என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Friday, April 30, 2010

பாராட்டு/ பசி/ இருவர்/வலை
பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம். முதலில் பதிவுலகத்துக்குள் " ரேகா ராகவன் " என்ற இந்த வலைப்பூவில்தான் என் பயணத்தை தொடங்கினேன். அதன் பின்னர் பத்திரிக்கைகளில் வெளியான என் சிறுகதைகளுக்காகவும் வலைப்பூவுக்கென வடிவமைத்து எழுதும் சிறுகதைகளை வெளியிடவும் "அன்பே சிவம்" என்ற வலைப்பூவையும் தொடங்கி என்னால் இயன்ற வரையில் நல்ல கருத்துக்களை சொல்ல ஓரளவுக்கு முயன்று வருகிறேன். அந்த வகையில் இரு வலைப்பூக்களிலும் இதுவரை 49 பதிவுகளை இட்டிருக்கிறேன். இது எனது 50-வது பதிவு. உங்களின் நல் ஆதரவோடு மேலும் பல நல்ல பதிவுகளை எதிர் காலத்தில் தர விழைகிறேன்.1. பாராட்டு

வெற்றி பெற்ற சினிமாவின்
இயக்குனருக்கு பாராட்டு விழா.
மூலக் கதையை எழுதியவன்
சோகத்தோடு மூலையில்.

2. பசி

பொம்மைக் குழந்தைக்கு
பால் கொடுப்பது போல
நடித்துக்கொண்டிருந்தது
பசியோடிருந்த குழந்தை.

3 . இருவர்

பெண் பார்த்து நிச்சயித்த பின்பு
அவனுக்கு ஏற்பட்டது தவிப்பு
அவளுக்குள் ஏற்பட்டது குறுகுறுப்பு.

4. வலை

திருடனை வலை வீசி
தேடினது போலீஸ்
கடைசியில் அகப்பட்டான்
ஒரு அப்பாவி.கவிதை எழுதும் கலைஞன் பெருமைக்கு உரியவன் என்றால், ஒரு நிலத்தை உழுபவனும் கவிஞன்தான்!

Thursday, April 22, 2010

நம்பிக்கைதினமும் வெளியே புறப்படும்போது தெரு முனை பிள்ளையார் கோயில் முன் காரை நிறுத்தி இறங்கி தரிசித்துவிட்டு செல்வது வழக்கம். "நீயும் வாயேண்டா! என்று காரிலிருந்த என் நண்பன் கார்த்திக்கை கூப்பிட்டேன். அவனோ "இல்லடா நீ போயிட்டு வா ! " என்றான்.

தரிசனம் முடித்து மீண்டும் காரை எடுத்தேன். பாதி வழி போகவில்லை. "நிறுத்து நிறுத்து " என்றான். என்ன ஏது என்று பார்த்தால் நடைபாதையிலிருந்த கிளி ஜோஸ்யரிடம் போய் உட்கார்ந்திருந்தான்.

மனைவி, மகன், மகள்னு ஒவ்வொருத்தரா சொல்லி கடைசியில் அவன் பெயரையும் சொல்லி ஜோஸ்யம் கேட்டுவிட்டுத்தான் காருக்குத் திரும்பினான்.

எனக்கு பொறுக்கவில்லை. "ஏண்டா கைரேகை, நியூமராலஜி, வாஸ்துன்னு என்னவெல்லாமோ இருக்குதே! அதையெல்லாம் விட்டுட்டு போயும் போயும் கிளி ஜோஸ்யம் பார்க்கறயே! "என்று கேட்டேன்.

" போடா எங்க நாலு பேருக்குமான பலன்களை வரிசையா சொல்ல சீட்டை எடுக்கறதுக்காக அந்த ஜோஸ்யக்காரன் கிளியை இருபது நிமிஷம் வெளியே சுதந்திரமா இருக்க விட்டானில்லே" அதுக்காகத்தாண்டா என்றான்.

நண்பர்கள் பட்டியலில் அவன் மிகவும் உயர்ந்தவனாக தெரிந்தான்.


அன்பை எப்போதும் ரகசியமாக வைத்திருக்காதீர்கள். ஒவ்வொரு முறையும் நல்ல நல்ல செயல்கள் மூலம் அதை வெளிப்படுத்திக் கொண்டே இருங்கள்

Saturday, April 10, 2010

யார் அழகு?
கபாலீஸ்வரர் கோவில்.

பிரதோஷ பூஜை தரிசித்து கோயில் பிரகாரத்தை மஞ்சள் நிற சுடிதாரில் கமலாவும்
ஆரஞ்சு சுடிதாரில் வைதேகியும் வலம் வந்துகொண்டிருந்தனர் .

அதற்கு ஒரு காரணம் இருந்தது.

முதல் நாள் தான் முடிந்திருந்தன கமலாவின் காலேஜ் தேர்வுகள். அரியர்ஸ் இல்லாமல் எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெறணும் என்று வேண்டிக் கொள்வதற்காகவும் இருவரில் யார் அழகுன்னு வைதேகிக்கு புரிய வைக்கவும் பக்கத்து வீட்டு வைதேகியையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தாள் அவள்.
இரண்டாவது சுற்று வந்துகொண்டிருக்கும்போதுதான் முன்னே சென்று கொண்டிருந்த மாமி அவள் பெண்ணிடம் " பின்னாடி மஞ்சள் சுடிதாரில் வர்றவ அழகா இருக்கா இல்லே?" என்று கேட்க, அவளுடைய பெண் திரும்பி பார்த்துவிட்டு " போம்மா உனக்கு ரசனையே இல்லே. அவளை விட அவள் பக்கத்தில் ஆரஞ்சு சுடிதாரில் வர்ற பொண்ணுதாம்மா நகை எதுவும் போட்டுக்காமலேயே களையா கண்ணுக்கு லட்சணமா இருக்கா " என்றாள்.

" பார்த்தியாடி! நான் ஏழை, போட்டுக்க நகைநட்டுன்னு ஒண்ணும் இல்லே, அதான் யாருமே வராத நேரம் பார்த்து கோவிலுக்கு போயிட்டு வருவேன்னியே? நகைக்கடையா வந்திருக்கிற என்னை விட நீ தான் அழகுன்னு சொன்னதை இப்ப உன் காதால கேட்டே இல்ல? உன் தாழ்வு மனப்பான்மையை இனிமேலாவது மூட்டை கட்டி வெச்சுட்டு வாழக் கத்துக்கோ! " என்று கமலா கூறவும் ...

மூன்றாவது சுற்றை சந்தோஷமாக வலம் வந்தாள் வைதேகி.