என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.
Showing posts with label சாவி. Show all posts
Showing posts with label சாவி. Show all posts

Wednesday, February 24, 2010

கை மேல் பலன்

கண்களில் ஒரு வித மிரட்சியுடன் பஸ்ஸில் உட்கார்ந்திருந்தாள் பவித்ரா. முந்தின நாள் ஒரு கல்லூரி மாணவன் தன் நண்பனிடம் சவால் விட்டுவிட்டுப் போயிருந்ததே அவளின் மிரட்சிக்குக் காரணம்.

தினமும் அவர்கள் இருவரும் வேண்டுமென்றே பெண்கள் மேல் விழுந்துவிட்டு 'சாரி' சொல்வதும், புடவைத் தலைப்பை இழுப்பதும், முதுகில் கையை படரவிடுவதும், ஃ பிளையிங் கிஸ் கொடுப்பதும்.. நினைக்க நினைக்க அவள் முகமெங்கும் வியர்வை முத்துக்கள் அரும்பத் தொடங்கின. முந்தின நாள் ஒரு படி மேலே போய் "நாளைக்கு பஸ்ஸிலிருந்து இறங்கறப்ப இவங்க இடுப்பைக் கிள்ளி விட்டு இறங்கலேன்னா என் பெயரை மாத்திக்கறேன்டா" என்று அவள் காது படவே சொல்லிவிட்டுப் போயிருந்தான் அந்தக் கல்லூரி மாணவன்.

அவன் வந்திருக்கிறானா என்று பஸ்ஸினுள் ஒரு நோட்டம் விட்டாள். சவால் விட்ட ஃபங்க் தலையன் அவள் பக்கத்தில் நின்று கொண்டு அவளையும் அவள் மடியையும் வெறித்துப் பார்ப்பதை கவனித்தாள்.

பஸ் அடுத்த ஸ்டாப்பிங்கை நெருங்கும் சமயம் "டேய் நல்ல வேளை இன்னிக்காவது தெரிஞ்சுதே! இல்லேன்னா நேத்து போட்ட சவாலில் ஜெயிப்பதற்காக இடுப்பைக் கிள்ளிட்டு இந்நேரம் கம்பி எண்ணிக் கொண்டிருப்பேன். இவ்வளவு நாளா எப்படிடா நாம பண்ணின சில்மிஷங்களை பொருத்துகிட்டிருந்தாங்க?"

நண்பனிடம் கூறிவிட்டு அந்த ஸ்டாப்பிங்கிலேயே இறங்கிப் போய்விட்டான் அந்த ஃபங்க் தலையன். அவனைத் தொடர்ந்து அவன் நண்பனும் இறங்கிவிட்டான்.

அடுத்த ஸ்டாப்பிங்கில் "ரொம்ப தாங்க்ஸ்" என்றவாறே பவித்ராவிடம் கொடுத்து வைத்திருந்த தன் யூனிபார்மை வாங்கிக் கொண்டு பஸ்ஸிலிருந்து இறங்கிப் போனார் ஒரு பெண்மணி.

ஒரு பெண் போலீஸின் கையில் வைத்திருந்த போலீஸ் யூனிபார்மை வாங்கி தன் மடியில் வைத்திருந்ததற்கு இப்படி கை மேல் ஒரு பலனா?

நிம்மதியாக பெருமூச்சு விட்டாள் பவித்ரா.

(14.5.98 "சாவி" இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

"வெற்றி--தோல்விகள் வாழ்வின் ஓரிரு சம்பவங்களை மட்டுமே சார்ந்தவை அல்ல!அவை முழு வாழ்வையும் சார்ந்தவை"

Saturday, February 20, 2010

கலைத்துவிடு காவ்யா




வீடும் நர்ஸிங் ஹோமும் சேர்ந்தே கட்டப்பட்டிருந்த டாக்டர் நளினியின் நர்ஸிங் ஹோமுக்கு காவ்யா போய்ச் சேர்ந்தபோது அங்கு நாலைந்து பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

"உங்களுக்கு இது எத்தனாவது மாசம்?" என்று ஒருத்தி கேட்டாள், பக்கத்தில் உட்கார்ந்திருந்தவளிடம்.

"ரெண்டு மாசம் முடிஞ்சிடுச்சு. ஏற்கனவே ரெண்டும் பொட்டைப் பிள்ளைங்க. எங்கே இதுவும் பொட்டையா பிறந்திடப்போவுதேன்னு இதை கலைச்சிடனும்னு ஒத்தைக் காலில் நிக்கறாங்க மாமியாரும், நாத்தனாரும். அவங்க தொல்லை பொறுக்க முடியலை" என்றாள் அவள்.

"டாக்டர் வந்துட்டாங்க! டாக்டர் வந்துட்டாங்க!" கூட்டத்தில் யாரோ முணுமுணுத்தார்கள்.

வெளியில் ஒரு அவசர கேஸை பார்த்துவிட்டு, நர்சிங் ஹோமுக்குள் வரும்போதே, எல்லோரையும் தன் கண்களால் சர்வே செய்தவாறே வந்தாள் டாக்டர் நளினி.

காவ்யாவைப் பார்த்த மாத்திரத்தில் "அடடே வந்துட்டியா? வா,வா" என்று அவளை உள்ளே அழைத்துச் சென்றாள் நளினி.

டாக்டர் நான் இங்கே வந்து இதை செஞ்சதைப் பத்தி என் வீட்டுக்காரருக்கு எந்த சந்தர்ப்பத்திலும் யார் மூலமாகவும் தெரியவே கூடாது. அவருக்கு இதெல்லாம் பிடிக்காது. நமக்கு இருக்கற பணத்துக்கு எதுக்கு இப்படியெல்லாம் செய்யறே என்பார். நான்தான் மனசு கேட்காம வந்து இதை பண்றேன். அவர் வீட்டுக்கு திரும்புவதற்குள் நான் வீட்டுக்குப் போயிடணும்" என்று சொல்லிவிட்டு,

ஏற்கனவே பூஜை அறையில் போட்டிருந்த ரங்கோலி கோலத்தை கலைத்துவிட்டு டாக்டர் விரும்பியபடி, அந்த இடத்தில் புதிதாக ஐயப்பன் படத்தை ரங்கோலியில் போட ஆரம்பித்தாள் காவ்யா.

("சாவி" வார இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

சுதந்திரமாகச் சிந்தியுங்கள்! எண்ணப் பாய்ச்சலில் அண்ட வெளியில் பாய்ந்து பழகுங்கள்!