என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, February 5, 2010

'அரசு'வும் நானும்

அது 1975-ம் வருடம். உதவியாளராக பொள்ளாச்சியில் பணியேற்ற போது என்னுடன் பணி புரிந்த நண்பர்களில் திரு எஸ்.முத்துகுமாரசாமி ஒருவர். அவர் 'முல்லை மணாளன்' என்ற புனைப் பெயரில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி பல பரிசுகளை அள்ளியவர்.

நான் அவ்வப்போது சொல்லும் கருத்துக்களை கேட்டுவிட்டு "சார் நீங்க ஏன் பத்திரிகைகளுக்கு எழுதக் கூடாது ?"என்று கேட்பார். "அட போங்க சார்! நானாவது எழுதறதாவது? கிண்டலடிக்கறீங்களா?" என்று சிரித்துக்கொண்டே போய்விடுவேன்.

ஒரு நாள் ஒரு போஸ்ட் கார்டில் 'குமுதம்' விலாசத்தை எழுதிக் கொண்டுவந்து " சார் இதில் உங்களுக்குத் தோன்றும் கேள்விகளை எழுதுங்கள், மற்றதெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்!" என்றார். அவர் சொன்ன மாதிரியே முழு பக்கமும் கேள்விகளால் நிரப்பி ஒரு முன் எச்சரிக்கையாக என் பெயருக்குப் பதிலாக கே.பகவான், பொள்ளாச்சி என்று போட்டு அனுப்பிவிட்டேன்.

என்ன ஆச்சரியம்? அடுத்தவாரம் குமுதத்தில் அரசு கேள்வி-பதிலில் என்னுடைய முதல் கேள்வியையே போட்டு அதற்கு பதிலும் கொடுத்திருந்தார்கள். 'பார்த்தீங்களா, என்னவோ சொன்னீங்களே!' என்று அந்த நண்பர் சொல்லவும் சந்தோஷத்தில் என்ன பதில் சொல்வதென்பதே எனக்கு தோணவில்லை.

அப்புறமென்ன? வாரா வாரம் கே. பகவான் பொள்ளாச்சி, ரேகா ராகவன், கோவை என்று அரசு பதில்களில் தோன்றி ஒரே ஆரவாரம்தான். அப்போதெல்லாம் குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலையில் உள்ள முதல் எழுத்து 'அ'-வும், ரா.கி.ரங்கராஜனில் உள்ள 'ர'-வும் . ஜா.ரா.சுந்தரேசனில் உள்ள 'சு'-வும் சேர்த்து மூவரும் வாசகர்களின் கேள்விகளுக்கு 'அரசு' பதில்கள் என்று அளிக்கிறார்கள் என்பதாக ஒரு செய்தி உலா வந்துகொண்டிருந்தது. (பின்னால் அது எஸ்.ஏ.பி தான் என்பது குமுதத்திலேயே வெளியானது.)

அப்போதே அவர் பதில் அளிக்கும் விதத்தை கூர்ந்து கவனித்து எனது எழுதும் திறமையை வளர்த்துக்கொண்டு அதிலிருந்து வாசகர் கடிதம், சிரிப்பு, துணுக்குகள் என்று உலா வர ஆரம்பித்து சிறுகதைக்குள்ளும் புகுந்து பார்த்துவிட்டு இப்போது ப்ளாக்குக்குள்.

கேள்விகளுக்கு அரசு அளிக்கும் பதில்கள் சிரிக்க வைக்கும் அதே நேரத்தில் சிந்திக்கவும் வைக்கும். உதாரணத்துக்கு 'நகை உங்களுக்குப் பிடிக்குமா? ' என்ற என் கேள்விக்கு ' ஊஹூம் நான் போட்டுக் கொள்வதில்லை' என்று அவர் பதில் அளித்திருந்தார். இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். பொன் நகை மற்றும் நகைச்சுவை இவைகளை கருத்தில் கொண்டு பொதுவாக 'நகை' என்று குறிப்பிட்டிருந்தேன். அவரும் 'ஊஹூம் நான் போட்டுக் கொள்வதில்லை' என்று நகையையும் நகைச்சுவையையும் நான் போட்டுக்கொள்வதில்லை என்று இரு பொருள்பட பதில் அளித்து அசர வைத்தார். என் கேள்விகள் சிலவற்றையும் அதற்கு 'அரசு' அளித்த பதில்களையும் அதிலிருந்து தொகுத்து கீழே தந்துள்ளேன்.

<><><><><><><><><><><><><><><><><><><><><>

கே: என் மனைவி எனக்கு முன்னதாகவே சாப்பிட்டுவிடுகிறாள்.

ப: சமையல் பரவாயில்லை என்று சர்டிபிகேட் கொடுத்தாரா? அதல்லவா முக்கியம்?

<><><><><><><><><><><><><><><><><><><><><>


கே: திருமணங்களில் 'டும் டும்' கொட்டக்கூடாது என்று ஓர் உத்தரவு போட்டால்?

ப: காது பாதி செவிடாகாவிட்டால் நமக்குக் கல்யாணத்துக்குப் போய் வந்த திருப்தியே இருப்பதில்லை. இது மரபு. மாநாய்கன் பெண்ணுக்கும் மாசாத்துவான் மகனுக்கும் நடந்த திருமணத்தின்போது 'முரசு இயம்பின, முருடு (மத்தளம்) அதிர்ந்தன" என்று வர்ணிக்கிறார் இளங்கோ அடிகள்.
<><><><><><><><><><><><><><><><><><><><><>


கே: 'ப்ரா' வைக் கண்டுபிடித்தவன் எவன்?

ப: எவனாக இருந்தால் என்ன, அவன் வாழ்க.

<><><><><><><><><><><><><><><><><><><><><>


கே: சுத்தமான ஆங்கிலத்தில் எழுத இங்கிலிஷ்காரனாக இருக்க வேண்டும் என்பது அவசியமா?

ப: ஹிக்கின்ஸ் பாகவதர் பாடுகிறார், நம்பமுடியாத அளவுக்கு அற்புதமாகப் பாடுகிறார். ஆனாலும் கிளிப்பிள்ளை கிளிப்பிள்ளைதானே?


<><><><><><><><><><><><><><><><><><><><><>


கே. பெண்கள் வாய்ஸ் மட்டும் ஸ்வீட்டாக இருக்கக் காரணம்?

ப: வாய்ஸ் ' மட்டும் ' என்ன மட்டும்? முழுக்கவே ஸ்வீட்தான். (ஆண் குரலோடு ஒப்பிட்டுக் கேட்கிறீர்களா? ஸீரியஸ் கேள்வியா? குரல்வளையில் திரை மாதிரி இரண்டு சவ்வு உண்டு. காற்று வெளியேற்றப்படும்போது அவை அதிர்வதால் ஓலி உதிக்கிறது--வீணைத் தந்தி மீட்டப்பட்டதும் நாதம் ஜனிப்பது போல. ஸ்வீட் ரகசியம்: ஜேசுதாசின் குரல் வளையிலுள்ள திரையைவிட, எஸ்.ஜானகியின் குரல் வளையிலுள்ள திரை மெல்லியது, நீளம் குறைவானது.)

<><><><><><><><><><><><><><><><><><><><><>


கே: நீங்கள் படமெடுத்தால் என்ன ?

ப: எடுத்து என்ன பயன்? என் பல்லில் விஷம் இல்லையே.

<><><><><><><><><><><><><><><><><><><><><>

கே: எங்கள் பாட்டி சொர்கத்துக்குப் போனாளா அல்லது நரகத்துக்குப் போனாளா என்று எப்படித் தெரிந்து கொள்வது?

ப: உங்கள் பாட்டி எந்தத் திசையில் சென்று கொண்டிருந்தார் என்பது அவர் உயிரோடிருக்கும் போதே உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே?

<><><><><><><><><><><><><><><><><><><><><>

கே: எப்போதும் சோகமாக முடிவது ஏது?

ப: வாழ்க்கை.


<><><><><><><><><><><><><><><><><><><><><>

கே: வாழ்க்கை எப்போது கசக்கிறது?எப்போது இனிக்கிறது ?

ப: இளமை அனுபவம் ஒன்றைச் சொல்கிறேன். நாலைந்து நண்பர்கள் நாங்கள். ஒருவர் தங்கக் கட்டி. அவரைக் கோட்டா பண்ணுவது, மற்றவர்களது அன்றாட பொழுது போக்கு. அவர் சிரிப்பு மிஷின். ஒன்றும் பொருட்படுத்தாமல் சிரித்துக்கொண்டே இருப்பார். நான் மற்றவர்கள் கலந்து கொள்ளும் கேலியில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருப்பேன். ஒரு நாள், அவரை நாமும் கிண்டல் செய்தால் என்ன என்று ஒரு ஆசை உண்டாயிற்று. சிரித்துக்கொண்டே ஏதோ சொல்லி வைத்தேன். பளிச்சென்று ஒரு பதிலடி கொடுத்தாரே பார்க்க வேண்டும். உலகத்து அசடெல்லாம் என் முகத்துக்கு வந்துவிட்டது. வாயில்லாப் பூச்சிகளிடம் கூட அனாவசியமாக வாயை கொடுக்கலாகாது என்று உபயோகமான தீர்மானத்துக்கு வர அன்றைய அனுபவம் எனக்குத் துணை செய்தது. குட்டுப்படும்போது வாழ்க்கை கசக்கிறது. பாடத்தைக் கற்றுக் கொண்டு அதன்படி நடக்கும்போது இனிக்கிறது.

12 comments:

  1. அடேங்கப்பா.. இவ்வளவு கேள்விகளா? உண்மையில் நீங்கள் கேள்வியின் நாயகன் தான் !!!

    ReplyDelete
  2. சார் அருமை. இவ்ளோ கேள்விகள் பிருசரம் ஆயிருக்கே! எனது அண்ணனின் கேள்விகளும் நிறைய வந்துள்ளது (அவரும் அரசு துறை தான்!!)

    S.A.P. ஒரு ஜீனியஸ்

    ReplyDelete
  3. அரே பகவான்.. நிம்பள்கி தான் எத்தனை திறமை.. ஸும்மா கலக்கறான்.. நம்பள்கி தோஸ்த்னு சொல்லிக்க ஒரே பெருமை..

    ReplyDelete
  4. "எனது எழுதும் திறமையை வளர்த்துக்கொண்டு அதிலிருந்து வாசகர் கடிதம், சிரிப்பு, துணுக்குகள் என்று உலா வர ஆரம்பித்து சிறுகதைக்குள்ளும் புகுந்து பார்த்துவிட்டு இப்போது ப்ளாக்குக்குள்."

    தோழர் !
    ரேகா ராகவன் அவர்களே ப்ளாக்கிலும்
    உங்களின் அடுத்த பதிவை எதிர்பார்கிறேன்
    ஆவலுடன்.

    ReplyDelete
  5. இவ்வளவு கேள்விகளை “அரசு”விடம் கேட்டு அந்த கேள்விகளுக்கு பதிலும் பெற்ற உங்களுக்கு “கேள்வியின் நாயகன்” என்ற பட்டம் சால பொருந்தும்....

    ReplyDelete
  6. அரசு கேள்வி பதில்களில் ‘ஹி... ஹி...’தான் ரொம்ப ஃபேமஸ்!

    ReplyDelete
  7. அரசுவின் அற்புதமான பதில்களை பெற அழகாக கேள்வி கேட்கத் தெரிந்திருக்க வேண்டும். அந்தக் கலை அற்புதமாக உங்களுக்கு கை வந்திருக்கிறது. உங்களைப் பார்க்க பொறாமையாக இருக்கிறது.

    ReplyDelete
  8. நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. கலக்குறீங்க சார். ... நல்லா சுவராஸ்யமா...

    ReplyDelete
  10. நீங்கள் பல வகைப்பட்ட சாயாக்கள் போடுவதில் வல்லுனராமே?
    அரசு பாணியில் பதில்...

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "