என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Friday, November 25, 2011

ஜாதகம்

வாசலில் நிழலாடியது. எட்டிப் பார்த்தார் ஏகாம்பரம்.

"இங்கே ஏகாம்பரம்னு?" வந்தவர் இழுத்தார்.

'நான்தான் அது! நீங்க யாருன்னு...?"

"நான் காஞ்சிபுரத்திலிருந்து வர்றேன், ராமமூர்த்தி..."

"வாங்க! என்ன விஷயம்? நான் என்ன செய்யணும்?"

''என் பெண்ணுக்கு  ஒரு வரன் விஷயமா விசாரிச்சிட்டுப்  போகலாம்னு வந்தேன். உங்க நண்பரின் பையன் வேணுவுக்கு  என் பெண்ணைக் கொடுக்கலாம்னு..."

"ஓஹோ? அந்த ஹிப்பித் தலையனுக்கா?"

"பையனை நான் இன்னும் பார்க்கலே . ஜாதகம் பொருந்தியிருக்குங்கற  விஷயத்தைச் சொல்லப்போனேன். அப்போ உங்களைப் பற்றியும் உங்களுக்கு திருமண வயசில் ஒரு பையன் இருக்கிறதையும் சொன்னார்."

"வேறே என்ன சொன்னார்?"

"உங்க பையன் சிகரெட் பிடிப்பானாமே! அவர் பையனுக்கு அதெல்லாம் பழக்கமில்லையாம்."

"அவர் பையன் குடிப்பானே! ஏன் மறைச்சார்?''

"தெரியாது! உங்க பையன் நன்றாக சீட்டு ஆடுவான்கிறதைச் சொன்னார். அவர் பையனுக்கு அதெல்லாம் தெரியாதாம்."

"அவன் பையன் ரேசுக்குப் போயி ஆடுறதைச் சொன்னாரா? இன்னும் என்னென்ன சொன்னார்?"

"ஆபீசில் நிறைய லோன் போட்டிருக்கானாம் உங்க பையன். பிடிப்பெல்லாம் போக கையில் வரும் சம்பளம் ரொம்பக் கம்மியாம்..."

"என் பையனாவது பரவாயில்லை. அவர் பையன் ஈட்டிக்காரனிடம் கடன் வாங்கி மாதா மாதம் வட்டி கட்டவே அவரால் முடியவில்லை. இவர்  என் பையனை குறை சொல்ல வந்துட்டானாக்கும்? வேறே ஒண்ணும் சொல்லலியா?"

"நீங்க உங்க பையனுக்கு வரதட்சணை,சீர் செனத்தின்னு  நிறைய கேட்பீங்களாம்"

"அவரோட பெரிய மருமகள் நிறைய சீர் கொண்டு வரலைன்னுட்டு, அடிக்கடி பிறந்த வீட்டிற்கு துரத்தி சீர் வாங்கிட்டு  வரச் சொல்லி துன்புறுத்தினாரே! இதைச் சொல்ல அவனுக்கு மூஞ்சி ஏது?" வெடித்தார் ஏகாம்பரம்.

"ரொம்ப தேங்க்ஸ்! கல்யாண தரகர் மூலம் கிடைத்த உங்க பையனின் ஜாதகமும் உங்கள் நண்பரின் பையன் ஜாதகமும் என் பெண்ணோட ஜாதகத்தோடு பொருந்தியிருக்கவே  உங்க பையனைப் பற்றி அங்கே இங்கே கேட்டதை  உண்மையான்னு உங்க வாயாலயே தெரிஞ்சிக்கலாமேன்னுதான் இப்படி ஒரு ஏற்பாடோடு வந்தேன். உங்க நண்பரை நான் பார்த்தது கூடக் கிடையாது. இரண்டு பையன்களோட ஜாதகத்தையும் பிட்டுப்பிட்டு வச்சுட்டீங்க. அப்போ நான் வேற இடம் பார்த்துக்கறேன்," என்றவாறே கிளம்பினார் ராமமூர்த்தி.

சிலையானார் ஏகாம்பரம்.  

( "சுமங்கலி" இதழில் வெளியான என் சிறுகதை )

7 comments:

 1. கடைசியில் போட்டாரே ஒரு போடு!

  ReplyDelete
 2. நல்ல கதை...

  இதுக்குப் பேர்தான் “போட்டு வாங்கறதோ!”

  ReplyDelete
 3. மாப்பிள்ளை வீட்டாரிடம் இப்படியும் விசாரிக்கலாமா?
  மிக்க நன்றி.

  ReplyDelete
 4. நல்ல டெக்னிக்தான்.கதை சுவாரசியமாக இருந்தது

  ReplyDelete
 5. இதுதான் போட்டு வாங்குவதா
  சுவாரஸ்யமான கதை
  தொடர வாழ்த்துக்கள்
  த,ம 2

  ReplyDelete
 6. சூப்பர். இப்படிக்கூட விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் போல இருக்கு!

  ReplyDelete
 7. வாயை வச்சுண்டு சும்மா இருந்தாத்தானே இந்த மனுஷன்னு அப்புறம் பாட்டு வாங்கினாரா

  ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "