என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, April 17, 2011

கடப்பா செய்வது எப்படி?


நாகப்பட்டினத்தில் நான் பணி புரிந்த போது பெருமாள் கோயில் எதிரே உள்ள "லக்ஷ்மி கபே"-யில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். வாரம் ஒரு முறை காலையிலோ அல்லது மாலையிலோ அங்கே "கடப்பா" என்று ஒன்று போடுவார்கள். இட்லி, பூரி, தோசைக்கு தொட்டுக்கொள்ள இது ஜோராக இருக்கும். மற்ற நாட்களில் வராதவர்கள் கூட அன்று தவறாமல் ஆஜராகி விடுவார்கள். சின்ன வயசில் விழுப்புரத்தில் படித்த போது இதை ருசித்திருக்கிறேன். அதன் பின்பு இங்கேதான் சாப்பிடும் பாக்கியம் கிடைத்தது. யான் பெற்ற சுவையை நீங்களும் பெற வேண்டும் என்பதற்காக அதன் செய் முறையை கீழே தந்துள்ளேன்:-

கடப்பா

தேவையான பொருள்கள் :

உருளைக்கிழங்கு : இருநூறு கிராம்
பெரிய வெங்காயம் : முன்னூறு கிராம்
பயத்தம் பருப்பு : நூறு கிராம்
பூண்டு : எட்டு பல்
பச்சை மிளகாய் : ஆறு
தேங்காய் : அரை மூடி
பட்டை : பத்து கிராம்
லவங்கம் : பத்து கிராம்
கசகசா : இருபது கிராம்
பொட்டு கடலை : ஐம்பது கிராம்
மஞ்சள் தூள் : ஒரு டீ ஸ்பூன்
எண்ணெய் : இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
எலுமிச்சம் பழம் : அரை மூடி


செய்முறை:முதலில் பயத்தம் பருப்பையும் உருளைக் கிழங்கையும் வேகவைத்துக் கொள்ளவும்.தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு பொட்டுக் கடலை, தேங்காய்த் துருவல், 4 பல் பூண்டு, கசகசா, பச்சை மிளகாய்இவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதன் பின்பு வாணலியில் எண்ணை வைத்துக் காய்ந்ததும், 4 பல் பூண்டு போட்டு சிவக்க வறுத்து , பின் பட்டை, இலவங்கம், நறுக்கிய வெங்காயம் என்ற வரிசையில்சேர்த்து வதக்கவும்.வெங்காயம் சிவந்ததும், வேகவைத்த பயத்தம்பருப்பு, 2 கப் தண்ணீர், உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.கொதிக்க ஆரம்பித்ததும், உதிர்த்து வைத்துள்ள உருளைக் கிழங்கு, அரைத்துவைத்துள்ள மசாலாவைச் சேர்த்து மேலும் சில நிமிடங்களுக்குக் கொதிக்கவைத்துஇறக்கவும்.இறக்கிய சூட்டோடு எலுமிச்சம் பழம் 1/2 மூடி பிழிந்து, கொத்தமல்லித் தழையை அதன் மேல் தூவி விடுங்கள். கடப்பா ரெடி. செய்யுங்க , சாப்பிடுங்க ,அசத்துங்க


(இது ஒரு மீள் பதிவு)

Wednesday, December 8, 2010

சந்திப்பு



"பெண் பார்க்க வரலாமான்னு கேட்டு அந்த தாம்பரம் வரனின் அப்பா போன் பண்ணினார். ஞாயிற்றுக்கிழமை வரச்சொல்லிடலாமா?"

ஆபீஸ் முடிந்து வீட்டுக்குள் நுழைந்ததுமே அப்பா கேட்கவும் எரிச்சலானாள் வனிதா.

" போங்கப்பா. பெண் பார்க்கிறோம் பேர்வழின்னு கும்பலா வந்து ஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டுவிடடு வீட்டுக்குப் போய் தகவல் சொலறோம், லெட்டர் போடறோம்னு சொல்றது. அப்புறம் பெண் கொஞ்சம் நிம் கம்மியா இருக்கா, உயரம் பத்தலைன்னு நொண்டிச் சாக்கு சொல்றதுன்னு இவங்களுக்கு இதே வேலையாப் போச்சு. தண்டச் செலவு. வீண் சிரமம்...இதெல்லாம். எனக்குப் பிடிக்கலை" --- கறாராகச் சொன்னாள்.

" நல்ல குடும்பத்து பையன். கை நிறைய சம்பாதிக்கிறானாம். ஏண்டீ இப்படி ஆரம்பத்திலேயே தடங்கல் போர்டு வைக்கறே? " -- அம்மா தன் பங்குக்கு முழங்கினாள்.

" வேணும்ண்ணா ஒண்ணு ண்ணலாம். அந்த பையனை ஸ்பென்சர் பிளாசாவுக்கு வரச்சொல்லி பார்த்திடறேன். பிடிச்சிருந்தா மத்தவங்களோட வீட்டுக்கு வந்து பார்க்கட்டும். இதுக்கு ஒத்துக்கிட்டா சரி. இல்லேன்னா எனக்கு கல்யாணமே வேண்டாம்."

அம்மா எதிர்த்து ஏதோ சொல்ல அப்பாதான் அந்த பையனிடம் போனில் பேசி அதற்கு சம்மதம் வாங்கினார்.

வெள்ளிக்கிழமை. ஸ்பென்சர் பிளாசாவில் இருந்த அந்த பீட்சா ஹட்டில் வனிதாவையும் அந்த பையனையும் பல ஜோடி கண்கள் பார்க்கத் தவறவில்லை.

சனிக் கிழமையே பதில் வந்துவிட்டது அவனிடமிருந்து. வருத்தம் தெரிவித்து.

அடுத்த வாரத்தில் ஒரு நாள். அதிகாலையிலேயே வந்த தரகர் சொல்லிக் கொண்டிருந்தார்.

'' நேத்து புதுசா ஒரு பையனோட ஜாதகம் வந்தது. ஏற்கனவே பார்த்த எல்லா வரன்களும் தட்டிப்போயிடுச்சேன்னு ஒரு ஆதங்கத்தோட அவங் வீட்டில போய் உங்க பெண்ணோட போட்டோவை காண்பிச்சேன். அவங் அப்பாஅம்மாவுக்கு பிடிச்சது. ஆனா பையன் பார்த்துட்டு `'ந்த பெண்ணை ஸ்பென்சர் பிளாசா பீட்சா ஹட்டில் யாருடனோ பார்த்திருக்கேனே? வேற இடம் இருந்தா சொல்லுங்க'ன்னுட்டான்..."

_______________________________________________________________________

(5.12.10 தினகரன் "வசந்தம்"இதழில் வெளியான என் சிறுகதை)

Tuesday, December 7, 2010

"டெல்லி கணேஷும் நானும் "




அவ்வை ஷண்முகி படத்தில் நடிகர் டெல்லி கணேஷை மணிவண்ணன் கோஷ்டியினர் தெளிய வைத்து அடிக்கும் காட்சியில் அவரது நடிப்பு மட்டும் தனித்து தெரியும். அதை இப்போது நினைத்தாலும் எனக்கு குபுக் என்று சிரிப்பு வருகிறது.

கடந்த ஞாயிறு அன்று அவர் அம்பத்தூர் ஹுமர் கிளப் நடத்திய கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அப்போது அவர் சில நகைச்சுவையான காட்சிகளை விவரித்தார். அது...

ஒரு நாள் ஏ.வி.எம் படப்பிடிப்பு நிலையத்தின் பின் புறம் உள்ள சுடுகாட்டில் ஒரு படத்துக்கான ஷூட்டிங் எடுத்தார்கள். நான் அங்கே நடிக்க சென்றிருந்தேன்.லஞ்ச் பிரேக்கின் போது அந்த சுடுகாட்டின் நிஜமான வெட்டியானுடன் அவரைப் பற்றியும் அவர் செய்யும் வேலைகளைப் பற்றியும் பேச்சுக் கொடுத்ததில் அவர் நெருங்கிய நண்பர் போல என்னிடம் பேச ஆரம்பித்துவிட்டார். அவருக்கு லஞ்ச் வரவழைத்து கொடுத்து மேலும் குஷிப்படுத்தினேன். மாலை ஷூட்டிங் முடிந்து எல்லோரும் சென்றுவிட்டோம். அதற்கு அப்புறம் வேறு ஷூட்டிங்குகளில் கலந்து கொண்டதால் அதைப் பற்றி மறந்தே போய்விட்டேன்.

ஒரு பதினைந்து நாள் கழித்து கோடம்பாக்கத்தில் என் கார் சிக்னலுக்காக காத்திருந்தபோது காரை ஓட்டி வந்த என்னை அந்த வெட்டியான் சைக்கிளில் இருந்தவாறே பார்த்து " என்ன சார் அங்கே எப்ப வர்றீங்க?" என்று ஒரு அணுகுண்டை வீசினார். நான் ஆடிப் போய்விட்டேன். அந்த இடத்தில் அந்த சூழ்நிலையில் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு அவனிடம் "இல்லப்பா எனக்கு இன்னும் மூணு நாலு கமிட்மென்ட்ஸ் இருக்கு, அது முடிந்ததும் நானே வந்துடுவேன் !" என்றேன்.
அதுக்கு அந்த வெட்டியான் " ஐயோ சார் நான் அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை,மறுபடியும் ஷூட்டிங்குக்காக எப்போ அங்கே வர்றீங்க? என்று தான் கேட்டேன். தப்பா இருந்தா மன்னிச்சிக்கோ சார்! " என்றான். " இதை அப்போதே இப்படி கேட்டிருக்க வேண்டியதுதானே?" என்று நான் அவனிடம் சொல்லவும் சிக்னல் விழவும் சரியாக இருந்தது. அப்புறம் நான் காரை கிளப்பிக்கொண்டு போய்விட்டேன்.

என்ன நண்பர்களே அவரின் நகைச்சுவையை ரசித்தீர்களா?

எல்லாம் சரி. தலைப்புக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம் என்றுதானே கேட்கிறீர்கள்? சம்பந்தம் இருக்கு.நடிகர் டெல்லி கணேஷ் என் நீண்ட நாள் நண்பர். அவரை மாதிரி நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவரைப் பற்றி நான் என் நண்பர்களிடம் பேசும்போது டெல்லி கணேஷும் நானும் என்றுதான் பேச்சை ஆரம்பிப்பேன். இப்போ தலைப்பு சரியாப் போச்சா?

(இது ஒரு மீள் பதிவு)

Friday, December 3, 2010

விஷம் ரெடியா?



"ஏய் மீனா! கதவை தாழ்ப்பாள் போட்டியா?"


"போட்டுட்டேங்க!"

"பசங்களெல்லாம் தூங்கியாச்சா? எழுந்து வரமாட்டாங்களே?"

"நல்லா அயர்ந்து தூங்கறாங்க, இப்போதைக்கு எழுந்திருக்க மாட்டாங்க!"







''ஆமா, சாயங்காலமே லெட்டர் எழுதி வைக்கச் சொன்னேனே, எழுதிட்டியா?"

"எழுதி டேபிள் மேலே வச்சிருக்கேங்க."

"சரி,சரி! விஷத்தை வாங்கியாந்து அந்த ஷெல்ப்பில் வச்சிருக்கேன். பார்த்து எடுத்துக்கிட்டு வா! பசங்க காலை மிதிச்சிடப் போறே, அதுங்க எழுந்து கிழுந்து வைக்கப் போவுது!"

"கொண்டாந்துட்டேன்..இந்தாங்க!"

"இப்படிக் கொடு, அந்தத் தட்டில் சோத்தைப் போடு, விஷத்தைக் கலந்துடலாம்."

"இந்தாங்க..சோறு கொஞ்சம் போதுமா, இல்ல நிறைய போடணுமா?"

"கொஞ்சம் போதும். அப்பத்தான் நல்லா வேலை செய்யும். "

"சோத்துல விஷத்தைக் கலந்துட்டேன். இந்தா நீ பாதி எடுத்துக்க, கொஞ்சம் கொஞ்சமா உள்ளே தள்ளு."

"சரிங்க, அப்படியே செய்யறேங்க."

"அப்பாடா! இன்றோடு எல்லாத் தொல்லையும் விட்டது. பொந்துக்குள்ள தள்ளின விஷ சோத்தை தின்னுட்டு எல்லா எலிகளும் வாயைப் பொளந்துகிட்டு செத்துக் கிடக்கப் போவுது பார். நீ எழுதி வச்ச லெட்டரை மறக்காம நாளைக்கு போஸ்ட் பண்ணிடு. எலிக்கு பயந்து சாகும் உன் தங்கச்சி, அதை எல்லாம் விஷம் வெச்சு சாகடிச்சாச்சுன்னு தெரிஞ்சதும் அடுத்த பஸ்சிலேயே புறப்பட்டு வந்துடுவா! என்ன நான்
சொன்னது புரிஞ்சுதா?"

"புரிஞ்சுதுங்க," என்றாள்.
_____________________________________________________________

(30.6.92 தினமலர் கதைமலரில் வெளியான என் சிறுகதை)

Monday, November 29, 2010

இன்னும் ஒரு ஸ்பூன்





"அப்பப்பா! என்ன ஒரு அலைச்சல்? மீனாட்சி சூடா காபி கொண்டு வா,'' என்றவாறே வந்தார் சபேசன்.


"வயசான காலத்தில் கிருஷ்ணா ராமான்னு வீட்டில் இருக்காம சோஷல் சர்வீஸ் அது இதுன்னு உடம்பை ஏன் இப்படி வருத்திக்கறீங்க? எனக்கும் வயசாச்சில்ல? உங்களுக்கு சிசுருஷை செய்ய இனிமே என்னால முடியாது; இந்தாங்க," என்று காபியை அவரிடம் நீட்டினாள் மீனாட்சி.


காபியை வாங்கிக் குடித்தவர் "சர்க்கரை இன்னும் கொஞ்சம் போடணும், அப்பத்தான் வயித்தில் இறங்கும்" என்றார்.


ஒரு வாரமாகவே இப்படித்தான். முந்தின வாரம் சபேசன் உடம்பை பரிசோதித்த டாக்டர் சர்க்கரையை குறைவா உபயோகிக்கணும் என்று பயமுறுத்தியிருந்தார். ஆனால் சர்க்கரை குறைவாக போட்டு காபி கலந்து கொடுத்தால் இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு வாங்கி கலக்கிக் கொண்டுதான் குடிப்பார்.


இரவு மாட்டுப் பெண் பகுளா ஊரிலிருந்து வந்ததும் நடந்தது அத்தனையும் அவளிடம் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டாள் மீனாட்சி.


மறுநாள் காலை பகுளா கலந்த முதல் காபியை கேட்டு வாங்கிக் குடித்த சபேசன் "தூ!தூ! என்று துப்பாத குறை!


"என்னம்மா இது? சர்க்கரையே போடலியா?" என்று கேட்டார்.


"ஆமாம் மாமா! சர்க்கரை வாங்கி வைக்க அவர் மறந்துட்டார். மத்தியான காபிக்கு வாங்கி வந்துடறேன், இப்ப குடிங்க" என்றாள்.


வேண்டா வெறுப்பாக குடித்து வைத்தார் சபேசன்.


மத்தியான காபியையும் சர்க்கரை போடாமலேயே குடிக்க வேண்டியதாயிற்று. கடைக்கு போய் வாங்கி வர முடியாமல் அடை மழை.


மறு நாள் காலை மீனாட்சி கலந்து கொடுத்த காபியை எவ்வித குறையும் சொல்லாமல் குடித்தார் சபேசன்.


மீனாட்சிக்கு ஆச்சரியம். "என்னடீ இது? முந்தா நாள், இன்னிக்கிப் போலவேதான் ஒரு ஸ்பூன் சர்க்கரை போட்டு காபி கொடுத்தேன். தாம் தூம்னு அமர்க்களம் பண்ணினார். ஒரே நாளில் அவரை எப்படி மாத்தினே?" என்று கேட்டாள்.


"அது வேறொன்னுமில்லை அத்தை, ரெண்டு ஸ்பூன் சர்க்கரை போட்டு குடிச்சவருக்கு ஒரு ஸ்பூன் போட்டு காபி குடிப்பதுன்னா ரொம்பக் கஷ்டமாய் இருக்கும். நேத்து பூரா சர்க்கரையே இல்லாம காபி குடிச்சார். இன்னிக்கு அரை ஸ்பூன் போட்டு குடிச்சாலும் அவருக்கு உலகளவுக்கு இனிக்கிறது" என்றாள் பகுளா.




(18.1.93 "மங்களம்" இதழில் வெளியான என் சிறுகதை)