என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.
Showing posts with label ரசித்த கவிதை. Show all posts
Showing posts with label ரசித்த கவிதை. Show all posts

Saturday, November 7, 2009

தன்னிரக்கம்


னது இளமைப் பருவம் வெறும் கவலைகளால் நிறைந்த ஒன்று!
எனது மகிழ்ச்சியான விருந்தில் துயரங்களே பதார்த்தங்கள்!
எனது வயலில் விளைந்த பயிர்கள் களைகளே!
எனக்கு நல்லவை என்று எண்ணிக்கொள்ள முடிந்ததெல்லாம்
வெற்று நம்பிக்கைகளையே!
நாள் நகர்ந்துவிட்டது; ஆயினும் சூரியனை நான் காணவில்லை
நான் வாழ்கிறேன்; ஆனால் என் வாழ்க்கை முடிந்துவிட்டது.
னது கதை கேட்கப்பட்டது ; ஆயினும் சொல்லப்படவில்லை
என்னில் கனிந்தவை உதிர்ந்துவிட்டன; ஆயினும் எனது
இலைகள் பசுமையாகவே இருக்கின்றன.
எனது இளமை அழிந்துவிட்டது; ஆயினும் வயோதிகனாகிவிடவில்லை.
நான் உலகத்தைப் பார்த்துவிட்டேன்; ஆயினும் உலகத்தால்
நான் பார்க்கப்படவில்லை;
பந்தத்தின் இழைகள் அறுபட்டன; ஆயினும் பின்னப்படவில்லை
நான் வாழ்கிறேன்; ஆனால் என் வாழ்க்கை முடிந்துவிட்டது.
ன் மரணத்தைத் தேடினேன்; அது என் கருப்பையிலேயே இருந்தது;
வாழ்க்கையை நோக்கி நின்றேன்; அது வெறும் நிழலாக இருக்கக்
கண்டேன்.
மண்ணில் என் கால் பதிந்தது. என் கல்லறை இருப்பது
தெரிந்தது.
என் கோப்பை நிறைந்திருக்கிறது; இதோ அதுவும்
காலியாகிவிட்டது
நான் வாழ்கிறேன்; ஆனால் என் வாழ்க்கை முடிந்துவிட்டது.

(1972--ம் வருட கண்ணதாசன் புத்தகத்தில் வெளியான கவிதை. ரசித்த கவிதை என்பதால் டயரியில் குறித்து வைத்தேன்-- ரசித்த கவிதை முற்றும் .)
உலகிலேயே துயரம் நிறைந்த மனிதன் எதிலும் தயக்கம் காட்டுபவன்தான்

Tuesday, October 27, 2009

மரணம்

ரு அந்தி வேளையில் நான் இந்த இடத்தை விட்டுப்
போய்விடுவேன்;
எங்கே போகிறேன் என்று எனக்குத் தெரியாது;
விதைப்புக்காலமா அறுவடை காலமா என்பதும் தெரியாது;
மண் போல் மௌனம் என்னை அழுத்தும்
அந்த அந்தி வேளையில் வழக்கம் போல் நீ வருவாய் என்று
எனக்குத் தெரியும்
அப்போது உனக்குப் புரியும்; நான் நகரமுடியாதபடி முடமாக
இல்லை;
முதல் மெழுகுவர்த்தி போல் ஏதோ ஒன்று அந்த இடத்தில் இருக்கும்
யாரையும் நீ எதுவும் கேட்க மாட்டாய்--
மௌனமாக நிற்பாய்; புதிய ஆகாய வெளிகளை அறிய
வார்த்தைகள் தேவை!
பழம் நினைவுகள் செவிடாகி உன்னிடம் கிடக்கின்றன. ஆனால்
அவை புயலுக்குச் சமம்;
யூதர்களின் தேவவசனம் பொறித்த எந்தக் கல்லையும் நான்
நேசிக்கிறேன்.
சேரி மயானத்தில்
இலையுதிர்காலம் சோகம் பரப்பி நிற்கிறது
ரணத்திலிருந்து தப்பி இனிமேலும் என்னால் மறைந்து
கொண்டிருக்கமுடியாது!

(1972--ம் வருட கண்ணதாசன் புத்தகத்தில் வெளியான கவிதை. ரசித்த கவிதை என்பதால் டயரியில் குறித்து வைத்தேன்-- ரசித்த கவிதை தொடரும்.)



உழைக்காமல் கிடைக்கும் பரிசு மரணம்

Wednesday, October 14, 2009

மனிதன்


ரசித்த கவிதை-- 3

எவ்வளவு முயன்றும் என்னுருவை என்னால் மாற்றிக்கொள்ள
முடியவில்லை;
என் வாயும், கண்ணும்,மூக்கும், அப்படியேதான்
இருக்கின்றன.
இந்த உடலைத் தாங்கிக்கொண்டுதான் இரவும் பகலும்
அலைகிறேன்
சுவர்களில் என் நிழல் நகரும்போது பலரின் கண்கள்
புண்படுத்தப்படுகின்றன;
நான் யாருக்குச் சொந்தமானவன்?
என் தகப்பனும் பாட்டனும் என்னை நிராகரித்துவிட்டார்கள்
எந்த ஜீவராசியும் என்னைத் தங்கள் இனம் என்று
அங்கீகரிக்க இசையவில்லை; ஆனால்....
என்னை நானே துன்புறுத்திக் கதறும் போது மட்டும்,
காலம் என்னில் அழிக்க முடியாத தழும்பை விட்டுச்
செல்லும்போது மட்டும்;
அவர்கள் சொல்லுகிறார்கள்;
பரவாயில்லை, நன்றாய் இருக்கிறது
நான் சொல்லிக் கொள்கிறேன் நானும் மனிதனே!

"மனிதன் உலகத்தோடு தனக்குள்ள உறவை உணராவிட்டால் அவன் வாழும் இடம் சிறைக்கூடமாகும்."

(1972--ம் வருடம் வாங்கிய கண்ணதாசன் புத்தகத்தில் வெளியான கவிதை.
ரசித்த கவிதை என்பதால் டயரியில் குறித்து வைத்தேன்-- ரசித்த கவிதை தொடரும்.)





Tuesday, October 13, 2009

இருதயம்

ரசித்த கவிதை-2

இருதயம்


எனக்குத் தெரியும்---
இருதயமே
நீ மிகவும் களைத்துப் போய்விட்டாய்
வாழ்க்கை மிகவும் கடினமாகி வருகிறது
ஒவ்வொன்றும் காலதாமதமாகித் தெரிகிறது
அறுபது ஆண்டுகளாய் நீ துடித்துக்
கொண்டிருக்கிறாய்.
நான் வாழ்கிறவரை
நீ மேலும் மேலும் துடிக்கத்தான் வேண்டும்
நாமிருவரும் ஒரே விதியைப் பகிர்ந்து கொள்ள
கட்டளையிடப்பட்டிருக்கிறோம்
நீ ஓய்வு பெறுவதற்கு உரிமை இருக்கிறது
ஜீரணிக்க முடியாத கனவுகளிலும், காதலிலும்
நீ பல வருஷங்கள் கஷ்டப்பட்டுவிட்டாய்
கடந்த காலத்தின் கவலைகளை மறந்துவிடு!
மேலும் மேலும் துடித்துக்கொண்டிரு!
நான் சொல்வதற்கும், பாடுவதற்கும் இன்னும்
நிறைய இரு...க்...கி...ன்...ற.........ன.

The way is not in the sky. The way is in the heart.


(இது நான் 1972--ம் வருடம்
வாங்கிய கண்ணதாசன் புத்தகத்தில் வெளியான கவிதை.
ரசித்த கவிதை என்பதால் டயரியில் குறித்து வைத்தேன். யார்
எழுதியது என்பதை குறித்து வைக்கவில்லை
-- ரசித்த கவிதை தொடரும்.)

Monday, October 12, 2009

யதார்த்தம் (கவிதை)

ரசித்த கவிதை-- 1

யதார்த்தம்

நெருப்பாய்த் தகித்த வெயிலிலும்
உடலை நடுங்க வைத்த கடு மழையினிலும்
உழன்ற போதவனுக்குக் குடை தராத உறவு
அவன் பிணத்திற்குக் குடை பிடித்துச் செல்கிறது
வாழ்ந்தபோது கிழிந்த கந்தலை உடுத்தியிருந்த அவன்
இறந்த பின்பு புது வேட்டி போர்த்தி ஊர்வலம்
போகின்றான்;
இருக்கும்போது கிடைக்காதவை
இறந்தபின்புதான் கிடைக்கும் எனில்
ஒ நிஜங்களே! நீங்கள் விரைவில் நிழலாகிவிடுங்கள்!

(இது நான் 1972--ம் வருடம் தணிக்கைக் குழுவில் பணியாற்றியபோது
வாங்கிய தினமணி கதிர் புத்தகத்தில் வெளியான கவிதை.
ரசித்த கவிதை என்பதால் டயரியில் குறித்து வைத்தேன். யார்
எழுதியது என்பதை குறித்து வைக்கவில்லை
-- ரசித்த கவிதை தொடரும்.)