என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Thursday, October 21, 2010

பயம்'தோட்டத்தில் ஓடும்
முயல் குட்டியைப் பிடித்து
முத்தம் கொடுக்கலாமா?'
ஆசையுடன் கேட்கும் குழந்தை.

'கூடாது, அது கடிச்சிடும்!'
பயமுறுத்தும் தாய்.


'பிள்ளையார் எறும்பின்
கிட்டே போகலாமா?'
பயத்துடன் கேட்கும் குழந்தை.

ரொம்பவேதான்
பயமுறுத்தி விட்டோமோ?
படபடப்புடன் வாரியணைத்து
முத்தமிடும் தாய்.

<><><><><><><><><><><><><>

Tuesday, October 12, 2010

இட மாற்றம் // இன்னொரு பக்கம்


1.இட மாற்றம்


எப்போதுமே

இடம் மாற்றிப்

படுத்தால் அவனுக்கு

வராத தூக்கம்

வந்தது அன்று

அவசர சிகிச்சைக்காக

மருத்துவமனையில்

சேர்த்த அரை மணியில்

நிரந்தரமாக.


<><><><><><><><><><><><><><><><>


2. இன்னொரு பக்கம்


வேட்டியின் இரு பக்கங்களையும்

மாற்றி மாற்றிக் கட்டி

அழுக்காகிய பின்

மனசுக்குள் அழுதான்.

'மூன்றாவது பக்கமும்

இருந்திருக்கக் கூடாதா,

சோப்பு வாங்க காசு

இல்லையே?


--ரேகா ராகவன்.

<><><><><><><><><><><><><><><>

Tuesday, October 5, 2010

திட்டு

"ஏங்க, இப்படி திட்டு வாங்கிட்டு அவனிடம் கம்ப்யூட்டர் கத்துக்கணும்னு உங்களுக்குத் தலையெழுத்தா என்ன?"

அரை மணிக்கு முன் நடந்ததுக்குத்தான் அப்பாவிடம் அம்மா கேட்டுக்கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது.

நடந்தது இதுதான்.

இரவுக்குள் முடித்து ஆபீஸுக்கு அனுப்ப வேண்டிய வேலையை வீட்டிலிருந்தவாறே செய்து கொண்டிருந்தேன். ரிடையர் ஆன அப்பா கதை அடிக்கிறேன் பேர்வழின்னு பக்கத்தில் உட்கார்ந்து கம்ப்யூட்டரில் அது எப்படி, இது எப்படின்னு சந்தேகம் கேட்டுத் தொந்திரவு கொடுத்தார். அவரிடம் எரிந்து விழுந்தேன்.

"அவனோட சின்ன வயசிலே அப்படி இப்படின்னு சந்தேகம் கேட்கறச்சே சலிக்காம எத்தனையோ விஷயம் சொல்லிக் கொடுத்திருக்கேன். இப்ப எனக்கு வயசாகிடுச்சுல்ல, ஞாபகசக்தி குறைஞ்சிகிட்டு வருது, விடு கமலா"ன்னு அம்மாவிடம் அப்பா சொல்லவும் இந்த வயசிலும் கத்துக்கறதில் ஆர்வத்தோடு இருக்கற அப்பாவிடம் இனி இப்படி நடந்து கொள்ளக்கூடாது என்று மனசுக்கு கட்டளையிட்டேன்.

(15.4.2009 " குமுதம் " இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை.)