என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, September 1, 2012

சென்னை வலைப்  பதிவர்கள் திருவிழாவில் நடந்தது என்ன?

படிக்க வந்துட்டீங்களா? ஹீ..ஹீ... இப்பல்லாம்  இப்படி தலைப்பு வெச்சாத்தான்  நிறைய பேரு படிக்க வருவாங்கன்னு  நானும்  வெச்சுட்டேன்! சரி விஷயத்துக்கு வருவோம்.

பதிவர் மாநாட்டைப் பற்றி எல்லோரும்  ப்ளாக்கில் ரெண்டு மூணு பதிவுக்கு மேலேயே போட்டுட்டாங்க.  படம் பார்த்துட்டு வந்த சூட்டோடு விமர்சனம் போடும் சி.பி.எஸ். மாதிரி இல்லாவிட்டாலும் பரவாயில்லை அடுத்த நாள் அட  அதுக்கு அடுத்த நாளாவது போட்டிருக்க வேண்டாமான்னு நீங்க சொல்வதை கேட்டுக் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. 

26.8.12 அன்று அதிகாலை  மழைத் தூறலுடன் விடிந்தது சென்னை. அது பதிவர் மாநாட்டை வரவேற்று வானம் தூவிய பூ மழை என்று பின்னர் தான் தெரிய வந்தது. அதற்குப் பிறகு இதமான வெயிலுடன் தெளிவான வானம்தான் மாலை வரை!

இரண்டு வாரத்துக்கு முன்பே "வீடு திரும்பல்" மோகன் குமார் அவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இப்படி ஒரு பதிவர் திருவிழா சென்னையில் நடைபெறப் போவதைப் பற்றி கூறி, வயதில் மூத்தப் பதிவர்களை கௌரவப்படுத்துவதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறும்  அன்போடு அழைத்தார்.   எல்லாப் பதிவர்களையும் சந்திக்கும் அழகான சந்தர்ப்பம் இது என்பதால் மிகவும் ஆர்வத்துடன் கண்டிப்பாக கலந்து கொள்வதாக தெரிவித்தேன். 

விழா நடைபெறும் மண்டப  வாசலிலேயே நண்பர் சங்கவி வரவேற்க, மாடியில் நான் வந்திருப்பதை அங்குள்ள பதிவேட்டில் பதிவு செய்துவிட்டு இருக்கையில் அமர்ந்த சில நிமிடங்களிலேயே என் பக்கத்தில் சேட்டை. அட அதாங்க நம்மையெல்லாம் சிரி  சிரின்னு சிரிக்குமாறு  எழுவாரே சேட்டைக்காரன் அவரு தாங்க! அவரிடம் என்னை அறிமுகப்படித்திக்கொண்டு ஒரு ஐந்து நிமிட அளவளாவல். அதன் பின் தமிழ்த் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்க களை கட்டியது பதிவர்கள்  திருவிழா.



"வீடு திரும்பல்" மோகன் குமார் வரவேற்புரையை வழங்க, நிகழ்ச்சிகளை தொகுத்தளிக்கும் பணியை "தூரிகையின் தூறல்" திரு மதுமதி அவர்கள் மிக அழகாக மேற்கொண்டார். "நான் பேச நினைப்பதெல்லாம்" திரு சென்னைப் பித்தன் அவர்கள் தலைமை வகிக்க, "புலவர் கவிதைகள்" திரு சா.இராமாநுசம் ஐயா அவர்களும் "வலைச்சரம்" (மதுரை) திரு சீனா அவர்களும் முன்னிலை வகிக்க நிகழ்சிகள் ஆரம்பமாயின.

இந்த திருவிழா நடை பெற பொருளுதவியும் மற்ற உதவிகளையும் செய்து ஊக்குவித்த "மக்கள் சந்தை டாட் காம்" திரு சீனிவாசன் பதிவர்களுக்கு பயன் பெறும் வகையில் அவர்கள் ஆற்றி வரும் பணிகள் பற்றி விளக்கமாக உரையாற்றினார்.

பின்னர் "பதிவர்கள் சுய அறிமுகம்" நிகழ்ச்சி.  ஒவ்வொரு பதிவரும் மேடையேறி தங்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்புடன் அவர்களின் வலையின் பெயரையும்  (சிலர்  ரத்ன சுருக்கமாக) சொல்லிச் சென்றது இது நாள் வரை வலைப்பூவில் படித்த படைப்புகளுக்குண்டான  சொந்தக்காரர்களை நேரில் பார்த்து மகிழும் சந்தர்ப்பத்தை அளித்தது.   தொகுத்து வழங்கும் பணியை சென்னை திரு "கேபிள் சங்கர்", திரு சி.பி.செந்தில் குமார் (அட்ரா சக்க) ஈரோடு,மற்றும் சங்கவி கோவை அவர்களும் மேற்கொண்டு நிகழ்ச்சியை மேலும் கலகலப்பாக்கினார்கள்.



"ஆயிரத்தில் ஒருவன்" வலையின் சொந்தக்காரர்  மணி அவர்களின் கை வண்ணத்தில் தயாரான மதிய  உணவு உண்மையில் "அறுசுவை"தான் என்பதை ருசித்து சாப்பிட்ட எல்லா பதிவர்களின் முகத்திலும் தெரிந்தது. அவருக்கு தனியாக ஒரு "சபாஷ்".

அடுத்தது  மூத்த பதிவர்களுக்கான பாராட்டு விழா.  வரவேற்புரையை "மின்னல் வரிகள்" பால கணேஷ் நிகழ்த்த திரு சுரேகா அவர்கள் நிகழ்ச்சியை மிகவும் சுவைபட தொகுத்தளித்தது மிகவும் நன்றாக இருந்தது.. மூத்த பதிவர்களை ஒவ்வொருவராக மேடைக்கு அழைத்து அவர்களைப் பற்றிய சுவையான சங்கதிகளை தெரிவித்து அவர்களுக்கு  சக பதிவர்களைக் கொண்டு பொன்னாடை போர்த்தி சிறப்பு அழைப்பாளர் எழுத்தாளர் மற்றும் திரைப்பட வசனகர்த்தா திரு பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களால் நினைவுப் பரிசை வழங்கி கௌரவித்தது  எல்லோராலும் பாராட்டப்பட்ட மறக்கமுடியாத நிகழ்வு. இது வரை எந்த பதிவர் விழாவிலும் நடைபெறாதது.  

அதன் பின்னர் "தென்றல்" திருமதி சசிகலா சங்கர் அவர்கள் எழுதிய "தென்றலின் கனவு" கவிதைத் தொகுப்பை பட்டுக்கோட்டை பிரபாகர் வெளியிட சேட்டைக்காரன் பெற்றுக் கொண்டார். அடுத்து   திரு சா.இராமாநுசம் ஐயா அவர்கள் தலைமை வகிக்க "தீதும் நன்றும் பிறர் தர வாரா" திரு ரமணி மற்றும் கவிஞன் கணக்காயன் முன்னிலை வகிக்க பதிவர் கவிஞர்கள் கவிபாட கவியரங்கம் களை கட்டியது. 



பிறகு மைக்கை பிடித்த பட்டுக்கோட்டை பிரபாகர்  அந்த காலத்து கையெழுத்துப் பத்திரிக்கையே வலைப்பூவின் முன்னோடி என்பதில் ஆரம்பித்து இதை இன்னும் என்னென்ன செய்து சிறப்பாக்கலாம் என்பது வரை பேசி ஒரு அரை மணி நேரத்துக்கு சபையினரை தன் அருமையான பேச்சால் கட்டிப் போட்டார். விழாவில் அவர் வெளியிட்ட கவிதைப் புத்தகத்திலிருந்த சில கவிதைகளைப் பற்றி சிலாகித்துப் பேசினார்.

பிரபல பதிவர்கள் லதானந்த், கேபிள்  சங்கர், மற்றும் ஜாக்கி சேகர் ஆகியோர் வந்திருந்து விழாவில் கலந்து கொண்டது நிகழ்ச்சிக்கு மேலும் சுவை கூட்டியது. அழைப்பிதழில் குறிப்பிட்ட நேரத்தில் விழாவை ஆரம்பித்ததும் முடித்ததும் நேர நிர்வாகத்துக்கு இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் விதைத்தது.

மொத்தத்தில் புண்ணியகோட்டி திருமண மண்டபத்தில்  நடந்த பதிவர் திருவிழாவில் கலந்து கொண்டதற்கு முன் ஜென்மத்தில் நான் ஏதோ புண்ணியம் செய்திருக்கவேண்டும்.  

10 comments:

  1. எதிர்பார்த்த பதிவு. விழா நிகழ்வுகளை அழகாய்ப் படம் பிடித்து காட்டிய பதிவு.

    உங்களுக்கும் மூத்த பதிவர்களுக்கான மரியாதை கிடைத்ததில் மகிழ்ச்சி.

    த.ம. 1

    ReplyDelete
  2. உங்கள் பார்வையிலும் பதிவர் மாநாடு பற்றி படிக்க ஆசைப்பட்டேன்..
    நன்றி.. அழகாய்த் தொகுத்து தந்ததற்கு.

    ReplyDelete
  3. அன்று மதியம் மின்விசிறி வேண்டி வந்து யதேச்சையாய் நான் அமர்ந்த இருக்கையின் பக்கத்துக்கு இருக்கையில் நீங்கள் இருந்ததும், உங்களின் அறிமுகமும் அன்றைய சந்தோஷங்களில் ஒன்று...:)

    ReplyDelete
  4. நல்ல விளக்கம்...

    /// நான் ஏதோ புண்ணியம் செய்திருக்கவேண்டும். ///

    'நச்' என்று முடித்து விட்டீர்கள்... என்னையும் சேர்த்துக்கோங்க...

    நன்றி... வாழ்த்துக்கள்...

    (இன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி Widget வேலை செய்யவில்லை... சரியாகும் வரை ப்ளாக்கில் இருந்து எடுத்து விடவும்...
    Caution : Restore/Backup your HTML, before editing :

    (1) Edit html Remove Indli Vote button script

    (2) Remove Indli Follow Widget

    தளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...)

    ReplyDelete
  5. மானசீக குருவான உங்களை அன்று தான் நேரில் பார்த்தேன்; விழா முழுமைக்கும் இருந்தது மிக மகிழ்ச்சி

    ReplyDelete
  6. அருமையான சந்திப்பு!

    ReplyDelete
  7. நிகழ்ச்சியை திட்டமிட்டு நடத்தியவர்கள் பாராட்டுக்குரியவர்கள். உங்களைப் போல் கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள் நன்றிக்குரியவர்கள்.

    ReplyDelete
  8. தங்களின் பார்வையில் பதிவர் விழா கண்டேன்... ரசித்தேன் .....

    ReplyDelete
  9. மிக அழகாழ் தொகுத்து அளித்துள்ளீர்கள் ராகவன் சார்..
    மிக்க நன்றி...

    ReplyDelete
  10. லேட்டா எழுதினாலும் லேட்டஸ்டா ஆரம்பம் முதல் நிகழ்ச்சி முடிவு வரை எழுதிருக்கீங்க.

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "