என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Thursday, March 11, 2010

வேட்டை

கிண்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சத்யகுமாருக்கு மகாபலிபுரம் சென்று உள்ளூர் போலீஸ் உதவியுடன் அறிவழகனின் வீட்டைக் கண்டுபிடிப்பதில் எவ்வித சிரமமும் இருக்கவில்லை.
அதிரடியாய் வீட்டுக்குள் புகுந்தார். அங்கிருந்த பீரோவை குடைந்து அதிலிருந்த ஒரு போட்டோவை எடுத்தார் .

"இந்தப் பெண்ணை எங்கேடா ஒளிச்சு வச்சிருக்கே நாயே?" இன்ஸ்பெக்டர் கேட்கவும், ஆடிப் போய்விட்டான் அறிவழகன்.

" அவங்க எங்கிருக்காங்கன்னு எனக்குத் தெரியாது சார்".

"எ...ன்னது உனக்குத் தெரியாதா? அவ பக்கத்தில் இருக்கிறது நீதானே?"

"ஆ...ஆமாம். சார்"

'பின்னே தெரியாதுங்கறே! அவ யாருன்னு தெரியுமா? தீவிரவாதிங்க கும்பல்ல அவ ஒருத்தி. மூணு வருஷமா அவளைத் தேடிக்கிட்டிருக்கோம். அவளோட தலைக்கு அரசாங்கம் நிர்ணயிச்சிருக்கற விலை எவ்வளவு தெரியுமா? மூணு லட்சம்! மரியாதையா அவ இருக்கற இடத்தைக் காட்டிடு . இல்லே உனக்கு எப்படி ட்ரீட்மெண்ட் கொடுத்தா நீ உண்மையை கக்குவேன்னு எனக்குத் தெரியும்டா ராஸ்கல்".

அதிர்ந்தான் அறிவழகன். தீபா தீவிரவாதி கும்பலை சேர்ந்தவளா? தெரியாமல் போய்விட்டதே!

டூரிஸ்ட் பஸ்ஸில் மகாபலிபுரத்தை சுற்றிப் பார்க்க வந்தவளிடம் சிரிக்கச் சிரிக்கப் பேசி எல்லா இடங்களையும் சுற்றிக்காண்பித்துவிட்டு, அவள் புறப்படுகிற சமயத்தில் வழக்கமாக எல்லோரிடமும் கேட்பது போல கேட்டான். "உங்க ஞாபகமா உங்களோட ஒரு போட்டோ எடுத்துக்கறேனே ப்ளீஸ்.."

அவள் சம்மதித்தாள். அவனுடைய சகாவை விட்டு போட்டோ எடுக்க வைத்து, அவளுடைய அட்ரசையும் வாங்கிக் கொண்டு அனுப்பியது இவ்வளவு பெரிய சிக்கலில் தன்னை மாட்டிவிடும் என்று அவன் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

"சார்..சார், உண்மையை சொல்லிடறேன் சார்," என்று கூறிவிட்டு, மகாபலிபுரத்திற்கு வந்து சேர்ந்ததிலிருந்து அவளோடு அவன்
போட்டோ எடுத்துக் கொண்டது வரை விலாவாரியாக சொன்னான்.

"ம்... அப்ப நான் சொல்ற மாதிரி இந்த பேப்பரில் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடு!".

" எனக்கும் இந்தப் போட்டோவில் இருக்கும் தீபாவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. டூரிஸ்ட் கைடு என்ற முறையில் பக்கத்தில் நின்று நட்புடன் போட்டோ எடுத்துக்கொண்டதுதான் உண்மை."

--- அறிவழகன்.

என்று இன்ஸ்பெக்டர் சொல்லச் சொல்ல எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான்.

"இந்த போட்டோவோட நெகடிவ் எங்கேடா வச்சிருக்கே?'--இன்ஸ்பெக்டர் அதட்டவும் பெட்டியில் பத்திரப்படுத்தியிருந்ததை
எடுத்து பவ்யமாக நீட்டினான்.

கிண்டி போலீஸ் ஸ்டேஷன்.

"தீபா உங்கிட்டே என்ன சொன்னான் அந்தப் பொறுக்கி?அவனோட ஆசைக்கு இணங்கலைன்னா அவனை நீ காதலிச்சதா சொல்லி அதுக்கு அத்தாட்சியா இந்த போட்டோவை காண்பிப்பேன்னுதானே? இனிமே நீ இருக்கிற திசையின் பக்கம் கூட அவன் தலை வச்சு படுக்கமாட்டான். இனி முன்பின் தெரியாதவங்களோட நின்னு போட்டோ எடுத்துக்காதே! உன்னோட படிக்கற பொண்னுங்ககிட்டேயும் சொல்லு" .

"இந்தாங்க சார் அந்தப் பையன் எழுதிக் கொடுத்த லெட்டரும் போட்டோவின் நெகட்டிவ்வும்"--தீபாவின் அப்பாவிடம் இரண்டையும் கொடுத்த இன்ஸ்பெக்டர் கடமை செய்துவிட்ட திருப்தியோடு அடுத்த வேலையைக் கவனிக்கப் புறப்பட்டார்.

( "பாக்யா" இதழில் வெளியான என் சிறுகதை )

எதையும் செய்த பிறகு அழுவதைவிட அதை செய்யாமல் இருப்பதே நலம்

Saturday, March 6, 2010

அவர்கள்


ந்திராவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. கல்பனாவை நம்பாமல் பார்த்தாள்.

"என்னுடைய வீட்டுக்காரர் அப்படிப்பட்டவர்னா சொல்ற?"

"நான் கண்ணால் பார்த்ததைத்தான் சொல்றேன். நேத்திக்கு அவ வீட்டுக்குப் போயிருந்தேன். அவ கட்டியிருந்த புடவை நல்லாயிருந்ததால் எங்கே எடுத்ததுன்னு விசாரிச்சேன். முதலாளி எடுத்துக் கொடுத்தார்ன்னு சொன்னா. எனக்கு மனசுகுக்குள்ள சுருக்குன்னு ஆயிடுச்சு. உடனே இந்த விஷயத்தை உன் காதுல போட்டுடம்ணுதான் ஓடி வந்தேன். அந்த பொண்ணு உமாவை உன் கணவனோட பாக்டரியில் வேலைக்கு எடுத்துக்கச் சொல்லி சிபாரிசு பண்ணது நான்தான். பின்னாடி நீ என்னைக் குத்தம் சொல்லக் கூடாதேன்னுதான் இப்பவே வந்து எச்சரிக்கை பண்ணிட்டேன்.

ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்த ஹரி சந்திராவின் கோபமான முகத்தைப் பார்த்து நெற்றியைச் சுருக்கினான்.

"என்னாச்சு சந்திரா? எப்பவும் சிரிச்ச முகத்தோட என்னை வரவேற்பியே! இன்னிக்கு ஏன் கோபமா இருக்கே...?"

"நீங்க ஆசையா புடவை எடுத்துக் குடுத்திருக்கீங்களே... அவகிட்ட போங்க... அவ உங்கள சிரிச்ச முகத்தோட வரவேற்பா..." கோபமும் அழுகையும் ஒரு சேர வெடித்தாள் சந்திரா.

" ஏய்... நீ என்ன சொல்ற...?"

"உங்க பாக்டரில வேலை பார்க்கற உமாங்கற பொண்ணுக்கு நீங்க புடவை எடுத்துக் கொடுத்திருக்கீங்க...இல்லைன்னு சொல்லுங்க?"

ஹரியின் திகைப்பு விலகியது.

"இதுதான் கோபத்துக்குக் காரணமா?"

"கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்லுங்க. அவளுக்கு நீங்க புடவை எடுத்துத் தந்தீங்களா இல்லையா?"

"ஆமா தந்தேன். அவளுக்கு மட்டுமில்லை. என்னோட பாக்டரியில வேலை பார்க்கற பத்துப் பொண்ணுங்களுக்கும் ஒரே கலர்ல புடவை, ஜாக்கெட் எடுத்துக் கொடுத்திருக்கேன்..."

சந்திரா வியப்பு படர கணவனைப் பார்த்தாள்.

"எ... எதுக்கு?"

"பாக்டரில வேலை பார்க்கற பெண்கள் தினமும் டியூட்டிக்கு வந்ததும் அவ அவ கட்டியிருக்கிற புடவையையும் ஜாக்கெட்டையும் பத்திப் பேசியே ஒரு மணி நேரத்தை வீனடிக்கறாங்க. எனக்கு ப்ரொடக் ஷன் லாஸ் ஆகுது. அதைத் தடுக்கத்தான் இந்த ஏற்பாடு. இப்ப எதைப் பத்தியும் பேச்சே இல்லை. வேலை ஒழுங்கா நடக்குது."

சந்திரா பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, "உங்களைப்பத்தி எனக்கு நல்லாவே தெரியும்க" என்று நிம்மதிப் புன்னகை பூத்தாள்.

( "குங்குமம்" இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை )

வேகமாக பேசினால் அர்த்தத்தை இழப்பாய். கோபமாக பேசினால் குணத்தை இழப்பாய்

Friday, March 5, 2010

இவர்கள்

நான் சத்தியகுமார். வயது 35. எம்.பி.ஏ.

நாட்டுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றின் திருச்சி கிளை மேனேஜர்.

மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்றவன். தூய்மை எனது தாரக மந்திரம்.

மறுநாள் சென்னையில் நான் பணியாற்றும் வங்கி
ஸ்பான்சர் செய்யும் செமினாரில் கலந்து கொண்டே ஆக வேண்டும். அன்று முகூர்த்த நாள் வேறு. எந்த ரயிலிலும் ரிசர்வேஷன் கிடைக்கவில்லை. ஏகக் கூட்டம். ஜெனரல் கம்பார்ட்மெண்ட்டில் பயணம் செய்வது முள்ளில் உட்கார்ந்திருப்பது போலிருந்தது.
இயற்கை உபாதையின் அவசர அழைப்பால் கழிப்பறையைத் தேடிப்போனவனுக்கு அதிர்ச்சி. பார்க்கவே அருவருக்கத்தக்க பிச்சைக்காரன் ஒருவன் வழியில் படுத்திருந்தான்.

பூட்ஸ் காலால் சப்தமெழுப்பிவிட்டு, "நான்சென்ஸ், இவங்களெல்லாம் ரயிலில் வரலேன்னு யார் அழுதா?" என்று மனசுக்குள் சபித்தவாறே "அந்தாண்ட போய் படுய்யா" என்றேன் அதட்டலாக.

மின்சார எஞ்சின் மாற்றுவதற்காக விழுப்புரத்தில் ரயில் சற்று கூடுதல் நேரம் நின்றது. ஒரு டீ சாப்பிடலாம் என்று பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டவன் அதிர்ந்தேன். பர்ஸை காணவில்லை.

கழிப்பறையில் பேண்ட் பாக்கட்டிலிருந்த பர்ஸை எடுத்து மேல் தட்டில் வைத்தேன். முழுசாய் ஆயிரம் ரூபாய், கிரெடிட் கார்டு, பயிற்சிக்காக அடுத்த வாரம் சிங்கப்பூர் செல்ல வாங்கியிருந்த விமான டிக்கட் எல்லாம் அடியோடு போய்விட்டதே! என்ன செய்வது?

"சார், இது உங்களதுதானே?" குரல் கேட்டு நிமிர்ந்தேன். என்னிடம் ஒரு பர்ஸைக் காட்டிக் கேட்டான் அந்தப் பிச்சைக்காரன்.

"எ...எ... என்னுடையதுதான், ரொம்ப நன்றிப்பா" .. சொல்லிவிட்டு அவன் கொடுத்த பர்ஸை வாங்கிக் கொண்டு கையெடுத்துக் கும்பிட்டேன்.

இப்போது அவன் எனக்கு அருவருப்பாகத் தெரியவில்லை.

(" குங்குமம் " இதழில் வெளியான என் சிறுகதை)
நேர்மையை ரொம்பவும் பாராட்டுவார்கள்.ஆனால், அவர்களைப் பட்டினி போட்டுவிடுவார்கள்.

Monday, March 1, 2010

அறிவு : பயம் : கர்வம்அறிவு


பதவிகள் வரும் கூடவே தலைக்கனமும்.


போனபின்பு வரும் மொத்த அறிவும்.


எப்போதும் இயல்பாய் இருப்பவனுக்கு


போகாது அறிவு எந்தக் கணமும்.


பயம்


கனவுகள் வரும் கூடவே பயமும்.


கலைந்த பின்பும் மிச்சமிருக்கும்.


கனவே வராதவனுக்கும் வரும்


எதிர்காலம் பற்றிய பயம்.


கர்வம்


வானத்தில் பறக்கும் பறவைகளுக்கு


பயமிருக்குமா திசை மாறிவிடுவோமோ என்று?


இருக்காது உயர உயரப் பறந்தாலும்


தன்னுள் கர்வத்தை அண்டவிடாததால்.