என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, September 28, 2010

வாங்க மாட்டேன்



" இன்னிக்கு காலையில் யார் முகத்தில் முழிச்சோமோ, மாட்டினவனெல்லாம் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு போறாங்களே!" என்று டிராபிக் சார்ஜண்ட் சரவணனுக்கு குஷியோ குஷி.

டூட்டி முடிந்ததும் வீட்டுக்கு போய் சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்தவரின் முன்பு எட்டாவது படிக்கும் அவரின் மகன் தீபன் கையில் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டுடன் நின்றிருந்தான். அதை வாங்கிப் பார்த்தவருக்கு சப்பென்றாகிவிட்டது.

"என்னடா மூன்றாவது ரேங்க் வாங்கியிருக்கே! முதல் ரேங்க் வாங்கினா சைக்கிள் வாங்கித் தருவேன்னு சொன்னேனே! மறந்துட்டியா?"

கேட்ட அப்பாவை மேலும் கீழுமாக பார்த்த தீபன் " வேணாம்ப்பா, நல்லா படிச்சு முடிச்சு வேலைக்குப் போன பின்பு நானே பைக் வாங்கிக்குவேன், உங்க பணம் எனக்கு வேணாம்" என்றான்.

"டேய் அப்படியெல்லாம் அப்பா கிட்டே சொல்லக்கூடாது!"-- அம்மா அவனை அடக்கினாள்.

" நான் அப்பாவின் பணத்தை வேணாம்னு சொன்னதுக்கு காரணம் இருக்கும்மா! ஏற்கனவே என் ஸ்கூல் பசங்க " டேய் உங்கப்பா ஸ்கூட்டர், லாரி ஓட்டறவங்ககிட்டல்லாம் லஞ்சம் வாங்கித்தானேடா உன்னை படிக்க வைக்கிறாரு அப்படீங்கறாங்க..." -- அவன் சொல்லிமுடிக்கவும்,

"என் கண்ணை திறந்துட்டேடா நீ! நாளைக்கே என்னோட உயரதிகாரியிடம் கெஞ்சிக் கேட்டு வேற போஸ்டிங்குக்கு போயிடறேன் போதுமா?"

சொன்ன அப்பாவை வாஞ்சையுடன் பார்த்தான்.

Saturday, September 25, 2010

எல்லாமே... / மீட்சி / அது

1. எல்லாமே...

பாத்திரத்தை குலுக்கிக்
கேட்டான் பிச்சைக்காரன்
உடம்பை குலுக்கிக்
கதா பாத்திரம்
படைத்தாள் கவர்ச்சி நடிகை
வயிற்றுப் பசிக்கான ஓட்டத்தில்.

<> <> <> <> <> <> <> <> <> <> <>

2. மீட்சி

மீண்டும் வருவேன்
என்று சொல்லிவிட்டு
பதவியுடன் வந்தார்
ஊழல் மந்திரி .
மீண்டு வருவேன்
என்று சொல்லிவிட்டு
வராமல் போனது
மீனவன் வலையில்
அகப்பட்ட மீன்.


<> <> <> <> <> <> <> <> <> <> <>

3 . அது!

ஊரில் திருவிழா.
இருப்பவனுக்கு சொர்க்கம்
இல்லாதவனுக்கு நரகம்
கையில் பணம்.

<> <> <> <> <> <> <> <> <> <> <>

Thursday, May 13, 2010

சம்பாத்தியம்


பஸ் ஸ்டாண்டின் எதிரிலிருந்த அந்த ஓட்டலில் எப்போதும் கூட்டம் அலைமோதும். ருசி கண்டவர்கள் மீண்டும் மீண்டும் சாப்பிட வருவதால்தான் அப்படி. ஓட்டலுக்குள் புகுந்த சரவணன் அவனின் அப்பா அங்கு சமையல்காரராக வேலை பார்ப்பதால் நேராக சமையலறைக்குள் சென்றான்.


பொள்ளாச்சிக்கு பக்கத்தில் உள்ள ப.க.புதூர்தான் அவன் சொந்த ஊர்.தென்னந்தோப்பு வைத்திருந்த அவனின் அப்பா மாசிலாமணி அவருடன் கூடப் பிறந்த நான்கு பெண்களையும் கரை சேர்ப்பதுக்குள் எல்லாவற்றையும் விற்றாக வேண்டியதாகிவிட்டது. குடும்பத்தை காப்பாற்ற அந்த ஓட்டலில் சமையல்காரருக்கு உதவியாளனாக வேலைக்கு சேர்ந்து படிப்படியாக முன்னேறி இன்று அந்த ஓட்டலின் சீஃப் குக் ஆக இருந்தார்.


ஒவ்வொரு மாதமும் சம்பள நாள் அன்று மாலை சரவணனை ஓட்டலுக்கு வரச்சொல்லிவிடுவார்.


அன்று சம்பள நாள் என்பதால் வழக்கம் போல சரவணனும் ஓட்டலுக்கு போய் சமையல் அறைக்குள் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த ஸ்டூலில் உட்கார்ந்து அங்கு நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு பக்கம் தோசைக் கல்லில் சாதா, ரவை, ஆனியன் என்று ஆர்டர்களுக்கு தகுந்தபடி வார்த்துக்கொண்டு மறு பக்கம் இட்லி போணியிலிருந்து ஆவி பறக்கும் இட்லிகளை எடுத்துத் தட்டில் கவிழ்த்துக் கொண்டிருந்தார் அவனின் அப்பா. இடையிடையே அடுத்த நாள் காலை தயாராகவேண்டிய ஸ்பெஷல் ஆர்டருக்கு தேவையான சாமான்களுக்கான லிஸ்டை அவரின் உதவியாளருக்கு சொல்லிக்கொண்டிருந்தார். பார்த்துக் கொண்டிருந்த சரவணனால் இருக்க முடியவில்லை. பாவம் என்னை படிக்க வைப்பதுக்காக அப்பா இப்படி நெருப்பில் வேகிறாரே என்று நினைத்துக்கொண்டு முள்ளின் மேல் உட்கார்ந்திருப்பது போலிருந்தான் .


இரவு எட்டு மணி ஆகவும் சரவணனை அழைத்துக்கொண்டு கல்லாவிலிருந்த முதலாளியிடம் போய் " அய்யா சம்பளத்தை கொடுத்தீங்கன்னா இவனை அனுப்பிச்சுடுவேன், அப்புறம் எங்க கிராமத்துக்கு பஸ் கிடையாது" என்றார் மாசிலாமணி.


" இவன் இந்த வருஷம் இன்ஜினியரிங் காலேஜில் சேரப்போறான் இல்லே? நீ கேட்டிருந்த அட்வான்ஸ் பணம் பத்தாயிரமும் தர்றேன். ஆனா லீவு போடாம வேலை செய்யணும் புரிஞ்சுதா ? " என்று சொல்லியவாறே பணத்தை எடுத்துக் கொடுத்தார்.


பணத்தை வாங்கி சரவணனிடம் கொடுத்து அனுப்பிவிட்டு "ரொம்ப நன்றிங்க முதலாளி" என்றார் .


" இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன். ஓவ்வொரு மாசமும் உன் பையனை இங்க வரவைச்சு சம்பளப்பணத்தை கொடுத்தனுப்பணுமா? ஒரு நடை கிராமத்துக்கு போய் உன் பொண்டாட்டிகிட்டே கொடுத்துட்டு வந்தாத்தான் என்ன? " என்று கேட்ட முதலாளியிடம் ...


"நான் படும் கஷ்டம் என் மகன் படக்கூடாதுங்கறதில நான் உறுதியா இருந்தாலும் அவனை பணக்கஷ்டமே தெரியாமல் வளர்க்க நான் விரும்பலை. நான் கஷ்டப்பட்டுத்தான் சம்பாதிக்கிறேன் என்பதை அவனும் உணரணும்கிறதுக்காகத்தான் ஓவ்வொரு மாசமும் சம்பள நாள் அன்று அவனை வரச்சொல்லி சமயலறையில் காக்க வச்சு நான் படற கஷ்டங்களை நேரடியா பார்க்க வைக்கிறதுனால அவனும் அதை உணர்ந்து பொறுப்பா நடந்துகிட்டு நல்லா படிச்சுமுதல் ரேங்க் வாங்கறான் அய்யா" என்றார்.


" நீ ரொம்ப படிக்கலை என்றாலும் வாழ்க்கையை நல்லாவே படிச்சு வச்சிருக்கேய்யா " என்ற முதலாளியை நெகிழ்ச்சியுடன் பார்த்தார் மாசிலாமணி.

-ரேகா ராகவன்.

தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்!

Friday, April 30, 2010

பாராட்டு/ பசி/ இருவர்/வலை




பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம். முதலில் பதிவுலகத்துக்குள் " ரேகா ராகவன் " என்ற இந்த வலைப்பூவில்தான் என் பயணத்தை தொடங்கினேன். அதன் பின்னர் பத்திரிக்கைகளில் வெளியான என் சிறுகதைகளுக்காகவும் வலைப்பூவுக்கென வடிவமைத்து எழுதும் சிறுகதைகளை வெளியிடவும் "அன்பே சிவம்" என்ற வலைப்பூவையும் தொடங்கி என்னால் இயன்ற வரையில் நல்ல கருத்துக்களை சொல்ல ஓரளவுக்கு முயன்று வருகிறேன். அந்த வகையில் இரு வலைப்பூக்களிலும் இதுவரை 49 பதிவுகளை இட்டிருக்கிறேன். இது எனது 50-வது பதிவு. உங்களின் நல் ஆதரவோடு மேலும் பல நல்ல பதிவுகளை எதிர் காலத்தில் தர விழைகிறேன்.



1. பாராட்டு

வெற்றி பெற்ற சினிமாவின்
இயக்குனருக்கு பாராட்டு விழா.
மூலக் கதையை எழுதியவன்
சோகத்தோடு மூலையில்.

2. பசி

பொம்மைக் குழந்தைக்கு
பால் கொடுப்பது போல
நடித்துக்கொண்டிருந்தது
பசியோடிருந்த குழந்தை.

3 . இருவர்

பெண் பார்த்து நிச்சயித்த பின்பு
அவனுக்கு ஏற்பட்டது தவிப்பு
அவளுக்குள் ஏற்பட்டது குறுகுறுப்பு.

4. வலை

திருடனை வலை வீசி
தேடினது போலீஸ்
கடைசியில் அகப்பட்டான்
ஒரு அப்பாவி.



கவிதை எழுதும் கலைஞன் பெருமைக்கு உரியவன் என்றால், ஒரு நிலத்தை உழுபவனும் கவிஞன்தான்!

Thursday, April 22, 2010

நம்பிக்கை



தினமும் வெளியே புறப்படும்போது தெரு முனை பிள்ளையார் கோயில் முன் காரை நிறுத்தி இறங்கி தரிசித்துவிட்டு செல்வது வழக்கம். "நீயும் வாயேண்டா! என்று காரிலிருந்த என் நண்பன் கார்த்திக்கை கூப்பிட்டேன். அவனோ "இல்லடா நீ போயிட்டு வா ! " என்றான்.

தரிசனம் முடித்து மீண்டும் காரை எடுத்தேன். பாதி வழி போகவில்லை. "நிறுத்து நிறுத்து " என்றான். என்ன ஏது என்று பார்த்தால் நடைபாதையிலிருந்த கிளி ஜோஸ்யரிடம் போய் உட்கார்ந்திருந்தான்.

மனைவி, மகன், மகள்னு ஒவ்வொருத்தரா சொல்லி கடைசியில் அவன் பெயரையும் சொல்லி ஜோஸ்யம் கேட்டுவிட்டுத்தான் காருக்குத் திரும்பினான்.

எனக்கு பொறுக்கவில்லை. "ஏண்டா கைரேகை, நியூமராலஜி, வாஸ்துன்னு என்னவெல்லாமோ இருக்குதே! அதையெல்லாம் விட்டுட்டு போயும் போயும் கிளி ஜோஸ்யம் பார்க்கறயே! "என்று கேட்டேன்.

" போடா எங்க நாலு பேருக்குமான பலன்களை வரிசையா சொல்ல சீட்டை எடுக்கறதுக்காக அந்த ஜோஸ்யக்காரன் கிளியை இருபது நிமிஷம் வெளியே சுதந்திரமா இருக்க விட்டானில்லே" அதுக்காகத்தாண்டா என்றான்.

நண்பர்கள் பட்டியலில் அவன் மிகவும் உயர்ந்தவனாக தெரிந்தான்.


அன்பை எப்போதும் ரகசியமாக வைத்திருக்காதீர்கள். ஒவ்வொரு முறையும் நல்ல நல்ல செயல்கள் மூலம் அதை வெளிப்படுத்திக் கொண்டே இருங்கள்