என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Friday, August 28, 2009

"பா" ... பா...பாம்பு "

1976 --ம் வருடம். கோவை மாவட்டம் பவானிசாகர் அலுவலகத்தில் தலைமை எழுத்தர் ஆக பணியாற்றிக்கொண்டிருந்தேன்.

மதிய உணவுக்காக நான் தங்கியிருந்த வீட்டிற்கு திரும்பி கை கால்களை கழுவிக்கொண்டு சாப்பாட்டுத் தட்டுடன் சமையல் அறைக்குள் நுழைந்து தட்டை வைத்துவிட்டு அருகில் இருந்த பானைக்குள்ளிருந்து தண்ணீர் எடுக்க குனிந்தேன்.

" உஷ் ... " என்றொரு சத்தம். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் தண்ணீர் எடுக்க குனிந்தேன். மீண்டும் உஷ் ...உஷ்...என்று இப்போது சத்தத்தின் தொனி அதிகமாகக் கேட்கவே உஷாராகி சத்தம் வந்த திசையில் உற்றுப் பார்த்தேன்.

அங்கே நான் கண்ட காட்சி.

தண்ணீர் பானையை சுற்றிக்கொண்டு ஒரு பெரிய பாம்பு இருந்தது.

இதற்கு முன் அலுவலக நண்பர்களுடன் இரவு ஏழு மணிக்கு நிலா வெளிச்சத்தில் அலுவலகத்தை ஒட்டிய ஒத்தையடிப் பாதையில் வரும்போது முன்னே பாம்பு கிராஸ் செய்வதை பார்த்து சிறிது நேரம் நின்றுவிட்டு அது போனதும் நடந்து வந்த அனுபவங்கள் உண்டு. வீட்டை சுற்றிலும் உள்ள காலி இடத்தில் காலை பகல் என்று பாராது மூன்று, நான்கு அடி நீள பெரிய பாம்புகள் உலாவுவதையும் பார்த்தவன்தான். ஆனால் தனிமையில் மிக நெருக்கத்தில் பாம்பை பார்த்த நான் பேச்சலர் ஆக இருந்தாலும் பேச்சு இலர் ஆகி உறைந்து நின்றிருந்தேன்.

வெளியே யாரோ என் பெயரை சொல்லி அழைப்பது கேட்கவே அறையை லேசாக சாத்திக்கொண்டு வந்து கதவை திறந்தேன்.

" என்ன சார் பேய் அறைஞ்ச மாதிரி இருக்கீங்க?" என்று கேட்டுவிட்டு உள்ளே நுழைந்த என் அலுவலக நண்பரிடம் " பா... பா...பாம்பு " என்று தட்டுத் தடுமாறி கூறினேன். " எங்கே !எங்கே! " என்று கேட்டவரிடம், அது இருந்த இடத்தைக் காட்ட உடனே அவர் தோட்டத்தில் கிடந்த ஒரு சவுக்குக் கொம்பை எடுத்து வந்து அந்த பானையின் மேல் "படார் " என்று ஒரு போடு போட்டதுதான் தாமதம்.

அடுத்த விநாடி, உடைந்து போன கட்டையின் பாதியை காலால் மிதித்துக்கொண்டே , " சார் ஓடிப் போய் ஒரு இரும்பு தடி இருந்தா கொண்டுவாங்க!" என்றார். அவர் அடித்த அடியில் சவுக்கு கொம்பு இரண்டாக உடைந்து போக பாதியாக கிடந்த கொம்பின் அடியில் உடம்பு மாட்டிக் கொள்ள தலையை தூக்கி படம் எடுத்துக்கொண்டிருந்தது அந்த நான்கு அடி நல்ல பாம்பு.

" இதென்னடா சோதனை!" என்று ஓட்டமாக ஓடி தோட்டத்தில் இருந்த ஒரு இரும்பு குழாயை எடுத்துக்கொண்டு வந்து நடுங்கிக்கொண்டே நண்பரிடம் கொடுக்க வாங்கி ஒரே போடில் அதை எமலோகத்துக்கு அனுப்பி வைத்தார் அவர் .

இதற்குள் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கூடி நாங்கள் அடித்த பாம்பை பார்த்துவிட்டு "என்ன சார் நல்ல பாம்பை அடிச்சுட்டீங்களே!, பாவம் இல்லையா? அதுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை செஞ்சுடுங்க!" என்று சொல்லவும், பழைய வெள்ளை வேட்டியை கிழித்து அதன் மேல் போட்டு எரித்துவிட்டு அரை லிட்டர் பாலை அதன் மேல் ஊற்றிவிட்டு திரும்பினேன்.

இதோடு விட்டதா? மறு நாள் வீடு பூராவும் மஞ்சள் பொடி கலந்த நீரை தெளித்து சுத்தம் செய்தேன். அதற்கடுத்த நாள் அலுவலகம் புறப்படும் சமயம் செருப்பின் அடியில் ஏதாவது இருக்குமோ என்று சந்தேகத்துடன் தூக்கிப் பார்த்தால் பெரிய தேள் ஒன்று குடுகுடுவென்று ஓட அந்த செருப்பாலயே அதை அடித்து போட்டு விட்டு கிளம்பி அலுவலகம் போனால் "சார் உங்களை கடலூருக்கு மாத்திட்டாங்க , உடனே அங்கே ஜாயின் பண்ணச் சொல்லி உத்தரவு வந்திருக்கு!" என்றார்கள்.

"போதும்டா சாமி! என்று மாலையே அங்கிருந்து கிளம்பி மறுநாள் காலை கடலூர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்து மாலையில் நண்பர்களுடன் ஓட்டலுக்கு போய் டிபன் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து அப்போதுதான் வந்த குமுதத்தை வாங்கி பிரித்துப் பார்த்ததும் " ஐயோ! " என்று அலறிக்கொண்டே கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்த என்னை துரத்திக்கொண்டே வந்த நண்பர்களுக்கு தெரியாது நான் பிரித்த பக்கத்தில் ஒரு கதைக்காக படமெடுக்கும் நல்ல பாம்பின் படத்தை ஒரு பக்க அளவில் பெரிதாக போட்டிருந்தது.
பாம்பைக் கண்டால் படை நடுங்குமோ என்னவோ தெரியாது நான் நடுங்கியது சத்தியம். இன்றும் என் வீட்டை சுற்றி போகும் பாம்பை கண்டால் வேடிக்கை பார்ப்பதுடன் சரி. அடிப்பதெல்லாம் மூச்! கிடையவே கிடையாது.

Wednesday, August 26, 2009

திடம் (சிறுகதை)

"மூணாவதும் பெண்ணா? கள்ளிப்பால் கொடுக்கற குருவம்மாவுக்கு சொல்லிவிட்ர வேண்டியதுதான்."

டவுன் ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தையை வந்து பார்த்துவிட்டு மாமியார்க்காரி சொல்லிவிட்டுப் போனது செல்லம்மாவின் காதுகளில் இன்னமும் ஒலித்துக்கொண்டிருந்தது .

பாவி கட்டின புருஷனும் இல்லே இதுக்கு தலையாட்டறான்.

நினைக்க நினைக்க ஆத்திரம் பொங்கியது அவளுக்குள் .
டிஸ்சார்ஜ் ஆகி புருஷனுடன் கிராமத்துக்கு திரும்ப பஸ் ஸ்டாண்டில் நின்றபோது...

ஒரு கடையின் ஓரத்திலிருந்த வண்ண மீன்கள் கண்ணாடித் தொட்டியை கவனித்தாள்.

தன் குட்டிகளுக்கு பின்னால் வாயைத்திறந்துகொண்டே நீந்திக்கொண்டிருந்தது அந்த ஜிலேபி கெண்டை மீன். கெளுத்தி மீன் ஒன்று குட்டிகளை விழுங்க வர, என்ன ஆச்சரியம்! அத்தனை குட்டிகளும் தாயின் வாய்க்குள் புகுந்து கொள்ள டப்பென்று வாயை மூடிவிட்டு ஆபத்து நீங்கியதும் வாயைத் திறக்க குட்டிகள் வெளியேறி மீண்டும் நீந்தத் தொடங்கின.

" சே! ஐந்தறிவுள்ள மீனே தன் குட்டிகளை காப்பாத்திக்க வழிகளை தெரிஞ்சு வச்சிருக்கச்சே ஆறறிவுள்ள தன்னால் குழந்தைகளை காப்பாத்த முடியாதா ?"

புருஷனிடம் சொன்னாள் உறுதியாக. "யோவ் இந்தக் குழந்தையை கொல்லாம வச்சுக் காப்பாத்துவேன்னு சத்தியம் பண்ணிக் கொடுத்தாத்தான் உன்னோட பஸ்ல வருவேன். இல்லாட்டி என் ஊருக்கு போய்க்கிறேன். ஊர்ல இருக்கற மத்த ரெண்டு பொட்டப் புள்ளைங்களையும் கூட என்னிடமே கொண்டு வந்து விட்டுடு. எப்பாடு பட்டாவது காப்பாதிக்கறேன்."


Tuesday, August 25, 2009

வந்தள், பெருக்கினள்,சென்றள்

நான் அப்போது தணிக்கைப் பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றிக்கொண்டிருந்தேன். கோவையில் உள்ள அலுவலகத்துக்கு தணிக்கைக்காக சென்றிருந்தேன். பதிவேடுகளை ஆய்வு செய்துகொண்டிருந்த போது ஒரு பதிவேட்டில் அன்றைய தேதியை போட்டு " வந்தள்,பெருக்கினள்,சென்றள் " என்று எழுதி ஒரு சுருக்கொப்பமும் (Initial) இடப்பட்டிருந்தது. இதில் கொடுமை என்னவென்றால் வருடம் பூராவுக்கும் இதையே எழுதி இருந்ததுதான். அங்குள்ள பணியாளரை அழைத்து " இது என்ன சார் ஒன்றும் புரியவில்லையே ?" என்று கேட்டதுக்கு "அதுவா சார் , தினமும் அலுவலகம் கூட்ட வரும் பெருக்குபவர் (பெண்) வந்தாரா என்பதை அறிந்து கொள்ள ஒரு வருகைப் பதிவேடு தனியாக வைத்துள்ளோம் . அதில்" வந்தாள் , பெருக்கினாள்,சென்றாள் " என்பதைத்தான் எங்கள் அலுவலக வாட்ச்மேன் "வந்தள்,பெருக்கினள்,சென்றள் " என்று எழுதி இருக்கிறார் என்றார். நீங்களாவது எழுதிக்காட்டி இருக்கலாமே என்றதுக்கு , "நீ காலை வாங்கலைன்னா உன் கையை வாங்கிடுவேன்னு பயமுறுத்திக்கூடப் பார்த்துட்டேன் சார், அவரை திருத்தவே முடியலை " என்றார். இதைக் கேட்டதும் எனக்கு மாவீரன் அலெக்ஸ்சாண்டர் பற்றி சொல்லும் "வந்தார், பார்த்தார் ,வென்றார் " (He came, He saw, He conquered) என்னும் வார்த்தைதான் நினைவுக்கு வந்தது.

Wednesday, August 19, 2009

அன்புள்ள நண்பர்களுக்கு ,

வணக்கம். புதிதாக வந்துள்ளேன். உங்கள் ஆதரவினை அன்புடன் நாடுகிறேன்.

ரேகா ராகவன்.