என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Wednesday, May 25, 2011

குழந்தை உழைப்பு
"யா, உங்களைப் பார்க்க ஒரு அம்மாவும் அவங்களோட சின்ன பையனும் வந்திருக்காங்க"--அலுவலக உதவியாளர் கூற...

"உள்ளே வரச் சொல்!" என்றார் தொழிலாளர் ஆய்வாளர் சந்திரஹரி.

"ஐயா இது உங்களுக்கே நியாயமாயிருக்கா? குடிச்சே காசையெல்லாம் அழிக்கும் தகப்பனுக்குப் பிள்ளையாய் பிறந்ததைத் தவிர இந்தப் பையன் செய்த பாவம்தான் என்ன? இவன் சேட்டு கடையில் வேலை பார்த்து கொண்டு வந்த ஐநூறு ரூபாய்லதான் கஞ்சியோ கூழோ கால் வயிறு கழுவிக்கிட்டு இருக்கோம். அதுக்கும் வேட்டு வச்சிட்டீங்களேய்யா! குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வச்சிக்கக்கூடாதுன்னு நீங்க போட்ட உத்தரவுனால சேட்டு இவனை நாளையிலிருந்து வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டார். நீங்க நல்லா இருக்கணும்!" என்று புலம்பியும் வாழ்த்தியும் நின்றவளை "என்கூட வாங்க" என்று தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றார் சந்திரஹரி.

தவைத் திறந்த அந்த வயதான பெண்மணியைப் பார்த்த மாத்திரத்தில்  மின்சாரம் தாக்கியது போல் உணர்ந்தாள்  அந்த சிறுவனின் தாய். 

சந்திரஹரி தொடர்ந்தார்.  

"என்னோட அப்பாவும் ஒரு குடிகாரர், சீட்டாட்டக்காரர், ரேஸ் பத்தியம். அவரோட மரணத்துக்குப் பிறகு என்னோட அம்மா ஒரு விபத்தில் தன்னோட வலது காலை இழந்தும் தன்னம்பிக்கையை இழக்காம ஊன்றுகோலின் துணையுடன் ரெண்டு வீட்ல சமையல் செய்து போட்டு என்னைப் படிக்க வச்சு இந்த வேலையில் அமர்த்துவதற்குள் எவ்வளவோ கஷ்டப்பட்டுட்டாங்க. இப்படி நாலு வீட்ல பத்து பாத்திரம் தேய்ச்சாவது உங்க மகனைப் படிக்க வைக்கக் கூடாதா?"

 " எப்பாடு பட்டாவது இவனைப் படிக்க வச்சு காட்டறேன் சார்!". சொன்ன அந்த தாயைப் பெருமிதத்துடன் பார்த்தார் சந்திரஹரி. 

"வாசுகி" இதழில் வெளியான என் போஸ்ட் கார்டு சிறுகதை 

Tuesday, May 17, 2011

இங்கே ஒரு 356


தான் உண்டாகியிருப்பதை ஆசை ஆசையாக கணவன் குமாரிடம் சொன்னாள் சித்ரா.

"ஐயோ அதுக்குள்ளேயா? இன்னும் இரண்டு மூணு வருஷம் போகட்டுமே... பேசாம நாளைக்கே லேடி டாக்டரிடம் போய் கலைச்சிடலாம். ரெடியாயிரு" என்று கூறிவிட்டு ஆபிசுக்குப் போன கணவனைப் பார்த்தது பொசுங்கிப் போனாள்.

மாலை.  அலுவலகம் முடிந்ததும் ஆபீஸ் மேனேஜர் குழந்தையின் பிறந்த நாளுக்குப் பரிசளிக்க பொம்மைக் குழந்தை வாங்குவதற்கு கடைக்குச் சென்றான் குமார்.

கடைக்காரன் அழகான பொம்மைக் குழந்தையை எடுத்துக் காட்டி அதன் வயிற்றை விரலால் அழுத்த, அது "மம்மி...,டாடி...,ஆன்ட்டி..." என்று பேசியது. திரும்ப அழுத்த மீண்டும் அதையே திரும்பச் சொன்னது.

"இந்த பொம்மைக்கு வேறெதுவும் பேசத் தெரியாதா?''  குமார் கேட்கவும், "எப்படி சார் பேசும்? இந்த மூணு வார்த்தைகள் பேசுகிற மாதிரிதான் பொம்மையின் வயிற்றில் அமைச்சிருக்காங்க " என்றான் கடைக்காரன்.

பொட்டில் அடித்தது போலிருந்தது குமாருக்கு. ஒரு பொம்மையை மூணு வார்த்தைப் பேச வைக்க எவ்வளவு பிரயத்தனப்பட்டிருப்பார்கள்? நிமிடத்துக்கு எத்தனையோ வார்த்தைகளைப் பேசப் போகிற உயிரை அழித்து விடணும்னு  காலையில் சித்ராவிடம் கூறிவிட்டு வந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? நினைக்க நினைக்க அவன் நெஞ்சுக்குள் பந்தாக அடைத்தது. 

இரவு.  பெட்ரூமில்...

"சித்ரா நாளைக்கு நர்சிங் ஹோம் போய் செக்கப் செய்துட்டு குழந்தை நல்லா வளர டானிக் மருந்து மாத்திரை வாங்கிட்டு வந்துடுவோம்" என்று சொன்ன குமாரை கட்டியணைத்தாள்  சித்ரா.


"வாசுகி" இதழில் வெளியான என் போஸ்ட் கார்டு கதை