நான் அப்போது தணிக்கைப் பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றிக்கொண்டிருந்தேன். கோவையில் உள்ள அலுவலகத்துக்கு தணிக்கைக்காக சென்றிருந்தேன். பதிவேடுகளை ஆய்வு செய்துகொண்டிருந்த போது ஒரு பதிவேட்டில் அன்றைய தேதியை போட்டு " வந்தள்,பெருக்கினள்,சென்றள் " என்று எழுதி ஒரு சுருக்கொப்பமும் (Initial) இடப்பட்டிருந்தது. இதில் கொடுமை என்னவென்றால் வருடம் பூராவுக்கும் இதையே எழுதி இருந்ததுதான். அங்குள்ள பணியாளரை அழைத்து " இது என்ன சார் ஒன்றும் புரியவில்லையே ?" என்று கேட்டதுக்கு "அதுவா சார் , தினமும் அலுவலகம் கூட்ட வரும் பெருக்குபவர் (பெண்) வந்தாரா என்பதை அறிந்து கொள்ள ஒரு வருகைப் பதிவேடு தனியாக வைத்துள்ளோம் . அதில்" வந்தாள் , பெருக்கினாள்,சென்றாள் " என்பதைத்தான் எங்கள் அலுவலக வாட்ச்மேன் "வந்தள்,பெருக்கினள்,சென்றள் " என்று எழுதி இருக்கிறார் என்றார். நீங்களாவது எழுதிக்காட்டி இருக்கலாமே என்றதுக்கு , "நீ காலை வாங்கலைன்னா உன் கையை வாங்கிடுவேன்னு பயமுறுத்திக்கூடப் பார்த்துட்டேன் சார், அவரை திருத்தவே முடியலை " என்றார். இதைக் கேட்டதும் எனக்கு மாவீரன் அலெக்ஸ்சாண்டர் பற்றி சொல்லும் "வந்தார், பார்த்தார் ,வென்றார் " (He came, He saw, He conquered) என்னும் வார்த்தைதான் நினைவுக்கு வந்தது.