என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Thursday, November 15, 2012

மனைவி (ஒரு பக்கக் கதை)
 "குமுதம்" 21.11.2012 இதழில் வெளியானது.

Saturday, September 22, 2012

இதுவும்...!கார்,பங்களா,

அள்ள அள்ள பணம்னு

வாழும்  மக்களே!

ஹாயாக நாங்கள் இப்படி

படுத்திருப்பதைப் பார்த்ததுமே 

வண்டியின் வேகம் குறைத்து

மனதில் பயம் அதிகரிக்க
  
எங்களை கடந்து போகும்

நீங்கள் என்றாவது

நினைத்துப் பார்த்ததுண்டா

இதுவும் கடந்து போகும்னு! 

<><><><><><><><><><><><>

Saturday, September 1, 2012

சென்னை வலைப்  பதிவர்கள் திருவிழாவில் நடந்தது என்ன?

படிக்க வந்துட்டீங்களா? ஹீ..ஹீ... இப்பல்லாம்  இப்படி தலைப்பு வெச்சாத்தான்  நிறைய பேரு படிக்க வருவாங்கன்னு  நானும்  வெச்சுட்டேன்! சரி விஷயத்துக்கு வருவோம்.

பதிவர் மாநாட்டைப் பற்றி எல்லோரும்  ப்ளாக்கில் ரெண்டு மூணு பதிவுக்கு மேலேயே போட்டுட்டாங்க.  படம் பார்த்துட்டு வந்த சூட்டோடு விமர்சனம் போடும் சி.பி.எஸ். மாதிரி இல்லாவிட்டாலும் பரவாயில்லை அடுத்த நாள் அட  அதுக்கு அடுத்த நாளாவது போட்டிருக்க வேண்டாமான்னு நீங்க சொல்வதை கேட்டுக் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. 

26.8.12 அன்று அதிகாலை  மழைத் தூறலுடன் விடிந்தது சென்னை. அது பதிவர் மாநாட்டை வரவேற்று வானம் தூவிய பூ மழை என்று பின்னர் தான் தெரிய வந்தது. அதற்குப் பிறகு இதமான வெயிலுடன் தெளிவான வானம்தான் மாலை வரை!

இரண்டு வாரத்துக்கு முன்பே "வீடு திரும்பல்" மோகன் குமார் அவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இப்படி ஒரு பதிவர் திருவிழா சென்னையில் நடைபெறப் போவதைப் பற்றி கூறி, வயதில் மூத்தப் பதிவர்களை கௌரவப்படுத்துவதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறும்  அன்போடு அழைத்தார்.   எல்லாப் பதிவர்களையும் சந்திக்கும் அழகான சந்தர்ப்பம் இது என்பதால் மிகவும் ஆர்வத்துடன் கண்டிப்பாக கலந்து கொள்வதாக தெரிவித்தேன். 

விழா நடைபெறும் மண்டப  வாசலிலேயே நண்பர் சங்கவி வரவேற்க, மாடியில் நான் வந்திருப்பதை அங்குள்ள பதிவேட்டில் பதிவு செய்துவிட்டு இருக்கையில் அமர்ந்த சில நிமிடங்களிலேயே என் பக்கத்தில் சேட்டை. அட அதாங்க நம்மையெல்லாம் சிரி  சிரின்னு சிரிக்குமாறு  எழுவாரே சேட்டைக்காரன் அவரு தாங்க! அவரிடம் என்னை அறிமுகப்படித்திக்கொண்டு ஒரு ஐந்து நிமிட அளவளாவல். அதன் பின் தமிழ்த் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்க களை கட்டியது பதிவர்கள்  திருவிழா."வீடு திரும்பல்" மோகன் குமார் வரவேற்புரையை வழங்க, நிகழ்ச்சிகளை தொகுத்தளிக்கும் பணியை "தூரிகையின் தூறல்" திரு மதுமதி அவர்கள் மிக அழகாக மேற்கொண்டார். "நான் பேச நினைப்பதெல்லாம்" திரு சென்னைப் பித்தன் அவர்கள் தலைமை வகிக்க, "புலவர் கவிதைகள்" திரு சா.இராமாநுசம் ஐயா அவர்களும் "வலைச்சரம்" (மதுரை) திரு சீனா அவர்களும் முன்னிலை வகிக்க நிகழ்சிகள் ஆரம்பமாயின.

இந்த திருவிழா நடை பெற பொருளுதவியும் மற்ற உதவிகளையும் செய்து ஊக்குவித்த "மக்கள் சந்தை டாட் காம்" திரு சீனிவாசன் பதிவர்களுக்கு பயன் பெறும் வகையில் அவர்கள் ஆற்றி வரும் பணிகள் பற்றி விளக்கமாக உரையாற்றினார்.

பின்னர் "பதிவர்கள் சுய அறிமுகம்" நிகழ்ச்சி.  ஒவ்வொரு பதிவரும் மேடையேறி தங்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்புடன் அவர்களின் வலையின் பெயரையும்  (சிலர்  ரத்ன சுருக்கமாக) சொல்லிச் சென்றது இது நாள் வரை வலைப்பூவில் படித்த படைப்புகளுக்குண்டான  சொந்தக்காரர்களை நேரில் பார்த்து மகிழும் சந்தர்ப்பத்தை அளித்தது.   தொகுத்து வழங்கும் பணியை சென்னை திரு "கேபிள் சங்கர்", திரு சி.பி.செந்தில் குமார் (அட்ரா சக்க) ஈரோடு,மற்றும் சங்கவி கோவை அவர்களும் மேற்கொண்டு நிகழ்ச்சியை மேலும் கலகலப்பாக்கினார்கள்."ஆயிரத்தில் ஒருவன்" வலையின் சொந்தக்காரர்  மணி அவர்களின் கை வண்ணத்தில் தயாரான மதிய  உணவு உண்மையில் "அறுசுவை"தான் என்பதை ருசித்து சாப்பிட்ட எல்லா பதிவர்களின் முகத்திலும் தெரிந்தது. அவருக்கு தனியாக ஒரு "சபாஷ்".

அடுத்தது  மூத்த பதிவர்களுக்கான பாராட்டு விழா.  வரவேற்புரையை "மின்னல் வரிகள்" பால கணேஷ் நிகழ்த்த திரு சுரேகா அவர்கள் நிகழ்ச்சியை மிகவும் சுவைபட தொகுத்தளித்தது மிகவும் நன்றாக இருந்தது.. மூத்த பதிவர்களை ஒவ்வொருவராக மேடைக்கு அழைத்து அவர்களைப் பற்றிய சுவையான சங்கதிகளை தெரிவித்து அவர்களுக்கு  சக பதிவர்களைக் கொண்டு பொன்னாடை போர்த்தி சிறப்பு அழைப்பாளர் எழுத்தாளர் மற்றும் திரைப்பட வசனகர்த்தா திரு பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களால் நினைவுப் பரிசை வழங்கி கௌரவித்தது  எல்லோராலும் பாராட்டப்பட்ட மறக்கமுடியாத நிகழ்வு. இது வரை எந்த பதிவர் விழாவிலும் நடைபெறாதது.  

அதன் பின்னர் "தென்றல்" திருமதி சசிகலா சங்கர் அவர்கள் எழுதிய "தென்றலின் கனவு" கவிதைத் தொகுப்பை பட்டுக்கோட்டை பிரபாகர் வெளியிட சேட்டைக்காரன் பெற்றுக் கொண்டார். அடுத்து   திரு சா.இராமாநுசம் ஐயா அவர்கள் தலைமை வகிக்க "தீதும் நன்றும் பிறர் தர வாரா" திரு ரமணி மற்றும் கவிஞன் கணக்காயன் முன்னிலை வகிக்க பதிவர் கவிஞர்கள் கவிபாட கவியரங்கம் களை கட்டியது. பிறகு மைக்கை பிடித்த பட்டுக்கோட்டை பிரபாகர்  அந்த காலத்து கையெழுத்துப் பத்திரிக்கையே வலைப்பூவின் முன்னோடி என்பதில் ஆரம்பித்து இதை இன்னும் என்னென்ன செய்து சிறப்பாக்கலாம் என்பது வரை பேசி ஒரு அரை மணி நேரத்துக்கு சபையினரை தன் அருமையான பேச்சால் கட்டிப் போட்டார். விழாவில் அவர் வெளியிட்ட கவிதைப் புத்தகத்திலிருந்த சில கவிதைகளைப் பற்றி சிலாகித்துப் பேசினார்.

பிரபல பதிவர்கள் லதானந்த், கேபிள்  சங்கர், மற்றும் ஜாக்கி சேகர் ஆகியோர் வந்திருந்து விழாவில் கலந்து கொண்டது நிகழ்ச்சிக்கு மேலும் சுவை கூட்டியது. அழைப்பிதழில் குறிப்பிட்ட நேரத்தில் விழாவை ஆரம்பித்ததும் முடித்ததும் நேர நிர்வாகத்துக்கு இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் விதைத்தது.

மொத்தத்தில் புண்ணியகோட்டி திருமண மண்டபத்தில்  நடந்த பதிவர் திருவிழாவில் கலந்து கொண்டதற்கு முன் ஜென்மத்தில் நான் ஏதோ புண்ணியம் செய்திருக்கவேண்டும்.  

Thursday, August 16, 2012

அறிவிப்பு
வாசகர்களுக்கு,

வணக்கம்.  பத்திரிக்கைகளில் வெளியான எனது சிறுகதைகள் மற்றும் சில பதிவுகளை எனது இன்னொரு ப்ளாக்கான http://www.anbesivam2009.blogspot.com - ல் இதுநாள் வரை வெளியிட்டு வந்தேன்.  ஆனால் "அன்பேசிவம்" என்ற பெயரில் வேறு சிலரும் ப்ளாக் நிர்வகித்து வருவதால் குழப்பங்களை தவிர்க்க வேண்டி எனது புனைப் பெயரான "ரேகா ராகவன்" என்ற ப்ளாக்-ல் இனி எனது படைப்புகளை வெளியிட தீர்மானித்துள்ளதால் "அன்பே சிவம்" என்ற ப்ளாக்கில் இனி பதிவுகள் எதுவும் வெளிவராது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். "அன்பே சிவம்" என்ற ப்ளாக்கிற்கு வரும் வாசகர்களை இனி "ரேகா ராகவன்" என்ற ப்ளாக்கிற்கு இட்டுச் செல்லும் வகையில் தக்க மாற்றங்கள் செய்துள்ளேன் என்பதையும்  தெரிவித்துக் கொண்டு தொடர்ந்து தங்கள் நல் ஆதரவை நல்குமாறு வேண்டுகிறேன்.

என்றென்றும் அன்புடன்
ரேகா ராகவன்.

Tuesday, August 14, 2012

கேட்டதில் பிடித்தது
கண்களுக்கு கெடுதல்  தராத பொழுதுபோக்கு ஒன்று உண்டென்றால் அது ரேடியோ தான் என்பதில் மாற்று கருத்து எதுவும் இருக்காதென நினைக்கிறேன். அந்த வகையில் தொலைக்காட்சி பார்ப்பதை  விட நான் அதிகம் விரும்புவது ரேடியோவைத்  தான். இதில் இன்னொரு சௌகரியமும் உண்டு. தொலைக்காட்சியை   இயக்கிவிட்டு  நீங்கள் மற்ற வேலைகளை பார்க்க முடியாது.  ஆனால் ரேடியோவை  இயக்கிவிட்டு அவற்றைப் பார்க்க முடியும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

ரேடியோவில் தினமும் நான் விரும்பிக் கேட்பது சென்னை வானொலியின்  அலை வரிசை 1 -ஐ. தினமும் காலை 06.55 முதல்  07.45 வரை அருமையான நிகழ்ச்சிகளை  ஒலிபரப்புகிறார்கள்.  நம்மைச் சுற்றியுள்ள பூமி  எப்படியெல்லாம் மாசு படுத்தப்படுகிறது, அதை கட்டுப்படுத்த என்னவெல்லாம் செய்யலாம் என்பதை  "சுற்றுச் சூழல் சிந்தனை" என்ற தலைப்பிலும்,மருத்துவம் சம்பந்தப்பட்ட  செய்திகளை "நலமாய் வாழ" என்ற தலைப்பிலும், பல்வேறு நிகழ்வுகள், மற்றும் ஒரு பொருளைப் பற்றிய முழுமையான தகவல்களை "நாளும் அறிவோம்" என்ற தலைப்பிலும் நிகழ்ச்சிகளை  தொகுத்தளிக்கிறார்கள். தவிர, அறிவியல் செய்திகளுக்காக   "புதியதோர் உலகம்",   மக்களின் சமூக பொருளாதார பிரச்சனைகளுக்காக " நகர்வலம்", என்று  சுவையான நிகழ்ச்சிகள். 

சென்ற வாரத்தில் ஒரு நாள்  "இன்சொல் அமுது " என்ற தலைப்பின் கீழ் திரு. ஆறுமுகத் தமிழன் என்பவர் சொன்ன ஒரு சம்பவம்:

எனது மேலதிகாரி ஆங்கிலமும் தமிழும்  பேசுவார். ஒரு நாள் அலுவலகப் பணியிலிருந்தபோது அவர்  என்னிடம் " மதியம் இரண்டரை மணிக்கு ஒருவர் என்னைப் பார்க்க வருவார். அவரை அப்படியே அனுப்பிடுங்க!" என்று கூறினார். நானும் சரியென்று கூறி விட்டு  காத்திருந்தேன். அந்த நபரும் சரியான நேரத்திற்கு வந்து,  தான் இன்னாரை  சந்திக்க  வந்திருப்பதாக  கூற, நானோ  அதிகாரியின் கட்டளையை நிறைவேற்றுவதாக எண்ணிக்கொண்டு  அவரிடம், "இப்போது அவரை சந்திக்க முடியாது," என்று கூறி அனுப்பிவிட்டேன். பின்னர் அவர் வந்ததையும், திருப்பி அனுப்பியதையும் இன்டர்காமில் என் மேலதிகாரியிடம் தெரிவிக்க, அவர்  "என் அப்படி செய்தீர்கள்?" என்று கேட்க, "நீங்கள்தானே சார் வருபவரை "அப்படியே அனுப்பிடுங்க!"ன்னு சொன்னீங்க?"ன்னு நான் சொல்ல, அவரோ கோபத்தின் உச்சிக்கே சென்று "அவரை எதுவும் விசாரிக்காமல் என் ரூமிற்கு அனுப்புங்கன்னு சொன்னதை அப்படியா நீங்க புரிஞ்சுக்குவீங்க!" என்று கத்த எனக்கு என்ன பதில் சொல்வதென்பதே தெரியவில்லை. எதேச்சையாக ஜன்னலை எட்டிப்  பார்க்க வந்தவன் அப்போதுதான் அந்த நபர் காருக்குள் ஏறிக்கொண்டிருந்ததை கவனித்தேன். உடனடியாக கேட்டிலிருக்கும் காவலாளியிடம் அந்த காரை சில நிமிடங்கள்  நிறுத்தி வைக்குமாறு இன்டர்காமில் கூறிவிட்டு, தட தடவென கீழே இறங்கிப் போய் அவரிடம், "சார், இப்போ  நீங்கள் அவரை பார்க்கலாம், ஃப்ரீயாகிவிட்டார்"  என்று  கூறி சமாளித்து மேலே அழைத்து வந்தேன்.


எப்படி இருக்கு பாருங்கள்! மேலதிகாரி முதலிலேயே, "அவர் வந்ததும் எதுவும் கேட்காமல் என் ரூமிற்கு அனுப்பிடுங்கன்னு" சொல்லியிருக்கலாம்.  இல்லை, முதலிலேயே ஆங்கிலத்தில் அதை சொல்லியிருக்கலாம். அதை விடுத்து, "அவரை அப்படியே அனுப்பிடுங்க!"ன்னு சொன்னது அர்த்தமறிந்து பேச  அவர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டுமென்பதை சொல்லாமல் சொல்லுதுன்னு  மனதுக்குள்  நினைத்துக்கொண்டே இதர வேலைகளில் மூழ்கிப் போனேன்.

எடைக்குப் போடவேண்டிய பழைய பேப்பர்களை அடுக்கிக்கொண்டே இதைக் கேட்ட நான் இனி பேசும்போதும் எழுதும் போதும் மிகவும்  கவனமாக இருக்க வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொண்டேன். நீங்களும்தானே?

Friday, August 3, 2012


படித்ததில் பிடித்தது

மாம்பழக் கவிச்சிங்க நாவலரின் உயிர் போகும்  தறுவாய்.  அருகிலிருப்போர், அவரது உதடுகள் உலர்ந்து போயிருப்பதைப் பார்த்தது, பாலில் ஒரு துணியை நனைத்து அவரது வாயில் ஒற்றுகிறார்கள். என்ன காரணமோ, அவர் அதனைத் 'தூ' என்று துப்புகிறார்.

"ஐயய்யோ பால் கசக்கிறதோ?" என்று பயந்து கொண்டே கேட்கின்றனர் பக்கத்திலிருப்போர்.

"மாம்பழக் கவி பதிலுரைக்கிறார்: "பாலும் கசக்கவில்லை; துணியும் கசக்கவில்லை!"

கசக்கப்படாத (துவைக்கப்படாத) அழுக்குத் துணியைப் பாலில் நனைத்துப் பிழிந்துவிட்டார்கள் என்று எவ்வளவு நயமாகக் கூறியிருக்கிறார்!

செத்துப் போகும் போதுகூடச் சிலேடை சொல்ல முடிகிறது என்றால், சாவு அவருக்கு அவ்வளவு சர்வ சாதாரணமாகிவிட்டது என்றுதானே அர்த்தம்!

( சுகி சிவம் எழுதிய "அச்சம் தவிர்" என்ற புத்தகத்திலிருந்து)


Wednesday, May 23, 2012

'கடைசித் தேவை'
மகனின் மேல் படிப்புக்காக
ஆட்டை வித்து, மாட்டை வித்து
தன் தேவைகளை புதைத்து வைத்து
அவன் படித்து முடித்து
நகரத்தில் வேலைக்கு சேர்ந்து
விரும்பிய பெண்ணை கட்டி வைத்து
இருந்த அரை ஏக்கர் நிலத்தையும்
ஒரே ஓட்டு வீட்டையும்
அவன் ஃபிளாட் வாங்குவதற்காக வித்து
கடைசி நாட்களையாவது
கழிக்கலாம் மகனோடு என்று
மனைவியோடு நகரத்துக்கு வந்தவருக்கு
ஒரு வாய் காப்பி
எப்போ கொடுப்பாளோ மருமகள்
என்று காத்திருக்க வேண்டிய
நகர(நரக) பொழப்பு பிடிக்காமல்
கிராமமே மேல் என மீண்டு வந்து
கூலி வேலைக்குப் போய்
வாடகை குடிசையில் படுத்துறங்கி
வயிற்றை கழுவும் செயலுக்குப்
பெயர் தன்மானமாமே!

Sunday, May 13, 2012

'எல்லாமே ஒரு கணக்கு தான்!''
காலேஜ் பையன்
கணக்கு பண்ணணும் என்றால்
எவளையோ
காதலிக்க முயற்சிக்கிறான்
என்றறிவோம்.

அரசியல் வா(வியா)தி
கணக்கு பண்ணணும் என்றால்
யாருக்கோ எதுக்கோ
ஆட்டையை போடப் போகிறார்
என்றறிவோம்.

சினிமா நடிகர்
கணக்கு பண்ணணும் என்றால்
ரசிகர் மன்றத்தை
அதிகரிக்கப் போகிறார்
என்றறிவோம்.

முதலமைச்சர்
கணக்கு பண்ணணும் என்றால்
மந்திரி சபையை மாற்றப் போகிறார்
என்றறிவோம்.

போலி சாமியார்
கணக்கு பண்ணணும் என்றால்
எந்த பக்தைக்கோ
பிடித்தது சனி
என்றறிவோம்.

ஆனால்...

மூணாம் வகுப்பு பையன்
கணக்கு பண்ணணும் என்றால் மட்டும்
கணக்கு போடுவதை சொல்கிறான்
என்பதறிக!

<><><><><><><><><><><><><><><><><>

Tuesday, April 24, 2012

ஆனால்...
விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்கள்
ஆகிப்போச்சு!
குடிநீருக்கும் விலை கொடுக்கும் அவலம்
வந்து போச்சு!
பாசம் இங்கே அருகிப் போச்சு
முதியோர் இல்லம் பெருகிப் போச்சு!
காட்டையெல்லாம் அழிச்சு மனுசப் பையன்
பைகள் கரன்சியால் நிரம்பிப் போச்சு!
செல்ஃபோன் டவர் பெருக்கத்தினால
சிட்டுக் குருவின்னா என்னான்னு
நம்ம சந்ததிக்கு தெரியாமலே ஆச்சு!
ஆனா..
ஏழை ஏழையாகவும்
பணக்காரன் பணக்காரனாகவும்
இருக்கும் நிலை மட்டும்
நம்ம ஊரில் நிலைத்துப் போச்சு!

<><><><><><><><><><><><><><><><><><><><>

கட்டுரை.காம்-ல் வெளியான கவிதை 

Monday, March 12, 2012

மறந்ததேன்?
வயிற்றில் பத்து மாதம் சுமந்து
இரவு பகல் பாராமல்
பொத்திப் பொத்திப் பாதுகாத்து
பாலூட்டி,சோறூட்டி
கையில்,மடியில்,தோளில்
போட்டு வளர்த்த அன்னையை
பிள்ளைகள் பெரியவர்கள்ஆனதும்
அண்ணன் வீட்டில் ஒரு மாதம்
தம்பி வீட்டில் ஒரு மாதம் என்று
பந்தாடும் விளையாட்டு பிற்காலத்தில்
அவர்களை வைத்தே விளையாடப்படும்
பார்த்துக் கொண்டிருக்கும் பேரன்களால்
என்பதை மறந்ததேனோ?

<><><><><><><><><><><><><><><><><><><>


(கட்டுரை.காம்-ல் வெளியான என் கவிதை)

Monday, February 6, 2012

இம்முறையேனும்//வந்ததோ...


1. வந்ததோ...

தூரத்தே மணியோசை!
ஆடி அசைந்து வருகிறதோ 
பாகனுடன் யானை?

பார்த்ததுமே பரவசத்தில் 
துள்ளிக் குதிப்பானே குழந்தை!

அவசரமாய் அவனை 
தோளில் அணைத்துக் கொண்டு
தெரு முனைக்குப் போனால்...

மணியோசையுடன் 
வந்து கொண்டிருந்தது 
பஞ்சு மிட்டாய் வண்டி! 

<><><><><><><><><><><><><><><>

2. இம்முறையேனும்... 

வருவாயெனக் காத்திருந்தேன் 
நீயோ வரவேயில்லை!

வந்த போது நான் உன்னைத்  
தவிர்த்தது தவறுதான்
மன்னித்துவிடு! 

மீண்டும் நீ வருவாயா என்று 
துக்கத்துடன் காத்திருக்கிறேன்!

இம்முறை ஏமாற்றாதே 
வா.. வா..வந்துவிடு...
என் இனிய தூக்கமே!

<><><><><><><><><><><><><><><>

(கட்டுரை.காம்-இல் வெளியான எனது கவிதைகள்)