என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Wednesday, December 8, 2010

சந்திப்பு"பெண் பார்க்க வரலாமான்னு கேட்டு அந்த தாம்பரம் வரனின் அப்பா போன் பண்ணினார். ஞாயிற்றுக்கிழமை வரச்சொல்லிடலாமா?"

ஆபீஸ் முடிந்து வீட்டுக்குள் நுழைந்ததுமே அப்பா கேட்கவும் எரிச்சலானாள் வனிதா.

" போங்கப்பா. பெண் பார்க்கிறோம் பேர்வழின்னு கும்பலா வந்து ஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டுவிடடு வீட்டுக்குப் போய் தகவல் சொலறோம், லெட்டர் போடறோம்னு சொல்றது. அப்புறம் பெண் கொஞ்சம் நிம் கம்மியா இருக்கா, உயரம் பத்தலைன்னு நொண்டிச் சாக்கு சொல்றதுன்னு இவங்களுக்கு இதே வேலையாப் போச்சு. தண்டச் செலவு. வீண் சிரமம்...இதெல்லாம். எனக்குப் பிடிக்கலை" --- கறாராகச் சொன்னாள்.

" நல்ல குடும்பத்து பையன். கை நிறைய சம்பாதிக்கிறானாம். ஏண்டீ இப்படி ஆரம்பத்திலேயே தடங்கல் போர்டு வைக்கறே? " -- அம்மா தன் பங்குக்கு முழங்கினாள்.

" வேணும்ண்ணா ஒண்ணு ண்ணலாம். அந்த பையனை ஸ்பென்சர் பிளாசாவுக்கு வரச்சொல்லி பார்த்திடறேன். பிடிச்சிருந்தா மத்தவங்களோட வீட்டுக்கு வந்து பார்க்கட்டும். இதுக்கு ஒத்துக்கிட்டா சரி. இல்லேன்னா எனக்கு கல்யாணமே வேண்டாம்."

அம்மா எதிர்த்து ஏதோ சொல்ல அப்பாதான் அந்த பையனிடம் போனில் பேசி அதற்கு சம்மதம் வாங்கினார்.

வெள்ளிக்கிழமை. ஸ்பென்சர் பிளாசாவில் இருந்த அந்த பீட்சா ஹட்டில் வனிதாவையும் அந்த பையனையும் பல ஜோடி கண்கள் பார்க்கத் தவறவில்லை.

சனிக் கிழமையே பதில் வந்துவிட்டது அவனிடமிருந்து. வருத்தம் தெரிவித்து.

அடுத்த வாரத்தில் ஒரு நாள். அதிகாலையிலேயே வந்த தரகர் சொல்லிக் கொண்டிருந்தார்.

'' நேத்து புதுசா ஒரு பையனோட ஜாதகம் வந்தது. ஏற்கனவே பார்த்த எல்லா வரன்களும் தட்டிப்போயிடுச்சேன்னு ஒரு ஆதங்கத்தோட அவங் வீட்டில போய் உங்க பெண்ணோட போட்டோவை காண்பிச்சேன். அவங் அப்பாஅம்மாவுக்கு பிடிச்சது. ஆனா பையன் பார்த்துட்டு `'ந்த பெண்ணை ஸ்பென்சர் பிளாசா பீட்சா ஹட்டில் யாருடனோ பார்த்திருக்கேனே? வேற இடம் இருந்தா சொல்லுங்க'ன்னுட்டான்..."

_______________________________________________________________________

(5.12.10 தினகரன் "வசந்தம்"இதழில் வெளியான என் சிறுகதை)

Tuesday, December 7, 2010

"டெல்லி கணேஷும் நானும் "
அவ்வை ஷண்முகி படத்தில் நடிகர் டெல்லி கணேஷை மணிவண்ணன் கோஷ்டியினர் தெளிய வைத்து அடிக்கும் காட்சியில் அவரது நடிப்பு மட்டும் தனித்து தெரியும். அதை இப்போது நினைத்தாலும் எனக்கு குபுக் என்று சிரிப்பு வருகிறது.

கடந்த ஞாயிறு அன்று அவர் அம்பத்தூர் ஹுமர் கிளப் நடத்திய கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அப்போது அவர் சில நகைச்சுவையான காட்சிகளை விவரித்தார். அது...

ஒரு நாள் ஏ.வி.எம் படப்பிடிப்பு நிலையத்தின் பின் புறம் உள்ள சுடுகாட்டில் ஒரு படத்துக்கான ஷூட்டிங் எடுத்தார்கள். நான் அங்கே நடிக்க சென்றிருந்தேன்.லஞ்ச் பிரேக்கின் போது அந்த சுடுகாட்டின் நிஜமான வெட்டியானுடன் அவரைப் பற்றியும் அவர் செய்யும் வேலைகளைப் பற்றியும் பேச்சுக் கொடுத்ததில் அவர் நெருங்கிய நண்பர் போல என்னிடம் பேச ஆரம்பித்துவிட்டார். அவருக்கு லஞ்ச் வரவழைத்து கொடுத்து மேலும் குஷிப்படுத்தினேன். மாலை ஷூட்டிங் முடிந்து எல்லோரும் சென்றுவிட்டோம். அதற்கு அப்புறம் வேறு ஷூட்டிங்குகளில் கலந்து கொண்டதால் அதைப் பற்றி மறந்தே போய்விட்டேன்.

ஒரு பதினைந்து நாள் கழித்து கோடம்பாக்கத்தில் என் கார் சிக்னலுக்காக காத்திருந்தபோது காரை ஓட்டி வந்த என்னை அந்த வெட்டியான் சைக்கிளில் இருந்தவாறே பார்த்து " என்ன சார் அங்கே எப்ப வர்றீங்க?" என்று ஒரு அணுகுண்டை வீசினார். நான் ஆடிப் போய்விட்டேன். அந்த இடத்தில் அந்த சூழ்நிலையில் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு அவனிடம் "இல்லப்பா எனக்கு இன்னும் மூணு நாலு கமிட்மென்ட்ஸ் இருக்கு, அது முடிந்ததும் நானே வந்துடுவேன் !" என்றேன்.
அதுக்கு அந்த வெட்டியான் " ஐயோ சார் நான் அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை,மறுபடியும் ஷூட்டிங்குக்காக எப்போ அங்கே வர்றீங்க? என்று தான் கேட்டேன். தப்பா இருந்தா மன்னிச்சிக்கோ சார்! " என்றான். " இதை அப்போதே இப்படி கேட்டிருக்க வேண்டியதுதானே?" என்று நான் அவனிடம் சொல்லவும் சிக்னல் விழவும் சரியாக இருந்தது. அப்புறம் நான் காரை கிளப்பிக்கொண்டு போய்விட்டேன்.

என்ன நண்பர்களே அவரின் நகைச்சுவையை ரசித்தீர்களா?

எல்லாம் சரி. தலைப்புக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம் என்றுதானே கேட்கிறீர்கள்? சம்பந்தம் இருக்கு.நடிகர் டெல்லி கணேஷ் என் நீண்ட நாள் நண்பர். அவரை மாதிரி நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவரைப் பற்றி நான் என் நண்பர்களிடம் பேசும்போது டெல்லி கணேஷும் நானும் என்றுதான் பேச்சை ஆரம்பிப்பேன். இப்போ தலைப்பு சரியாப் போச்சா?

(இது ஒரு மீள் பதிவு)

Friday, December 3, 2010

விஷம் ரெடியா?"ஏய் மீனா! கதவை தாழ்ப்பாள் போட்டியா?"


"போட்டுட்டேங்க!"

"பசங்களெல்லாம் தூங்கியாச்சா? எழுந்து வரமாட்டாங்களே?"

"நல்லா அயர்ந்து தூங்கறாங்க, இப்போதைக்கு எழுந்திருக்க மாட்டாங்க!"''ஆமா, சாயங்காலமே லெட்டர் எழுதி வைக்கச் சொன்னேனே, எழுதிட்டியா?"

"எழுதி டேபிள் மேலே வச்சிருக்கேங்க."

"சரி,சரி! விஷத்தை வாங்கியாந்து அந்த ஷெல்ப்பில் வச்சிருக்கேன். பார்த்து எடுத்துக்கிட்டு வா! பசங்க காலை மிதிச்சிடப் போறே, அதுங்க எழுந்து கிழுந்து வைக்கப் போவுது!"

"கொண்டாந்துட்டேன்..இந்தாங்க!"

"இப்படிக் கொடு, அந்தத் தட்டில் சோத்தைப் போடு, விஷத்தைக் கலந்துடலாம்."

"இந்தாங்க..சோறு கொஞ்சம் போதுமா, இல்ல நிறைய போடணுமா?"

"கொஞ்சம் போதும். அப்பத்தான் நல்லா வேலை செய்யும். "

"சோத்துல விஷத்தைக் கலந்துட்டேன். இந்தா நீ பாதி எடுத்துக்க, கொஞ்சம் கொஞ்சமா உள்ளே தள்ளு."

"சரிங்க, அப்படியே செய்யறேங்க."

"அப்பாடா! இன்றோடு எல்லாத் தொல்லையும் விட்டது. பொந்துக்குள்ள தள்ளின விஷ சோத்தை தின்னுட்டு எல்லா எலிகளும் வாயைப் பொளந்துகிட்டு செத்துக் கிடக்கப் போவுது பார். நீ எழுதி வச்ச லெட்டரை மறக்காம நாளைக்கு போஸ்ட் பண்ணிடு. எலிக்கு பயந்து சாகும் உன் தங்கச்சி, அதை எல்லாம் விஷம் வெச்சு சாகடிச்சாச்சுன்னு தெரிஞ்சதும் அடுத்த பஸ்சிலேயே புறப்பட்டு வந்துடுவா! என்ன நான்
சொன்னது புரிஞ்சுதா?"

"புரிஞ்சுதுங்க," என்றாள்.
_____________________________________________________________

(30.6.92 தினமலர் கதைமலரில் வெளியான என் சிறுகதை)