என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, January 14, 2010

குருதட்சணை

கொலுப் படிகளில் ரங்கநாதர், ராமன்,லக்ஷ்மணன், சீதை,முருகன்,காந்தி,நேரு என ஏகப்பட்ட பேர் குழுமியிருந்தார்கள். எதிரே, தரையில் அமர்ந்து 'குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா...' என்ற ராகமாலிகை பாடலில், ஒவ்வொரு ராகத்தையும் சந்தியா வயலினில் கையாண்ட விதத்தில் மயங்கி, 'அடடா! இவங்களுக்குத்தான் எப்பேர்ப்பட்ட சங்கீத ஞானம்? முகத்தில் எத்தனை களை? ' என்று வியந்து அமர்ந்திருந்த கோபாலுக்கு, ஆறு மாதங்களுக்கு முன் இதே இடத்தில் அவளுடன் பேசினவைகள் ஞாபகத்துக்கு வந்தன.

" வயலின் கத்துக்கறதை விட்டுடலாம்னு இருக்கேன் மேடம்!"

"என்ன இது திடீர்னு... என்ன ஆச்சு உங்களுக்கு?"

"இதுக்கு மேலேயும் உங்ககிட்டே தொடர்ந்து வயலின் கத்துக்கிட்டா, அது ரெண்டு பேருக்குமே நல்லாயிருக்காதுன்னு நினைக்கிறேன்."

"நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை. எதுவாக இருந்தாலும், என்னிடம் தயங்காம சொல்லலாம்."

"ஊர்ல நம்ம ரெண்டு பேரையும் இணைச்சுக் கன்னாபின்னான்னு பேசறாங்க!"

"வேலை வெட்டி இல்லாதவங்க எது வேணா பேசிட்டுப் போகட்டும். அதுக்காக நீங்க வயலின் கத்துக்கறதைப் பாதியிலேயே நிறுத்திடறேன்னு சொல்றது எந்த விதத்தில் சரின்னு நினைக்கறீங்க?"

"அது...வந்து..."

"இதோ பாருங்க, கோபால்! நான் பூவும் போட்டும் வச்சு அலங்காரம் பண்ணிக்கிட்டாத்தான் என் கணவருக்குப் பிடிக்கும். இளம் வயசிலேயே நான் விதவை ஆகிட்டாலும், அவரோட நினைவுகளோடையே வாழ்ந்துகிட்டிருக்கறதாலதான், அவர் விருப்பப்படியே இன்னும் அலங்கார பூஷணியா வலம் வந்துகிட்டிருக்கேன். அதே போல இனி நான் யாரையும் மறுமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்பதிலும் உறுதியா இருக்கேன். அவர் இல்லாத வெற்றிடத்தை இசை ஓரளவு நிரப்பும்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. எனக்குத் தெரிந்த வித்தையை உங்களுக்குச் சொல்லிக் கொடுத்துக்கிட்டிருக்கேன். அதை பாதியில் நிறுத்தறது, கருவிலேயே குழந்தையைக் கொல்றதுக்குச் சமம். அந்தப் பாவத்தைச் செய்தவளா நான் ஆகணும்னு நினைச்சா, தாராளமா நின்னுக்குங்க!".

சொல்லிவிட்டு விறுவிறுவென்று மாடிப்படி ஏறிச் சென்ற சந்தியாவை மறுநாள் கோபால் சந்தித்து மன்னிப்புக் கேட்டு, தொடர்ந்து வயலின் கற்று அரங்கேற்றம் செய்தததில் சந்தோஷமானாள்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்திருக்கிறான்.

'குறையொன்றுமில்லை' பாட்டை வயலினில் சந்தியா வாசித்து முடிக்கவும் வராந்தாவிலிருந்து கை தட்டிப் பாராட்டியவாறே வந்து அமர்ந்த பெண்ணை அறிமுகம் செய்தான் கோபால்.

"இவள் கஸ்தூரி. கல்யாணமாகி மூன்றே மாதத்தில், பைக் ஆக்ஸிடென்ட்டில் கணவனைப் பறிகொடுத்தவள். நான் அரங்கேற்றம் முடிச்சு ஊருக்குப் போன இடத்தில் இவளைப் பற்றிக் கேள்விப்பட்டேன். உடனே பார்த்துப் பேசி, பெரியவங்க சம்மதத்தோட தாலி கட்டி, என் மனைவியா உங்களிடம் அறிமுகப்படுத்த அழைச்சுகிட்டு வந்திருக்கேன். நல்ல உறவுகளை கொச்சைப்படுத்தினவங்களுக்கு இதுதான் பதிலாக இருக்கும்னு தோணிச்சு, கூடவே, குருதட்சணையாகவும் அமையும்னு நினைக்கிறேன். எங்களை ஆசிர்வதியுங்கள் மேடம்!" என்றான் கோபால்.

இருவரையும் ஆசிர்வதித்த சந்தியா வாசல் வரை வந்து தயாராக இருந்த ஆட்டோவில் அவர்கள் இருவரும் ஏறி அமர்ந்து, அக்கம்பக்கத்தார்கள் பார்த்துக்கொண்டிருக்க கையசைத்து அவர்களை வழியனுப்பிவிட்டு வீட்டினுள் சென்றாள்.

அவளின் மனசு இப்போது நிறைந்திருந்தது.

( 2006 "ஆனந்த விகடன் " தீபாவளி மலரில் வெளியான என் சிறுகதை )

எந்த வீட்டில் பெண்கள் அவமதிக்கப்படுகிறார்களோ அந்த வீட்டில் எல்லாக் காரியங்களும் அவலமாகும்

11 comments:

  1. வயலின் வாழ்வும் அமர்க்களம்!

    ReplyDelete
  2. நல்லாருக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. "நல்லவர்கள் இன்றும், என்றும் நம்மிடயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.வாழ்க, வளர்க உம தொண்டு"

    மந்தவெளி நடராஜன்.

    ReplyDelete
  4. நறுக்கென்று ஒரு நல்ல பாசிடிவ் கதை.

    ReplyDelete
  5. அருமையான கதை வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. Nalla kathai . Thoadaratum ungal sirukathi pani.

    ReplyDelete
  7. ஒரு அருமையான கதையை படித்த திருப்தி என்னுள்! முடிவு சற்றும் எதிர்பாராதது. இந்த மாதிரி கதைகளை ஆங்கிலத்தில் ஒ.ஹென்றி எழுதுவார் என்று நினைக்கிறேன்!!

    ReplyDelete
  8. அருமையான படைப்பு, மிக்க நன்றி

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "