என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, September 25, 2009

அஸ்தேயம் / மிதஹாரம் என்ன இவைகள்?

சமீபத்தில் யோகாசனம் பற்றிய புத்தகம் ஒன்றை படித்தேன். அதில் மனத்தாலோ, உடலாலோ, செயலாலோ பிறர் பொருள் எதனையும் அபகரிக்காத பெருந்தன்மையை " அஸ்தேயம் " எனப்படுவதாக போடப்பட்டிருந்தது.

இந்த " அஸ்தேயம் " பற்றி யோசித்தேன். இதில் மனம், உடல் ஆகியவற்றை தவிர்த்து செயலால் பிறர் பொருள் எதனையும் அபகரித்தலை திருட்டு என்று அழைக்கிறோம். இந்த திருட்டு தான் எத்தனை வகை? பணம், நகை மற்றும் பொருள்கள் பிறரிடமிருந்து எப்படியெல்லாம் திருடப்படுகின்றன ?

வங்கியில் இருந்து ஒருவர் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வரும் போது அவர் கவனத்தை திசை திருப்ப " சார் உங்க பணம் கீழே விழுந்திருக்கு பாருங்க! " என்பான். அவர் கீழே குனிந்து பணத்தை எடுப்பதற்குள் அவர் வைத்திருந்த பணம் அபேஸ் ஆகியிருக்கும். அதைச் சொன்னவனே கீழே சில ரூபாய் நோட்டுக்களை போட்டுவிட்டு மொத்தமாக அடித்துக்கொண்டு போயிருப்பான். சில நூறுகளுக்கு ஆசைப்பட்டு பல நூறுகளை இழந்திருப்பார்.

"அம்மா இந்த அட்ரஸ் எங்கே இருக்கு பாருங்க! " என்று கேட்பார்கள் பைக்கில் வந்த இருவர். பாவம் உதவலாமே என்று எண்ணி அந்த துண்டு சீட்டை வாங்கி அந்த அம்மா படிப்பதற்குள் அவர் கழுத்தில் அணிந்திருக்கும் ஐந்து பவுன் தங்க செயின் அல்லது தாலியை பறித்துக்கொண்டு சிட்டாய் பறந்துவிடுவார்கள் பைக் ஆசாமிகள். உதவப்போய் இழந்ததுதான் மிச்சம்.

மேலும் தங்க காசு என்று பித்தளை காசுகளை கொடுத்து பல லட்ச ரூபாய்கள் மோசடி, பாலிஷ் போட்டு தருகிறோம் என்று கூறி நகைகளுக்கு பதிலாக பொட்டலத்தில் கல்லைக் கட்டி கொடுத்துவிட்டு டிமிக்கி கொடுத்த ஆசாமி, ரூபாய் நோட்டுக்களை இரட்டித்துத் தருகிறோம் என்று கள்ள நோட்டுக்களை தந்துவிட்டு ஓடிய கும்பல், இன்னும் பலவிதங்களில் மக்களை ஏமாற்றும் ஆசாமிகள் என்று தினமும் பத்திரிக்கைகளில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. மக்கள் ஏமாறாமல் உஷாராக இருப்பதற்காகத்தான் அவைகளை செய்தியாக போடுகிறார்கள். படிக்கும் நாம்தான் அவைகளை கவனத்தில் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும்.

சரி. பஸ்களில் எப்படி பிக்பாக்கெட் அடிக்கிறார்கள் என்பதை பார்ப்போமா? இது நான் கண்ணால் பார்த்த அனுபவம். அதிக கூட்டமுள்ள பஸ்களை தேர்ந்தெடுத்து மூன்று பேர் கொண்ட கும்பல் ஏறும். அதில் முதலாமவன் கண்கள் எல்லாம் சிவந்து குடிகாரன் மாதிரி இருப்பான். இரண்டாமவன் யாரிடம் தேட்டை போடலாம் என்று நோட்டம் விட்டு பாக்கெட்டில் பர்சை வெளியே தெரியும்படி வைத்திருப்பவன் எவனாவது சிக்கி விட்டால் அவன் பக்கத்தில் போய் நிற்பான். இவனிடமிருந்து சிக்னல் வந்ததும் முதலாமவன் முன்னே சென்று அவன் மேல் விழுவான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இரண்டாமவன் பர்சை இரண்டு விரல்களால் லாவகமாக எடுத்து மூன்றாவது ஆளிடம் பாஸ் செய்துவிடுவான். அடுத்த ஸ்டாப்பில் மூவரும் இறங்கி போனதுக்கு அப்புறம்தான் பர்ஸ் போன விவரம் தெரிய வரும். அப்புறமென்ன? குய்யோ! முய்யோ! என்று ஒரே கத்தல்தான். இப்படித்தான் ஒரு முறை சைதாப்பேட்டையில் 5-B பஸ்ஸில் ஒரு காலேஜ் மாணவனிடம் இருந்த பர்சை ஒருவன் எடுக்க இருந்ததை கவனித்த நான் அதை முறியடிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பஸ்ஸில் இல்லாத என் மாமாவிடம் சொல்வது போல "மாமா பர்ஸ் பத்திரம் அதில்தான் என்னோட ரயில் டிக்கெட் பணமெல்லாம் இருக்கு! " என்று ஒரு புருடா விட்டேன். உடனே அந்த மாணவன் உள்பட எல்லோரும் உஷாராகி தங்கள் பொருள்களை பத்திரப்படுத்தி விட்டனர்.

பிக் பாக்கெட் கோஷ்டி பஸ்ஸில் ஏறி இருப்பது தெரிந்தால் கண்டக்டர் "முன்னே போங்க! முன்னே போங்க! " என்று கத்துவார். அவர் காட்டிக்கொடுத்தால் பின்னால் அந்த ரூட்டில் அவர் தொழில் செய்ய முடியாது.

அஸ்தேயம் பற்றி சொன்னீங்க சரி. மிதஹாரம் பற்றி ஒண்ணுமே சொல்லலியேன்னு தானே கேட்கறீங்க? அது வந்துங்க ஒரு கெட்ட செயலைப் பற்றி சொன்னோமே ஒரு நல்ல செய்தியா நாம எப்படி சாப்பிடனும் என்று மிதஹாரம் சொல்லித்தருதேன்னுதான் அதையும் தலைப்பில் சேர்த்து இருக்கேன். ஆகார விஷயத்தில் மிதமான மனப்போக்கு அமையவேண்டும் என்பதை மிதஹாரம் (அதாவது எப்போதும் அரை வயிறு அளவே உணவு உண்ண வேண்டும், மீதமுள்ள அரை வயிற்றை நீருக்காகவும், வாயு சஞ்சாரத்துக்காகவும் ஒதுக்கி விடவேண்டும்) எனப்படுவதாக போடப்பட்டிருந்தது.

என்ன இதை படிக்கும் நீங்கள் இரண்டிலுமே இனி உஷாராக இருப்பீர்கள் தானே?.

11 comments:

  1. //"மாமா பர்ஸ் பத்திரம் அதில்தான் என்னோட ரயில் டிக்கெட் பணமெல்லாம் இருக்கு! " என்று ஒரு புருடா விட்டேன்//

    இது சூப்பர்

    ReplyDelete
  2. உங்கள் எழுத்து மனதைத் திருடினால் தப்பில்லையே ரிஷபன்

    ReplyDelete
  3. //மாமா பர்ஸ் பத்திரம் //
    நீங்கதான் ரியல் ஹீரோ :-)

    ReplyDelete
  4. @@கதிர் - ஈரோடு
    @@rishaban57
    @@SRK

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  5. அஸ்தேயம், மிதஹாரம்... சுவாரஸ்யம், அபாரம்! --கே.பி. ஜனா

    ReplyDelete
  6. @@ K.B.JANARTHANAN

    நன்றி சார் !

    ரேகா ராகவன்

    ReplyDelete
  7. நல்ல கருத்து , நல்ல செய்தி , நல்ல எச்சரிக்கை

    நன்றி
    இவண்
    பா . ஜெய்ஷங்கர்

    ReplyDelete
  8. இப்படி ஒரு நிகழ்வு எனக்கும் நேர்ந்தது. பஸ்ஸில் கையும் களவுமாகப் பிடிபட்ட திருடனை அங்கேயே வீழ்த்தி, அடித்துத் துவைத்தார்கள். அப்போது அவன் சூப்பராக ஒன்று சொன்னானே பார்க்க வேண்டும்... “போங்கய்யா! அவனவன் எம்.எல்.ஏ-ன்னும் மினிஸ்டர்னும் ஆட்சிக்கு வந்து லட்சக்கணக்கா கொள்ளையடிக்கிறான். அவனுங்களுக்கெல்லாம் நீங்க சலாம் போடுவீங்க. நான் என்னவோ பிசாத்து இருநூறு ரூபா பிக்பாக்கெட் அடிச்சுட்டேன்னு என்னை இந்தக் கொல்லு கொல்றீங்க!” பதிவு அருமை ரே.ரா.!

    ReplyDelete
  9. @@ ரவிபிரகாஷ்

    நன்றி சார் .

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  10. தலைப்பை பார்ர்த்தவுடன் இது என்னவோ சமஸ்க்ருத பதிவு நிச்சயம் கொட்டாவி தான் என்று நினைத்தேன். யோகாசனம் பற்றி மட்டும் கூறாமல் பேருந்தில் நடந்த சம்பவத்தை அதனுடன் இணைத்து பிணைத்த பதிவு அருமை. தொடர்ந்து பதிவு செய்யவும்.

    ReplyDelete
  11. சமீபத்தில் ஒரு ஆங்கில படம் பார்த்தேன். அது நூதன திருடர்கள் (Con Men) ரகத்தை சார்ந்த படம். கலிபோர்னியா மாகணத்தில், லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் வாழும் இரண்டு நூதன திருடர்கள் பற்றிய கதை. ஒரு காட்சி - " இருவரும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் முன்னால் நின்று கொண்டு ஒவ்வொரு வீட்டின் கதவு அழைப்பு எண்ணை அழுத்தி யார் பதில் கொடுக்கிறார்கள் என்று பார்ப்பார்கள். ஒரு வீட்டில் பாட்டி பதில் செய்ய அந்த பாட்டியின் பேரன் போல பேசி பாட்டியிடமே போட்டு வாங்கி கார் ரிப்பேர் ஆகி விட்டது ஒரு நூறு டாலர் வேண்டும் நான் என் நண்பனி இங்க விட்டு செல்கிறேன் அவனிடம் பணத்தை கொடுத்து விடவும் என்று கூறுவான். அந்த பாட்டியும் வலையில் விழுந்து பணத்தை கொடுக்க இவர்கள் ஏப்பம் விட்டு இடத்தை காலி செய்வார்கள்". இது போன்ற நூதன திருடர்கள் ரக படங்கள் மிக சுவாரஸ்யம் ஆக இருக்கும்.

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "