"பெண் பார்க்க வரலாமான்னு கேட்டு அந்த தாம்பரம் வரனின் அப்பா போன் பண்ணினார். ஞாயிற்றுக்கிழமை வரச்சொல்லிடலாமா?"
ஆபீஸ் முடிந்து வீட்டுக்குள் நுழைந்ததுமே அப்பா கேட்கவும் எரிச்சலானாள் வனிதா.
" போங்கப்பா. பெண் பார்க்கிறோம் பேர்வழின்னு கும்பலா வந்து பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டுவிடடு வீட்டுக்குப் போய் தகவல் சொலறோம், லெட்டர் போடறோம்னு சொல்றது . அப்புறம் பெண் கொஞ்சம் நிறம் கம்மியா இருக்கா, உயரம் பத்தலைன்னு நொண்டிச் சாக்கு சொல்றதுன்னு இவங்களுக்கு இதே வேலையாப் போச்சு. தண்டச் செலவு. வீண் சிரமம்...இதெல்லாம். எனக்குப் பிடிக்கலை" --- கறாராகச் சொன்னாள்.
" நல்ல குடும்பத்து பையன் . கை நிறைய சம்பாதிக்கிறானாம் . ஏண்டீ இப்படி ஆரம்பத்திலேயே தடங்கல் போர்டு வைக்கறே? " -- அம்மா தன் பங்குக்கு முழங்கினாள் .
" வேணும்ண்ணா ஒண்ணு பண்ணலாம் . அந்த பையனை ஸ்பென்சர் பிளாசாவுக்கு வரச்சொல்லி பார்த்திடறேன். பிடிச்சிருந்தா மத்தவங்களோட வீட்டுக்கு வந்து பார்க்கட்டும். இதுக்கு ஒத்துக்கிட்டா சரி. இல்லேன்னா எனக்கு கல்யாணமே வேண்டாம்."
அம்மா எதிர்த்து ஏதோ சொல்ல அப்பாதான் அந்த பையனிடம் போனில் பேசி அதற்கு சம்மதம் வாங்கினார் .
வெள்ளிக்கிழமை. ஸ்பென்சர் பிளாசாவில் இருந்த அந்த பீட் சா ஹட்டில் வனிதாவையும் அந்த பையனையும் பல ஜோடி கண்கள் பார்க்கத் தவறவில்லை.
சனிக் கிழமையே பதில் வந்துவிட்டது அவனிடமிருந்து. வருத்தம் தெரிவித்து.
அடுத்த வாரத்தில் ஒரு நாள். அதிகாலையிலேயே வந்த தரகர் சொல்லிக் கொண்டிருந்தார்.
'' நேத்து புதுசா ஒரு பையனோட ஜாதகம் வந்தது. ஏற்கனவே பார்த்த எல்லா வரன்களும் தட்டிப்போயிடு ச்சேன்னு ஒரு ஆதங்கத்தோட அவங்க வீட்டில போய் உங்க பெண்ணோட போட்டோவை காண்பிச்சேன். அவங்க அப்பாஅம்மாவுக்கு பிடிச்சது. ஆனா பையன் பார்த்துட்டு `'இந்த பெண்ணை ஸ்பென்சர் பிளாசா பீட்சா ஹட்டில் யாருடனோ பார்த்திருக்கேனே? வேற இடம் இருந்தா சொல்லுங்க'ன்னுட்டான்..."
_______________________________________________________________________
(5.12.10 தினகரன் "வசந்தம்"இதழில் வெளியான என் சிறுகதை)