டன்னு இப்பதான் தெரியுது.''

(18.7.2011 "குங்குமம்" இதழில் வெளியான என் 2 பக்கக் கதை)

Wednesday, May 25, 2011

குழந்தை உழைப்பு
"யா, உங்களைப் பார்க்க ஒரு அம்மாவும் அவங்களோட சின்ன பையனும் வந்திருக்காங்க"--அலுவலக உதவியாளர் கூற...

"உள்ளே வரச் சொல்!" என்றார் தொழிலாளர் ஆய்வாளர் சந்திரஹரி.

"ஐயா இது உங்களுக்கே நியாயமாயிருக்கா? குடிச்சே காசையெல்லாம் அழிக்கும் தகப்பனுக்குப் பிள்ளையாய் பிறந்ததைத் தவிர இந்தப் பையன் செய்த பாவம்தான் என்ன? இவன் சேட்டு கடையில் வேலை பார்த்து கொண்டு வந்த ஐநூறு ரூபாய்லதான் கஞ்சியோ கூழோ கால் வயிறு கழுவிக்கிட்டு இருக்கோம். அதுக்கும் வேட்டு வச்சிட்டீங்களேய்யா! குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வச்சிக்கக்கூடாதுன்னு நீங்க போட்ட உத்தரவுனால சேட்டு இவனை நாளையிலிருந்து வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டார். நீங்க நல்லா இருக்கணும்!" என்று புலம்பியும் வாழ்த்தியும் நின்றவளை "என்கூட வாங்க" என்று தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றார் சந்திரஹரி.

தவைத் திறந்த அந்த வயதான பெண்மணியைப் பார்த்த மாத்திரத்தில்  மின்சாரம் தாக்கியது போல் உணர்ந்தாள்  அந்த சிறுவனின் தாய். 

சந்திரஹரி தொடர்ந்தார்.  

"என்னோட அப்பாவும் ஒரு குடிகாரர், சீட்டாட்டக்காரர், ரேஸ் பத்தியம். அவரோட மரணத்துக்குப் பிறகு என்னோட அம்மா ஒரு விபத்தில் தன்னோட வலது காலை இழந்தும் தன்னம்பிக்கையை இழக்காம ஊன்றுகோலின் துணையுடன் ரெண்டு வீட்ல சமையல் செய்து போட்டு என்னைப் படிக்க வச்சு இந்த வேலையில் அமர்த்துவதற்குள் எவ்வளவோ கஷ்டப்பட்டுட்டாங்க. இப்படி நாலு வீட்ல பத்து பாத்திரம் தேய்ச்சாவது உங்க மகனைப் படிக்க வைக்கக் கூடாதா?"

 " எப்பாடு பட்டாவது இவனைப் படிக்க வச்சு காட்டறேன் சார்!". சொன்ன அந்த தாயைப் பெருமிதத்துடன் பார்த்தார் சந்திரஹரி. 

"வாசுகி" இதழில் வெளியான என் போஸ்ட் கார்டு சிறுகதை 

Tuesday, May 17, 2011

இங்கே ஒரு 356


தான் உண்டாகியிருப்பதை ஆசை ஆசையாக கணவன் குமாரிடம் சொன்னாள் சித்ரா.

"ஐயோ அதுக்குள்ளேயா? இன்னும் இரண்டு மூணு வருஷம் போகட்டுமே... பேசாம நாளைக்கே லேடி டாக்டரிடம் போய் கலைச்சிடலாம். ரெடியாயிரு" என்று கூறிவிட்டு ஆபிசுக்குப் போன கணவனைப் பார்த்தது பொசுங்கிப் போனாள்.

மாலை.  அலுவலகம் முடிந்ததும் ஆபீஸ் மேனேஜர் குழந்தையின் பிறந்த நாளுக்குப் பரிசளிக்க பொம்மைக் குழந்தை வாங்குவதற்கு கடைக்குச் சென்றான் குமார்.

கடைக்காரன் அழகான பொம்மைக் குழந்தையை எடுத்துக் காட்டி அதன் வயிற்றை விரலால் அழுத்த, அது "மம்மி...,டாடி...,ஆன்ட்டி..." என்று பேசியது. திரும்ப அழுத்த மீண்டும் அதையே திரும்பச் சொன்னது.

"இந்த பொம்மைக்கு வேறெதுவும் பேசத் தெரியாதா?''  குமார் கேட்கவும், "எப்படி சார் பேசும்? இந்த மூணு வார்த்தைகள் பேசுகிற மாதிரிதான் பொம்மையின் வயிற்றில் அமைச்சிருக்காங்க " என்றான் கடைக்காரன்.

பொட்டில் அடித்தது போலிருந்தது குமாருக்கு. ஒரு பொம்மையை மூணு வார்த்தைப் பேச வைக்க எவ்வளவு பிரயத்தனப்பட்டிருப்பார்கள்? நிமிடத்துக்கு எத்தனையோ வார்த்தைகளைப் பேசப் போகிற உயிரை அழித்து விடணும்னு  காலையில் சித்ராவிடம் கூறிவிட்டு வந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? நினைக்க நினைக்க அவன் நெஞ்சுக்குள் பந்தாக அடைத்தது. 

இரவு.  பெட்ரூமில்...

"சித்ரா நாளைக்கு நர்சிங் ஹோம் போய் செக்கப் செய்துட்டு குழந்தை நல்லா வளர டானிக் மருந்து மாத்திரை வாங்கிட்டு வந்துடுவோம்" என்று சொன்ன குமாரை கட்டியணைத்தாள்  சித்ரா.


"வாசுகி" இதழில் வெளியான என் போஸ்ட் கார்டு கதை

Sunday, April 17, 2011

கடப்பா செய்வது எப்படி?


நாகப்பட்டினத்தில் நான் பணி புரிந்த போது பெருமாள் கோயில் எதிரே உள்ள "லக்ஷ்மி கபே"-யில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். வாரம் ஒரு முறை காலையிலோ அல்லது மாலையிலோ அங்கே "கடப்பா" என்று ஒன்று போடுவார்கள். இட்லி, பூரி, தோசைக்கு தொட்டுக்கொள்ள இது ஜோராக இருக்கும். மற்ற நாட்களில் வராதவர்கள் கூட அன்று தவறாமல் ஆஜராகி விடுவார்கள். சின்ன வயசில் விழுப்புரத்தில் படித்த போது இதை ருசித்திருக்கிறேன். அதன் பின்பு இங்கேதான் சாப்பிடும் பாக்கியம் கிடைத்தது. யான் பெற்ற சுவையை நீங்களும் பெற வேண்டும் என்பதற்காக அதன் செய் முறையை கீழே தந்துள்ளேன்:-

கடப்பா

தேவையான பொருள்கள் :

உருளைக்கிழங்கு : இருநூறு கிராம்
பெரிய வெங்காயம் : முன்னூறு கிராம்
பயத்தம் பருப்பு : நூறு கிராம்
பூண்டு : எட்டு பல்
பச்சை மிளகாய் : ஆறு
தேங்காய் : அரை மூடி
பட்டை : பத்து கிராம்
லவங்கம் : பத்து கிராம்
கசகசா : இருபது கிராம்
பொட்டு கடலை : ஐம்பது கிராம்
மஞ்சள் தூள் : ஒரு டீ ஸ்பூன்
எண்ணெய் : இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
எலுமிச்சம் பழம் : அரை மூடி


செய்முறை:முதலில் பயத்தம் பருப்பையும் உருளைக் கிழங்கையும் வேகவைத்துக் கொள்ளவும்.தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு பொட்டுக் கடலை, தேங்காய்த் துருவல், 4 பல் பூண்டு, கசகசா, பச்சை மிளகாய்இவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதன் பின்பு வாணலியில் எண்ணை வைத்துக் காய்ந்ததும், 4 பல் பூண்டு போட்டு சிவக்க வறுத்து , பின் பட்டை, இலவங்கம், நறுக்கிய வெங்காயம் என்ற வரிசையில்சேர்த்து வதக்கவும்.வெங்காயம் சிவந்ததும், வேகவைத்த பயத்தம்பருப்பு, 2 கப் தண்ணீர், உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.கொதிக்க ஆரம்பித்ததும், உதிர்த்து வைத்துள்ள உருளைக் கிழங்கு, அரைத்துவைத்துள்ள மசாலாவைச் சேர்த்து மேலும் சில நிமிடங்களுக்குக் கொதிக்கவைத்துஇறக்கவும்.இறக்கிய சூட்டோடு எலுமிச்சம் பழம் 1/2 மூடி பிழிந்து, கொத்தமல்லித் தழையை அதன் மேல் தூவி விடுங்கள். கடப்பா ரெடி. செய்யுங்க , சாப்பிடுங்க ,அசத்துங்க


(இது ஒரு மீள் பதிவு)