என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Friday, December 25, 2009

அவனுக்கு ஒரு வேலை"வேலை வாங்குறதுக்காக அப்பா நாளைக்கு என்னைப் பட்டாசுக் கம்பெனிக்கு அழைச்சுக்கிட்டுப் போகப் போறாராம்மா? நான் ஸ்கூலுக்குப் போகணும், இல்லேன்னா டீச்சர் அடிப்பாங்க!"-அழுதுகொண்டே கூறிய மகனின் தலையை வாஞ்சையுடன் வருடியவாறே, "அப்பா கூப்பிட்டாருன்னா மறுக்காம போயிட்டு வாடா. எல்லாம் நம்ம நன்மைக்காகத்தான் சொல்வாரு" என்றாள் சரசு.

வாசல் திண்ணையில் உட்கார்ந்திருந்த ஆறுமுகத்தின் முகத்தில் கவலை ரேகைகள். 'சரவணனை நாளைக்கு அழைச்சுக்கிட்டுப் போனால் கண்டிப்பாக வேலை கிடைச்சுடுமா? சிவகாசியிலே அந்த பட்டாசு கம்பெனியில்தான் அதிக சம்பளம் தர்றாங்களாம். வேலை மட்டும் கிடைச்சு குடும்பத்துக்கு கூடுதலா பணம் வந்துச்சுன்னா சரவணனுக்கும் அவன் தங்கச்சிக்கும் நல்ல துணிமணிகளும், மனைவிக்கு சேலையும் வாங்கிக்கலாம். வாங்கின கடன்களையும் கொஞ்சம் கொஞ்சமா அடைச்சுடலாம்!'

மறுநாள்... "என்ன ஆறுமுகம் இவன்தான் எட்டாம் வகுப்பு படிக்கிற உன் பையனா? ஒ.கே! நாளைலேர்ந்து வேலைக்கு வந்திரலாம். அப்புறம் எங்க கம்பெனி கண்டிஷன் எல்லாம் தெரியுமில்லே?" என்று கேட்டார் மேனேஜர்.

"தெரியுங்க. பசங்களை வேலைக்கு அனுப்பாம படிக்க வைக்கிறவங்களுக்கு மட்டும்தான் இங்கே வேலை. என்னிக்குப் பசங்க படிப்பை நிறுத்தி வேலைக்கு அனுப்பினாலும் எங்க வேலை போயிடும். ஏஜென்ட் எல்லாம் தெளிவா சொல்லி இருக்காருங்க. இவனைத் தொடர்ந்து ஸ்கூலுக்கு அனுப்பிப் படிக்க வைப்பேங்க!".

நெகிழ்ச்சியுடன் கை கூப்பினான் ஆறுமுகம்.

( 28.5.06 "ஆனந்த விகடன்" இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை )
வாழ்க்கையில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. வாழ்க்கையை புரிந்துகொள்ள வேண்டும்

Saturday, December 5, 2009

நகம்

"பிரமிளா, இன்னிக்காவது விரல் நகங்களை வெட்டுடீ பெண் பார்க்க வர்றவன் உன்னைப் பிடிக்கலேன்னு சொல்லிடப் போறான்" என்றாள் அம்மா.

அப்பா அம்மா பேச்சைத் தட்டமுடியாததால் பியூட்டி பார்லருக்கு போனவள் நகங்களை ஓட்ட வெட்டிக் கொண்டுவிட்டாள்.

பெரியவர்களை நமஸ்கரித்து எல்லோருக்கும் காபி கொடுத்து அமர்ந்தாள் பிரமிளா. ஆசையோடு அவள் கைகளைப் பற்றிப் பார்த்த பையனின் அம்மா முகத்தில் அதிர்ச்சி.

"என்னங்க இது? உங்க பொண்ணு கை விரல்களில் அழகா நகம் வளர்த்து வச்சிருக்கிறதா புரோக்கர் சொன்னாரே! பார்த்தா அப்படி இல்லியே! பொண்ணு வேலைக்குப் போறதாலே சிட்டி பஸ்ல சில்மிஷம் பண்றவங்க, இப்படி நகம் வளர்த்து வச்சிருக்கிறவங்ககிட்ட வர பயப்படுவானுங்களே நல்ல பாதுகாப்பான ஜாக்கிரதையான பொண்ணுன்னு உங்க பெண்ணைப் பார்க்க வர்றதா ஒப்புக்கிட்டோம். இங்கே என்னடான்னா"... என்று அவர் சொல்லி முடிக்க்கவும் வருத்தம் கலந்த பார்வையை அம்மாவை நோக்கி வீசினாள் பிரமிளா.

--ரேகா ராகவன்--

( "குமுதம்" 17.5.2006 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை. )
நேர்மையை ரொம்பவும் பாராட்டுவார்கள்.ஆனால், அவர்களைப் பட்டினி போட்டுவிடுவார்கள்.