என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, May 13, 2010

சம்பாத்தியம்


பஸ் ஸ்டாண்டின் எதிரிலிருந்த அந்த ஓட்டலில் எப்போதும் கூட்டம் அலைமோதும். ருசி கண்டவர்கள் மீண்டும் மீண்டும் சாப்பிட வருவதால்தான் அப்படி. ஓட்டலுக்குள் புகுந்த சரவணன் அவனின் அப்பா அங்கு சமையல்காரராக வேலை பார்ப்பதால் நேராக சமையலறைக்குள் சென்றான்.


பொள்ளாச்சிக்கு பக்கத்தில் உள்ள ப.க.புதூர்தான் அவன் சொந்த ஊர்.தென்னந்தோப்பு வைத்திருந்த அவனின் அப்பா மாசிலாமணி அவருடன் கூடப் பிறந்த நான்கு பெண்களையும் கரை சேர்ப்பதுக்குள் எல்லாவற்றையும் விற்றாக வேண்டியதாகிவிட்டது. குடும்பத்தை காப்பாற்ற அந்த ஓட்டலில் சமையல்காரருக்கு உதவியாளனாக வேலைக்கு சேர்ந்து படிப்படியாக முன்னேறி இன்று அந்த ஓட்டலின் சீஃப் குக் ஆக இருந்தார்.


ஒவ்வொரு மாதமும் சம்பள நாள் அன்று மாலை சரவணனை ஓட்டலுக்கு வரச்சொல்லிவிடுவார்.


அன்று சம்பள நாள் என்பதால் வழக்கம் போல சரவணனும் ஓட்டலுக்கு போய் சமையல் அறைக்குள் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த ஸ்டூலில் உட்கார்ந்து அங்கு நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு பக்கம் தோசைக் கல்லில் சாதா, ரவை, ஆனியன் என்று ஆர்டர்களுக்கு தகுந்தபடி வார்த்துக்கொண்டு மறு பக்கம் இட்லி போணியிலிருந்து ஆவி பறக்கும் இட்லிகளை எடுத்துத் தட்டில் கவிழ்த்துக் கொண்டிருந்தார் அவனின் அப்பா. இடையிடையே அடுத்த நாள் காலை தயாராகவேண்டிய ஸ்பெஷல் ஆர்டருக்கு தேவையான சாமான்களுக்கான லிஸ்டை அவரின் உதவியாளருக்கு சொல்லிக்கொண்டிருந்தார். பார்த்துக் கொண்டிருந்த சரவணனால் இருக்க முடியவில்லை. பாவம் என்னை படிக்க வைப்பதுக்காக அப்பா இப்படி நெருப்பில் வேகிறாரே என்று நினைத்துக்கொண்டு முள்ளின் மேல் உட்கார்ந்திருப்பது போலிருந்தான் .


இரவு எட்டு மணி ஆகவும் சரவணனை அழைத்துக்கொண்டு கல்லாவிலிருந்த முதலாளியிடம் போய் " அய்யா சம்பளத்தை கொடுத்தீங்கன்னா இவனை அனுப்பிச்சுடுவேன், அப்புறம் எங்க கிராமத்துக்கு பஸ் கிடையாது" என்றார் மாசிலாமணி.


" இவன் இந்த வருஷம் இன்ஜினியரிங் காலேஜில் சேரப்போறான் இல்லே? நீ கேட்டிருந்த அட்வான்ஸ் பணம் பத்தாயிரமும் தர்றேன். ஆனா லீவு போடாம வேலை செய்யணும் புரிஞ்சுதா ? " என்று சொல்லியவாறே பணத்தை எடுத்துக் கொடுத்தார்.


பணத்தை வாங்கி சரவணனிடம் கொடுத்து அனுப்பிவிட்டு "ரொம்ப நன்றிங்க முதலாளி" என்றார் .


" இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன். ஓவ்வொரு மாசமும் உன் பையனை இங்க வரவைச்சு சம்பளப்பணத்தை கொடுத்தனுப்பணுமா? ஒரு நடை கிராமத்துக்கு போய் உன் பொண்டாட்டிகிட்டே கொடுத்துட்டு வந்தாத்தான் என்ன? " என்று கேட்ட முதலாளியிடம் ...


"நான் படும் கஷ்டம் என் மகன் படக்கூடாதுங்கறதில நான் உறுதியா இருந்தாலும் அவனை பணக்கஷ்டமே தெரியாமல் வளர்க்க நான் விரும்பலை. நான் கஷ்டப்பட்டுத்தான் சம்பாதிக்கிறேன் என்பதை அவனும் உணரணும்கிறதுக்காகத்தான் ஓவ்வொரு மாசமும் சம்பள நாள் அன்று அவனை வரச்சொல்லி சமயலறையில் காக்க வச்சு நான் படற கஷ்டங்களை நேரடியா பார்க்க வைக்கிறதுனால அவனும் அதை உணர்ந்து பொறுப்பா நடந்துகிட்டு நல்லா படிச்சுமுதல் ரேங்க் வாங்கறான் அய்யா" என்றார்.


" நீ ரொம்ப படிக்கலை என்றாலும் வாழ்க்கையை நல்லாவே படிச்சு வச்சிருக்கேய்யா " என்ற முதலாளியை நெகிழ்ச்சியுடன் பார்த்தார் மாசிலாமணி.

-ரேகா ராகவன்.

தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்!

16 comments:

  1. Very good - heart - touching story!!

    ReplyDelete
  2. நீங்க வாழ்க்கையை நல்லாவே படிச்சு வெச்சிருக்கீங்க!

    ReplyDelete
  3. "பொருள் ஈட்டுவதற்கு மற்றும் தன்னை படிக்கவைப்பதுற்கு அப்பா படும் கஷ்டங்களை மகனுக்கு நிழல் படம் போல் காட்டிடும் உக்தி நன்று, ஆனால் அதை புத்திஉள்ள மகன், அப்பா ,தனக்காக படும் இன்னல்களை ஒருமுறை பார்த்தவுடன் புரிந்து கொள்ளலாமே !!

    மந்தவெளி நடராஜன்.

    ReplyDelete
  4. மனதை தொட்ட கதை. எங்கேனும் இது போல் நடந்து கொண்டு தான் இருக்கும்

    ReplyDelete
  5. நல்ல படிப்பினை! கண்டிப்பா குழந்தைகளுக்கு பெரியவங்க படும் பாடு தெரியணும். இல்லாட்டி ஊதாரித்தனமா செலவுகள் ஜாஸ்தி ஆயிடும்.

    ReplyDelete
  6. கேள்வி ஞானத்தை விட உணர்ந்து பெறும் அறிவு சிறந்தது என்பதை உணர்த்திய அற்புதமான ஒரு பக்கக் கதை.

    வெங்கட் நாகராஜ்.

    ReplyDelete
  7. "நான் படும் கஷ்டம் என் மகன் படக்கூடாதுங்கறதில நான் உறுதியா இருந்தாலும் அவனை பணக்கஷ்டமே தெரியாமல் வளர்க்க நான் விரும்பலை.
    உங்க பஞ்ச் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது.

    ReplyDelete
  8. அன்பு ரேகா ராகவன்,
    அருமை!உங்கள் எழுத்துகள் முத்துகள்!
    வாழ்த்துகள்!

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete
  9. என்ன ஒரு அழகான கதை அமைப்பு..
    வாழ்த்துகள்..

    ReplyDelete
  10. 25வது ஒட்டு நம்முடையதுதான்... பதிவு நெகிழ்ச்சியாக இருந்தது...

    ReplyDelete
  11. ////// " நீ ரொம்ப படிக்கலை என்றாலும் வாழ்க்கையை நல்லாவே படிச்சு வச்சிருக்கேய்யா " என்ற முதலாளியை நெகிழ்ச்சியுடன் பார்த்தார் மாசிலாமணி.//////

    இங்கு நம்பிக்கை ஆழமாக வேறுன்றப்பட்டுள்ளது .ம்ம் மிகவும் சிறப்புதான் . பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "