என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.
Showing posts with label ஆனந்த விகடன். Show all posts
Showing posts with label ஆனந்த விகடன். Show all posts

Wednesday, December 28, 2011

மைனர்


"தம்பி ஊருக்குப் புதுசா... எந்த ஊரு...?"  என்று கேட்டார் மைனர்.

"வாங்க அண்ணே! நமக்குச் சொந்த ஊரு திருச்சி பக்கமுங்க.  போன புதன்கிழமைதான் 

கடையைத் திறந்தேன். ஒரு தடவையாவது நீங்க அவசியம் நம்ம கடைக்கு விஜயம்

செய்யனும்..." என்றான் ஆறுமுகம்.

"வர்றேன்! வர்றேன்! அதைச் சொல்லிட்டுப் போகத்தானே வந்திருக்கேன். நாளைக்குக் காலைல சரியா ஒன்பது மணிக்கு வந்துடறேன். ஸீட்டைக் காலியா வச்சிரு. எனக்கு முடி வெட்டிட்டு அப்புறம் அடுத்தவனுக்குச் செய். என்ன, நான் சொல்றது புரியுதா...?" என்றார் மைனர்.

"நாளைக்கா...? நாளை செவ்வாய்க் கிழமை நம்ம கடைக்கு லீவு அண்ணே! புதன் கிழமை வாங்க..." என்றான் ஆறுமுகம்.

"யார்ரா இவன், சுத்த புரியாதவனா இருக்கானே! டேய் லோட்டா...! நம்மளைப் பத்தி இவனுக்குக் கொஞ்சம் எடுத்துச் சொல்லுடா!" - என்றவாறே புறப்பட்டுப் போனார் மைனர்.

"தம்பி... நம்ம ஊரு மைனர் சொன்னா சொன்னதுதான்... அவரை எதிர்த்துக்கிட்டு யாரும் இந்த ஊர்ல வாழ்ந்ததுமில்லே... வாழப்போறதும் இல்லே! மரியாதையா நாளைக்குக் காலைலே ஒன்பது மணிக்கெல்லாம் கடையைத் திறந்து எல்லாத்தையும் ரெடி பண்ணி வெச்சுரு... அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்... முடி வெட்டிட்டு தப்பித் தவறி மைனர் கிட்டே பணம் கிணம் கேட்டுடாதே... அப்புறம் உன் கடையே காலியாயிடும்!" என்றான்  லோட்டா என்று மைனரால் அழைக்கப்பட்ட பரமசிவம்.

றுநாள்...

செவ்வாய்க்கிழமைதான் என்றாலும் ஆறுமுகத்தின் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. உள்ளே உட்கார இடமில்லாமல் நிறைய பேர் வெளியே நின்றிருந்தார்கள்.

'இன்று எல்லோருக்கும் இலவசமாக முடி வெட்டப்படும்!
என்று எழுதி ஒரு பெரிய போர்டு கடைக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டிருந்தது!

தனக்கு மட்டுமே ஸ்பெஷல் மரியாதை கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்த மைனருக்கு

ஆறுமுகம் வைத்திருந்த போர்டும், கடையில் நின்றிருந்த கூட்டமும் அதிர்ச்சியைத் 

தந்தன!

"டேய்... லோட்டா...!" என்று ஆத்திரத்தோடு கத்தினார்.

"சொல்லுங்க அண்ணே..." என்று மைனர் எதிரில் பவ்யமாக நின்றான் லோட்டா.

"இப்படி எல்லாரும் பயந்து  பயந்து எனக்கு ஜால்ரா அடிச்சே என்னை எதுக்கும் உதவாத பயலா ஆக்கிட்டீங்கடா... நேத்திக்கு வந்தவன் என் முகத்துல கரியைப் பூசிட்டாண்டா..." என்று சொன்ன மைனரின் குரலில் வருத்தம்.

"யாரு அண்ணே அவன்...?"

"நம்ம ஊர்ல புதுசா சலூன் திறந்திருக்கானே ஆறுமுகம்... அவன்தான்... அவன் எனக்கு நல்லா பாடம் கற்பிச்சுட்டான்... இந்த ஊர்லே எனக்கு இனிமே மரியாதை இல்லாம செய்துட்டான்... நான் இந்த ஊரைவிட்டே போயிடப் போறேன்... போற இடத்துலே புது மனுஷனா வாழப் போறேன்..."

- சொன்ன மைனரை வியப்போடு பார்த்தான் லோட்டா என்ற பரமசிவம்.

( ஆனந்தவிகடனில் வெளியான என் முதல் கதை - 30.10.88 இதழ் ) 


Friday, January 22, 2010

செல்லமே!




கிணற்றடியில் துணிகளைத் துவைத்துக்கொண்டு இருந்தாள் திலகா, அந்த வீட்டுச் சின்ன மருமகள். பக்கத்தில், தேய்க்க வேண்டிய பாத்திரங்கள் நிறைய!

கைக்கெட்டுகிற தூரத்தில் வாஷிங் மிஷின்! அது மட்டுமா? ஃபிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர், கலர் டி.வி-னு எல்லாம்தான் இருக்கு. ஆனால் எல்லாம் பணக்காரப் பெரிய மருமகள் பானு கொண்டு வந்ததாச்சே! எப்படி உரிமையோடு எடுத்து உபயோகிக்கமுடியும்?

அதுதான், இந்த ஒண்ணரை வருஷமாகத் துணி துவைக்கற கல்லோடும் அம்மிக்கல்லோடும் அல்லாடிக்கொண்டிருக்கிறாள் திலகா.

மறுநாள் காலை... விடாமல் தன் குழந்தையின் அழுகுரல் கேட்கவே, குளித்துக் கொண்டிருந்த திலகா அவசர அவசரமாகத் துணிகளைச் சுற்றிக்கொண்டு ஓடிவந்தாள்.

குழந்தை அலறிக்கொண்டிருக்க, பக்கத்தில் சாவகாசமாக அமர்ந்து டி.வி. பார்த்துக்கொண்டிருந்தாள் பானு.

"இப்படிப் பச்சைக் குழந்தையை யாராவது அலற விடுவாங்களா? கொஞ்சம் குழந்தையைத் தூக்கிச் சமாதானப்படுத்தக்கூடாதா?" ..பொருமலுடன் கேட்டாள் திலகா.

"எடுத்துக் கொஞ்சி, சமாதானப்படுத்தி இருப்பேன் திலகா. ஆனா, குழந்தை இல்லாத நான், உன் குழந்தையைத் தொட்டுத் தூக்கினா உனக்குப் பிடிக்குமோ, பிடிக்காதோ! நீதான், நான் கொண்டு வந்த எதையுமே தொடுறது இல்லையே!, சரி, இப்ப நீயே சொல்லிட்ட இல்ல... இனிமே எனக்கென்ன தயக்கம்!" என்ற பானு, "என் செல்லமே! அழாதடி! பெரியம்மா இருக்கேன்டி உனக்கு!" என்றபடி குழந்தையை வாரியணைத்து முத்த மழையால் குளிப்பாட்டினாள்.

(5.9.04 "ஆனந்த விகடன்" இதழில் 14 சிறுகதைகளின் தலைப்பை அப்போது வெளியான படங்களின் பெயர்களில் வெளியிட்டு அசத்தியதில் பிரசுரமான என் ஒரு பக்கக் கதை)


பெருமையோடு இல்லாமல் பொறுமையோடு இருப்பவளே பெண்

Thursday, January 14, 2010

குருதட்சணை

கொலுப் படிகளில் ரங்கநாதர், ராமன்,லக்ஷ்மணன், சீதை,முருகன்,காந்தி,நேரு என ஏகப்பட்ட பேர் குழுமியிருந்தார்கள். எதிரே, தரையில் அமர்ந்து 'குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா...' என்ற ராகமாலிகை பாடலில், ஒவ்வொரு ராகத்தையும் சந்தியா வயலினில் கையாண்ட விதத்தில் மயங்கி, 'அடடா! இவங்களுக்குத்தான் எப்பேர்ப்பட்ட சங்கீத ஞானம்? முகத்தில் எத்தனை களை? ' என்று வியந்து அமர்ந்திருந்த கோபாலுக்கு, ஆறு மாதங்களுக்கு முன் இதே இடத்தில் அவளுடன் பேசினவைகள் ஞாபகத்துக்கு வந்தன.

" வயலின் கத்துக்கறதை விட்டுடலாம்னு இருக்கேன் மேடம்!"

"என்ன இது திடீர்னு... என்ன ஆச்சு உங்களுக்கு?"

"இதுக்கு மேலேயும் உங்ககிட்டே தொடர்ந்து வயலின் கத்துக்கிட்டா, அது ரெண்டு பேருக்குமே நல்லாயிருக்காதுன்னு நினைக்கிறேன்."

"நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை. எதுவாக இருந்தாலும், என்னிடம் தயங்காம சொல்லலாம்."

"ஊர்ல நம்ம ரெண்டு பேரையும் இணைச்சுக் கன்னாபின்னான்னு பேசறாங்க!"

"வேலை வெட்டி இல்லாதவங்க எது வேணா பேசிட்டுப் போகட்டும். அதுக்காக நீங்க வயலின் கத்துக்கறதைப் பாதியிலேயே நிறுத்திடறேன்னு சொல்றது எந்த விதத்தில் சரின்னு நினைக்கறீங்க?"

"அது...வந்து..."

"இதோ பாருங்க, கோபால்! நான் பூவும் போட்டும் வச்சு அலங்காரம் பண்ணிக்கிட்டாத்தான் என் கணவருக்குப் பிடிக்கும். இளம் வயசிலேயே நான் விதவை ஆகிட்டாலும், அவரோட நினைவுகளோடையே வாழ்ந்துகிட்டிருக்கறதாலதான், அவர் விருப்பப்படியே இன்னும் அலங்கார பூஷணியா வலம் வந்துகிட்டிருக்கேன். அதே போல இனி நான் யாரையும் மறுமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்பதிலும் உறுதியா இருக்கேன். அவர் இல்லாத வெற்றிடத்தை இசை ஓரளவு நிரப்பும்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. எனக்குத் தெரிந்த வித்தையை உங்களுக்குச் சொல்லிக் கொடுத்துக்கிட்டிருக்கேன். அதை பாதியில் நிறுத்தறது, கருவிலேயே குழந்தையைக் கொல்றதுக்குச் சமம். அந்தப் பாவத்தைச் செய்தவளா நான் ஆகணும்னு நினைச்சா, தாராளமா நின்னுக்குங்க!".

சொல்லிவிட்டு விறுவிறுவென்று மாடிப்படி ஏறிச் சென்ற சந்தியாவை மறுநாள் கோபால் சந்தித்து மன்னிப்புக் கேட்டு, தொடர்ந்து வயலின் கற்று அரங்கேற்றம் செய்தததில் சந்தோஷமானாள்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்திருக்கிறான்.

'குறையொன்றுமில்லை' பாட்டை வயலினில் சந்தியா வாசித்து முடிக்கவும் வராந்தாவிலிருந்து கை தட்டிப் பாராட்டியவாறே வந்து அமர்ந்த பெண்ணை அறிமுகம் செய்தான் கோபால்.

"இவள் கஸ்தூரி. கல்யாணமாகி மூன்றே மாதத்தில், பைக் ஆக்ஸிடென்ட்டில் கணவனைப் பறிகொடுத்தவள். நான் அரங்கேற்றம் முடிச்சு ஊருக்குப் போன இடத்தில் இவளைப் பற்றிக் கேள்விப்பட்டேன். உடனே பார்த்துப் பேசி, பெரியவங்க சம்மதத்தோட தாலி கட்டி, என் மனைவியா உங்களிடம் அறிமுகப்படுத்த அழைச்சுகிட்டு வந்திருக்கேன். நல்ல உறவுகளை கொச்சைப்படுத்தினவங்களுக்கு இதுதான் பதிலாக இருக்கும்னு தோணிச்சு, கூடவே, குருதட்சணையாகவும் அமையும்னு நினைக்கிறேன். எங்களை ஆசிர்வதியுங்கள் மேடம்!" என்றான் கோபால்.

இருவரையும் ஆசிர்வதித்த சந்தியா வாசல் வரை வந்து தயாராக இருந்த ஆட்டோவில் அவர்கள் இருவரும் ஏறி அமர்ந்து, அக்கம்பக்கத்தார்கள் பார்த்துக்கொண்டிருக்க கையசைத்து அவர்களை வழியனுப்பிவிட்டு வீட்டினுள் சென்றாள்.

அவளின் மனசு இப்போது நிறைந்திருந்தது.

( 2006 "ஆனந்த விகடன் " தீபாவளி மலரில் வெளியான என் சிறுகதை )

எந்த வீட்டில் பெண்கள் அவமதிக்கப்படுகிறார்களோ அந்த வீட்டில் எல்லாக் காரியங்களும் அவலமாகும்

Friday, December 25, 2009

அவனுக்கு ஒரு வேலை



"வேலை வாங்குறதுக்காக அப்பா நாளைக்கு என்னைப் பட்டாசுக் கம்பெனிக்கு அழைச்சுக்கிட்டுப் போகப் போறாராம்மா? நான் ஸ்கூலுக்குப் போகணும், இல்லேன்னா டீச்சர் அடிப்பாங்க!"-அழுதுகொண்டே கூறிய மகனின் தலையை வாஞ்சையுடன் வருடியவாறே, "அப்பா கூப்பிட்டாருன்னா மறுக்காம போயிட்டு வாடா. எல்லாம் நம்ம நன்மைக்காகத்தான் சொல்வாரு" என்றாள் சரசு.

வாசல் திண்ணையில் உட்கார்ந்திருந்த ஆறுமுகத்தின் முகத்தில் கவலை ரேகைகள். 'சரவணனை நாளைக்கு அழைச்சுக்கிட்டுப் போனால் கண்டிப்பாக வேலை கிடைச்சுடுமா? சிவகாசியிலே அந்த பட்டாசு கம்பெனியில்தான் அதிக சம்பளம் தர்றாங்களாம். வேலை மட்டும் கிடைச்சு குடும்பத்துக்கு கூடுதலா பணம் வந்துச்சுன்னா சரவணனுக்கும் அவன் தங்கச்சிக்கும் நல்ல துணிமணிகளும், மனைவிக்கு சேலையும் வாங்கிக்கலாம். வாங்கின கடன்களையும் கொஞ்சம் கொஞ்சமா அடைச்சுடலாம்!'

மறுநாள்... "என்ன ஆறுமுகம் இவன்தான் எட்டாம் வகுப்பு படிக்கிற உன் பையனா? ஒ.கே! நாளைலேர்ந்து வேலைக்கு வந்திரலாம். அப்புறம் எங்க கம்பெனி கண்டிஷன் எல்லாம் தெரியுமில்லே?" என்று கேட்டார் மேனேஜர்.

"தெரியுங்க. பசங்களை வேலைக்கு அனுப்பாம படிக்க வைக்கிறவங்களுக்கு மட்டும்தான் இங்கே வேலை. என்னிக்குப் பசங்க படிப்பை நிறுத்தி வேலைக்கு அனுப்பினாலும் எங்க வேலை போயிடும். ஏஜென்ட் எல்லாம் தெளிவா சொல்லி இருக்காருங்க. இவனைத் தொடர்ந்து ஸ்கூலுக்கு அனுப்பிப் படிக்க வைப்பேங்க!".

நெகிழ்ச்சியுடன் கை கூப்பினான் ஆறுமுகம்.

( 28.5.06 "ஆனந்த விகடன்" இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை )
வாழ்க்கையில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. வாழ்க்கையை புரிந்துகொள்ள வேண்டும்

Saturday, October 17, 2009

மீனுக்கும் கற்பு உண்டு


" ரவணன் சார்... லைப்ரரி புக் கொண்டுவந்திருக்கேன்!" . எதிரே அழகுச் சிலையாக ரமா. காலேஜில் படிக்கும் பக்கத்து வீட்டுப் பெண். சரவணனிடம் அவளுக்கு அப்படி என்னதான் ஈர்ப்போ...லைப்ரரி புத்தகம் வாங்கிப் போகிற, பாடப் புத்தகத்தில் சந்தேகம் கேட்கிற சாக்கில் அடிக்கடி வீட்டுக்கு வந்து ஒட்டிப் பழகுகிறாள்.

ஆருயிர் மனைவி சித்ரா இறந்து ஒரு வருஷம் ஆகப் போகிறது. இதுவரை அவன் மனதில் எந்தவித சஞ்சலமும் வந்ததில்லை.ஆனால் சமீப காலமாக அவனுக்குள்ளும் சில மாற்றங்கள். அவனும் அதை உணராமல் இல்லை.

ன்று காலை... பாடத்தில் சந்தேகம் கேட்டு வந்த ரமா, கிளம்பிச் செல்கிற வேளையில் தயங்கி நின்றாள். "சார்...என் வாழ்க்கையை உங்களோடு இணைச்சுக்க விரும்பறேன். உங்களுக்குச் சம்மதமா?" என்று கேட்டவள், "அவசரமில்லை நல்லா யோசிச்சு...நாளைக்குச் சொன்னால் போதும், சார்!" என்று கிளம்பிப் போய் விட்டாள்.

அன்றைய தினம் முழுக்க, ஆபீஸ் வேலையில் சரவணனால் கவனம் செலுத்த முடியவில்லை. சின்ன கணக்குகூடத் தப்பாக வந்தது. சித்ரா இருந்த இடத்தில் இன்னொருத்தியா என்று யோசனையாக இருந்தது.

சாயந்திரம் டூ வீலரில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது டயர் பஞ்சராகிவிட்டது. போன் செய்து மெக்கானிக்கை வரச் சொல்லிவிட்டு காத்திருந்தவனின் கண்களில் அந்த வண்ண மீன் விற்பனை நிலையம் பட்டது. உள்ளே நுழைந்து மீன்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் சரவணன். கோல்டு, ஏஞ்சல், ப்ளாக் மோலீஸ் எனவிதவிதமான மீன்கள் கண்ணாடித்தொட்டிகளில் நீந்திக் கொண்டு இருக்க, ஒரு மீன் மட்டும் எதனுடனும் சேராமல் தனியாக இருந்தது.

"அதுவா...அது ஆஸ்கர் மீன் சார்! அதன் ஜோடி ஆறு மாசத்துக்கு முந்தி செத்துப் போச்சு. இந்த வகை மீன் மட்டும் ஆண் இறந்து போனா பெண்ணும், பெண் இறந்து போனா ஆணும் வேறு எதோடும் சேராம, கடைசி வரைக்கும் தனியாகவே வாழ்ந்து செத்துப் போயிடும். மத்த பெண் மீன் இதோடு உரசுற மாதிரி வந்தாலும் இது ஒதுங்கிப் போயிடும். அவ்வளவு கற்புள்ள மீன் சார் இது!" என்றார் கடைக்காரர்.

அவனுக்குத் தெளிவு பிறந்த மாதிரி இருந்தது.

வீடு திரும்பியதும், ரமாவைக் கூப்பிட்டனுப்பினான் சரவணன். அவளிடம் அந்த ஆஸ்கர் மீன் பற்றிச் சொல்லி, "வாழ்க்கைத் துணை என்பது அந்த மீனுக்கே இவ்வளவு அழுத்தமான விஷயமாக இருக்கும்போது, ஆறறிவுள்ள நமக்கு மட்டும் அதுசாதாரண விஷயமா படலாமா? ஒருவனுக்கு ஒருத்தி என்கிற பண்பாட்டை மீறாம இருக்கறதுதான் மனித இனத்துக்கு அழகுன்னு நான் நினைக்கிறேன்" என்றான்.

"உங்க கண்ணியமும் பண்பாடும் உங்க மேலுள்ள என் மரியாதையை அதிகப்படுத்துது, சார்! ஆனா, நீங்க சொன்னதில் ஒரு சின்ன திருத்தம் . ஒருவனுக்கு ஒருத்தி என்பது வாழும்போது கடைப்பிடிக்க வேண்டிய அவசியமானதொரு கலாசாரம் தான். மத்தபடி தம்பதியில் ஒருவரது மறைவுக்குப் பின் அடுத்தவர் இன்னொரு திருமணம் பண்ணிக்கறது எந்தவிதத்திலும் மறைந்தவருக்குச் செய்யற துரோகமா நான் நினைக்கலை. மீனுக்குக் குடும்பம், குழந்தைகள் கிடையாது. ஆனா, மனைவி என்கிற ஒரு துணை உங்க வாழ்க்கைக்கும், தாய் என்கிற அரவணைப்பு உங்க மகள் சரண்யாவுக்கும் ரொம்ப முக்கியம் இல்லையா? எங்கோ விதிவிலக்கா இருக்கிறதை உதாரணமா எடுத்துக்காம, நம்ம அளவில் யோசிச்சு எடுக்கிற முடிவே சரியா இருக்கும்னு நான் நினைக்கிறேன், அதனால...'

" சரி உன் இஷ்டப்படியே ஆகட்டும்" என்றான் சரவணன். முன்பைவிட இப்போது இன்னும் தெளிவாகி இருந்தான்.


(31.1.07 இதழ் ஆனந்த விகடனில் வெளியான என் சிறுகதை)


வாழ்க வளமுடன்