என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, August 28, 2009

"பா" ... பா...பாம்பு "

1976 --ம் வருடம். கோவை மாவட்டம் பவானிசாகர் அலுவலகத்தில் தலைமை எழுத்தர் ஆக பணியாற்றிக்கொண்டிருந்தேன்.

மதிய உணவுக்காக நான் தங்கியிருந்த வீட்டிற்கு திரும்பி கை கால்களை கழுவிக்கொண்டு சாப்பாட்டுத் தட்டுடன் சமையல் அறைக்குள் நுழைந்து தட்டை வைத்துவிட்டு அருகில் இருந்த பானைக்குள்ளிருந்து தண்ணீர் எடுக்க குனிந்தேன்.

" உஷ் ... " என்றொரு சத்தம். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் தண்ணீர் எடுக்க குனிந்தேன். மீண்டும் உஷ் ...உஷ்...என்று இப்போது சத்தத்தின் தொனி அதிகமாகக் கேட்கவே உஷாராகி சத்தம் வந்த திசையில் உற்றுப் பார்த்தேன்.

அங்கே நான் கண்ட காட்சி.

தண்ணீர் பானையை சுற்றிக்கொண்டு ஒரு பெரிய பாம்பு இருந்தது.

இதற்கு முன் அலுவலக நண்பர்களுடன் இரவு ஏழு மணிக்கு நிலா வெளிச்சத்தில் அலுவலகத்தை ஒட்டிய ஒத்தையடிப் பாதையில் வரும்போது முன்னே பாம்பு கிராஸ் செய்வதை பார்த்து சிறிது நேரம் நின்றுவிட்டு அது போனதும் நடந்து வந்த அனுபவங்கள் உண்டு. வீட்டை சுற்றிலும் உள்ள காலி இடத்தில் காலை பகல் என்று பாராது மூன்று, நான்கு அடி நீள பெரிய பாம்புகள் உலாவுவதையும் பார்த்தவன்தான். ஆனால் தனிமையில் மிக நெருக்கத்தில் பாம்பை பார்த்த நான் பேச்சலர் ஆக இருந்தாலும் பேச்சு இலர் ஆகி உறைந்து நின்றிருந்தேன்.

வெளியே யாரோ என் பெயரை சொல்லி அழைப்பது கேட்கவே அறையை லேசாக சாத்திக்கொண்டு வந்து கதவை திறந்தேன்.

" என்ன சார் பேய் அறைஞ்ச மாதிரி இருக்கீங்க?" என்று கேட்டுவிட்டு உள்ளே நுழைந்த என் அலுவலக நண்பரிடம் " பா... பா...பாம்பு " என்று தட்டுத் தடுமாறி கூறினேன். " எங்கே !எங்கே! " என்று கேட்டவரிடம், அது இருந்த இடத்தைக் காட்ட உடனே அவர் தோட்டத்தில் கிடந்த ஒரு சவுக்குக் கொம்பை எடுத்து வந்து அந்த பானையின் மேல் "படார் " என்று ஒரு போடு போட்டதுதான் தாமதம்.

அடுத்த விநாடி, உடைந்து போன கட்டையின் பாதியை காலால் மிதித்துக்கொண்டே , " சார் ஓடிப் போய் ஒரு இரும்பு தடி இருந்தா கொண்டுவாங்க!" என்றார். அவர் அடித்த அடியில் சவுக்கு கொம்பு இரண்டாக உடைந்து போக பாதியாக கிடந்த கொம்பின் அடியில் உடம்பு மாட்டிக் கொள்ள தலையை தூக்கி படம் எடுத்துக்கொண்டிருந்தது அந்த நான்கு அடி நல்ல பாம்பு.

" இதென்னடா சோதனை!" என்று ஓட்டமாக ஓடி தோட்டத்தில் இருந்த ஒரு இரும்பு குழாயை எடுத்துக்கொண்டு வந்து நடுங்கிக்கொண்டே நண்பரிடம் கொடுக்க வாங்கி ஒரே போடில் அதை எமலோகத்துக்கு அனுப்பி வைத்தார் அவர் .

இதற்குள் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கூடி நாங்கள் அடித்த பாம்பை பார்த்துவிட்டு "என்ன சார் நல்ல பாம்பை அடிச்சுட்டீங்களே!, பாவம் இல்லையா? அதுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை செஞ்சுடுங்க!" என்று சொல்லவும், பழைய வெள்ளை வேட்டியை கிழித்து அதன் மேல் போட்டு எரித்துவிட்டு அரை லிட்டர் பாலை அதன் மேல் ஊற்றிவிட்டு திரும்பினேன்.

இதோடு விட்டதா? மறு நாள் வீடு பூராவும் மஞ்சள் பொடி கலந்த நீரை தெளித்து சுத்தம் செய்தேன். அதற்கடுத்த நாள் அலுவலகம் புறப்படும் சமயம் செருப்பின் அடியில் ஏதாவது இருக்குமோ என்று சந்தேகத்துடன் தூக்கிப் பார்த்தால் பெரிய தேள் ஒன்று குடுகுடுவென்று ஓட அந்த செருப்பாலயே அதை அடித்து போட்டு விட்டு கிளம்பி அலுவலகம் போனால் "சார் உங்களை கடலூருக்கு மாத்திட்டாங்க , உடனே அங்கே ஜாயின் பண்ணச் சொல்லி உத்தரவு வந்திருக்கு!" என்றார்கள்.

"போதும்டா சாமி! என்று மாலையே அங்கிருந்து கிளம்பி மறுநாள் காலை கடலூர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்து மாலையில் நண்பர்களுடன் ஓட்டலுக்கு போய் டிபன் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து அப்போதுதான் வந்த குமுதத்தை வாங்கி பிரித்துப் பார்த்ததும் " ஐயோ! " என்று அலறிக்கொண்டே கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்த என்னை துரத்திக்கொண்டே வந்த நண்பர்களுக்கு தெரியாது நான் பிரித்த பக்கத்தில் ஒரு கதைக்காக படமெடுக்கும் நல்ல பாம்பின் படத்தை ஒரு பக்க அளவில் பெரிதாக போட்டிருந்தது.
பாம்பைக் கண்டால் படை நடுங்குமோ என்னவோ தெரியாது நான் நடுங்கியது சத்தியம். இன்றும் என் வீட்டை சுற்றி போகும் பாம்பை கண்டால் வேடிக்கை பார்ப்பதுடன் சரி. அடிப்பதெல்லாம் மூச்! கிடையவே கிடையாது.

11 comments:

  1. மிஸ்டர் நாகராஜன் பற்றி நல்ல பதிவு. பாம்பானாலும் சரி, நாம் ஆனாலும் சரி. யார் முதலில் ”ஒரே போடு” போடுகிறார்களோ அவர்கள் பிழைத்தார்கள்.

    நேரம் இருந்தால் இதை படியுங்கள். பாம்பாட்டம்:
    http://chithran.blogspot.com/2004/12/blog-post.html

    ReplyDelete
  2. // சித்ரன்//

    வரவுக்கு நன்றி. பாம்பு பற்றி நீங்கள் போட்ட பதிவை (பயத்துடன்?) படித்தேன். அம்மா என்றால் சும்மாவா? உங்கள் பதட்டம் நியாயமானதே. எங்கும் எப்போதும் உஷாராக இருப்பததற்கு இந்த மாதிரி நிகழ்வுகள் ஒரு பாடம்.

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  3. எங்கள் வீட்டை சுற்றி நிறைய பாம்புகள் உண்டு. ஒரு முறை வீட்டுக்குள் புகுந்து விட்ட ஒரு அனகோண்டா சைஸ் நல்ல பாம்பு நான் கதைகள் அடிக்கும் டைப் ரைட்டரின் உருளையில் சுருண்டு கொண்டு அந்தப் பிரந்தியத்தையே மூன்று மணி நேரம் கதி கலங்க வைத்து விட்டது.

    சித்ரன் உங்கள் ”ஒரே போடு” :-)))

    ReplyDelete
  4. பா..ம்பு படிக்கும் பயமே வரல.. சிரிப்பு தான் வந்தது உங்க பக்கம் படிக்க அருமை கீப் இட் அப்

    ReplyDelete
  5. //சத்யராஜ்குமார்//
    //கதைகள் அடிக்கும் டைப் ரைட்டரின் உருளையில் சுருண்டு கொண்டு அந்தப் பிரந்தியத்தையே மூன்று மணி நேரம் கதி கலங்க வைத்து விட்டது.//

    பயங்கரம் அப்புறம்?

    ரேகா ராகவன்

    ReplyDelete
  6. //ரிஷபன் //

    நன்றி வரவுக்கும் கருத்துக்கும்.

    ரேகா ராகவன்

    ReplyDelete
  7. //பேச்சலர் ஆக இருந்தாலும் பேச்சு இலர்//
    ஹி..ஹி...
    கஷ்டத்திலேயும் காமடி

    அருமையா எழுதியிருக்கீங்க

    ReplyDelete
  8. கெட்ட பாம்பாக இருந்தால் அடிக்க வேண்டியதுதான். நல்ல பாம்பை ஏன் சார் அடித்தீர்கள்? சரி, பரிகாரமாக உடனே ‘நீயா’ படம் சிடி வாங்கிப் போட்டுப் பாருங்கள்.

    ReplyDelete
  9. வாங்க கதிர். கருத்துக்கு நன்றி.

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. //ரவிபிரகாஷ்//
    //சரி, பரிகாரமாக உடனே ‘நீயா’ படம் சிடி வாங்கிப் போட்டுப் பாருங்கள்.//

    போங்க சார் . ஒவ்வொரு பின்னூட்டத்திலும் ரொம்ப தமாஷ் பண்றீங்க. கருத்துக்கு நன்றி.

    ரேகா ராகவன்.

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "