என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Sunday, April 17, 2011

கடப்பா செய்வது எப்படி?


நாகப்பட்டினத்தில் நான் பணி புரிந்த போது பெருமாள் கோயில் எதிரே உள்ள "லக்ஷ்மி கபே"-யில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். வாரம் ஒரு முறை காலையிலோ அல்லது மாலையிலோ அங்கே "கடப்பா" என்று ஒன்று போடுவார்கள். இட்லி, பூரி, தோசைக்கு தொட்டுக்கொள்ள இது ஜோராக இருக்கும். மற்ற நாட்களில் வராதவர்கள் கூட அன்று தவறாமல் ஆஜராகி விடுவார்கள். சின்ன வயசில் விழுப்புரத்தில் படித்த போது இதை ருசித்திருக்கிறேன். அதன் பின்பு இங்கேதான் சாப்பிடும் பாக்கியம் கிடைத்தது. யான் பெற்ற சுவையை நீங்களும் பெற வேண்டும் என்பதற்காக அதன் செய் முறையை கீழே தந்துள்ளேன்:-

கடப்பா

தேவையான பொருள்கள் :

உருளைக்கிழங்கு : இருநூறு கிராம்
பெரிய வெங்காயம் : முன்னூறு கிராம்
பயத்தம் பருப்பு : நூறு கிராம்
பூண்டு : எட்டு பல்
பச்சை மிளகாய் : ஆறு
தேங்காய் : அரை மூடி
பட்டை : பத்து கிராம்
லவங்கம் : பத்து கிராம்
கசகசா : இருபது கிராம்
பொட்டு கடலை : ஐம்பது கிராம்
மஞ்சள் தூள் : ஒரு டீ ஸ்பூன்
எண்ணெய் : இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
எலுமிச்சம் பழம் : அரை மூடி


செய்முறை:முதலில் பயத்தம் பருப்பையும் உருளைக் கிழங்கையும் வேகவைத்துக் கொள்ளவும்.தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு பொட்டுக் கடலை, தேங்காய்த் துருவல், 4 பல் பூண்டு, கசகசா, பச்சை மிளகாய்இவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதன் பின்பு வாணலியில் எண்ணை வைத்துக் காய்ந்ததும், 4 பல் பூண்டு போட்டு சிவக்க வறுத்து , பின் பட்டை, இலவங்கம், நறுக்கிய வெங்காயம் என்ற வரிசையில்சேர்த்து வதக்கவும்.வெங்காயம் சிவந்ததும், வேகவைத்த பயத்தம்பருப்பு, 2 கப் தண்ணீர், உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.கொதிக்க ஆரம்பித்ததும், உதிர்த்து வைத்துள்ள உருளைக் கிழங்கு, அரைத்துவைத்துள்ள மசாலாவைச் சேர்த்து மேலும் சில நிமிடங்களுக்குக் கொதிக்கவைத்துஇறக்கவும்.இறக்கிய சூட்டோடு எலுமிச்சம் பழம் 1/2 மூடி பிழிந்து, கொத்தமல்லித் தழையை அதன் மேல் தூவி விடுங்கள். கடப்பா ரெடி. செய்யுங்க , சாப்பிடுங்க ,அசத்துங்க


(இது ஒரு மீள் பதிவு)