என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, December 28, 2011

மைனர்


"தம்பி ஊருக்குப் புதுசா... எந்த ஊரு...?"  என்று கேட்டார் மைனர்.

"வாங்க அண்ணே! நமக்குச் சொந்த ஊரு திருச்சி பக்கமுங்க.  போன புதன்கிழமைதான் 

கடையைத் திறந்தேன். ஒரு தடவையாவது நீங்க அவசியம் நம்ம கடைக்கு விஜயம்

செய்யனும்..." என்றான் ஆறுமுகம்.

"வர்றேன்! வர்றேன்! அதைச் சொல்லிட்டுப் போகத்தானே வந்திருக்கேன். நாளைக்குக் காலைல சரியா ஒன்பது மணிக்கு வந்துடறேன். ஸீட்டைக் காலியா வச்சிரு. எனக்கு முடி வெட்டிட்டு அப்புறம் அடுத்தவனுக்குச் செய். என்ன, நான் சொல்றது புரியுதா...?" என்றார் மைனர்.

"நாளைக்கா...? நாளை செவ்வாய்க் கிழமை நம்ம கடைக்கு லீவு அண்ணே! புதன் கிழமை வாங்க..." என்றான் ஆறுமுகம்.

"யார்ரா இவன், சுத்த புரியாதவனா இருக்கானே! டேய் லோட்டா...! நம்மளைப் பத்தி இவனுக்குக் கொஞ்சம் எடுத்துச் சொல்லுடா!" - என்றவாறே புறப்பட்டுப் போனார் மைனர்.

"தம்பி... நம்ம ஊரு மைனர் சொன்னா சொன்னதுதான்... அவரை எதிர்த்துக்கிட்டு யாரும் இந்த ஊர்ல வாழ்ந்ததுமில்லே... வாழப்போறதும் இல்லே! மரியாதையா நாளைக்குக் காலைலே ஒன்பது மணிக்கெல்லாம் கடையைத் திறந்து எல்லாத்தையும் ரெடி பண்ணி வெச்சுரு... அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்... முடி வெட்டிட்டு தப்பித் தவறி மைனர் கிட்டே பணம் கிணம் கேட்டுடாதே... அப்புறம் உன் கடையே காலியாயிடும்!" என்றான்  லோட்டா என்று மைனரால் அழைக்கப்பட்ட பரமசிவம்.

றுநாள்...

செவ்வாய்க்கிழமைதான் என்றாலும் ஆறுமுகத்தின் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. உள்ளே உட்கார இடமில்லாமல் நிறைய பேர் வெளியே நின்றிருந்தார்கள்.

'இன்று எல்லோருக்கும் இலவசமாக முடி வெட்டப்படும்!
என்று எழுதி ஒரு பெரிய போர்டு கடைக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டிருந்தது!

தனக்கு மட்டுமே ஸ்பெஷல் மரியாதை கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்த மைனருக்கு

ஆறுமுகம் வைத்திருந்த போர்டும், கடையில் நின்றிருந்த கூட்டமும் அதிர்ச்சியைத் 

தந்தன!

"டேய்... லோட்டா...!" என்று ஆத்திரத்தோடு கத்தினார்.

"சொல்லுங்க அண்ணே..." என்று மைனர் எதிரில் பவ்யமாக நின்றான் லோட்டா.

"இப்படி எல்லாரும் பயந்து  பயந்து எனக்கு ஜால்ரா அடிச்சே என்னை எதுக்கும் உதவாத பயலா ஆக்கிட்டீங்கடா... நேத்திக்கு வந்தவன் என் முகத்துல கரியைப் பூசிட்டாண்டா..." என்று சொன்ன மைனரின் குரலில் வருத்தம்.

"யாரு அண்ணே அவன்...?"

"நம்ம ஊர்ல புதுசா சலூன் திறந்திருக்கானே ஆறுமுகம்... அவன்தான்... அவன் எனக்கு நல்லா பாடம் கற்பிச்சுட்டான்... இந்த ஊர்லே எனக்கு இனிமே மரியாதை இல்லாம செய்துட்டான்... நான் இந்த ஊரைவிட்டே போயிடப் போறேன்... போற இடத்துலே புது மனுஷனா வாழப் போறேன்..."

- சொன்ன மைனரை வியப்போடு பார்த்தான் லோட்டா என்ற பரமசிவம்.

( ஆனந்தவிகடனில் வெளியான என் முதல் கதை - 30.10.88 இதழ் ) 


7 comments:

  1. இப்படி எல்லாரும் பயந்து பயந்து எனக்கு ஜால்ரா அடிச்சே என்னை எதுக்கும் உதவாத பயலா ஆக்கிட்டீங்கடா

    Super Eyeopening!

    ReplyDelete
  2. மைனர் கதை மேஜர் திருப்தி தந்தது...

    ReplyDelete
  3. கதை மைனர் பற்றியதாக இருந்தாலும் சொன்ன விஷயம் பெரியது.....

    நல்ல கதை பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. சார் 23 வருஷத்துக்கு முன் வந்த கதையா.. அதுவும் விகடனில் அடேங்கப்பா !!

    ReplyDelete
  5. ஆச்சரியமாக இருக்கிறது - சேமித்து வைத்திருக்கிறீர்களே!

    level field சூட்சுமத்தை அழகான கதையில் சொல்லியிருக்கிறீர்கள்.

    [புத்தாண்டு வாழ்த்துக்கள்]

    ReplyDelete
  6. நல்லதொரு கதை. இனி மைனர் நல்ல மனிதராகி விடுவார்.
    இவ்வளவு வருடம் கழித்தும் அந்த பக்கத்தை பத்திரப்படுத்தியுள்ளது ஆச்சரியம்.

    ReplyDelete
  7. அருமை.
    சமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க நண்பரே..
    http://dohatalkies.blogspot.com/2012/07/schindlers-list_1072.html

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "