என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, May 13, 2010

சம்பாத்தியம்


பஸ் ஸ்டாண்டின் எதிரிலிருந்த அந்த ஓட்டலில் எப்போதும் கூட்டம் அலைமோதும். ருசி கண்டவர்கள் மீண்டும் மீண்டும் சாப்பிட வருவதால்தான் அப்படி. ஓட்டலுக்குள் புகுந்த சரவணன் அவனின் அப்பா அங்கு சமையல்காரராக வேலை பார்ப்பதால் நேராக சமையலறைக்குள் சென்றான்.


பொள்ளாச்சிக்கு பக்கத்தில் உள்ள ப.க.புதூர்தான் அவன் சொந்த ஊர்.தென்னந்தோப்பு வைத்திருந்த அவனின் அப்பா மாசிலாமணி அவருடன் கூடப் பிறந்த நான்கு பெண்களையும் கரை சேர்ப்பதுக்குள் எல்லாவற்றையும் விற்றாக வேண்டியதாகிவிட்டது. குடும்பத்தை காப்பாற்ற அந்த ஓட்டலில் சமையல்காரருக்கு உதவியாளனாக வேலைக்கு சேர்ந்து படிப்படியாக முன்னேறி இன்று அந்த ஓட்டலின் சீஃப் குக் ஆக இருந்தார்.


ஒவ்வொரு மாதமும் சம்பள நாள் அன்று மாலை சரவணனை ஓட்டலுக்கு வரச்சொல்லிவிடுவார்.


அன்று சம்பள நாள் என்பதால் வழக்கம் போல சரவணனும் ஓட்டலுக்கு போய் சமையல் அறைக்குள் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த ஸ்டூலில் உட்கார்ந்து அங்கு நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு பக்கம் தோசைக் கல்லில் சாதா, ரவை, ஆனியன் என்று ஆர்டர்களுக்கு தகுந்தபடி வார்த்துக்கொண்டு மறு பக்கம் இட்லி போணியிலிருந்து ஆவி பறக்கும் இட்லிகளை எடுத்துத் தட்டில் கவிழ்த்துக் கொண்டிருந்தார் அவனின் அப்பா. இடையிடையே அடுத்த நாள் காலை தயாராகவேண்டிய ஸ்பெஷல் ஆர்டருக்கு தேவையான சாமான்களுக்கான லிஸ்டை அவரின் உதவியாளருக்கு சொல்லிக்கொண்டிருந்தார். பார்த்துக் கொண்டிருந்த சரவணனால் இருக்க முடியவில்லை. பாவம் என்னை படிக்க வைப்பதுக்காக அப்பா இப்படி நெருப்பில் வேகிறாரே என்று நினைத்துக்கொண்டு முள்ளின் மேல் உட்கார்ந்திருப்பது போலிருந்தான் .


இரவு எட்டு மணி ஆகவும் சரவணனை அழைத்துக்கொண்டு கல்லாவிலிருந்த முதலாளியிடம் போய் " அய்யா சம்பளத்தை கொடுத்தீங்கன்னா இவனை அனுப்பிச்சுடுவேன், அப்புறம் எங்க கிராமத்துக்கு பஸ் கிடையாது" என்றார் மாசிலாமணி.


" இவன் இந்த வருஷம் இன்ஜினியரிங் காலேஜில் சேரப்போறான் இல்லே? நீ கேட்டிருந்த அட்வான்ஸ் பணம் பத்தாயிரமும் தர்றேன். ஆனா லீவு போடாம வேலை செய்யணும் புரிஞ்சுதா ? " என்று சொல்லியவாறே பணத்தை எடுத்துக் கொடுத்தார்.


பணத்தை வாங்கி சரவணனிடம் கொடுத்து அனுப்பிவிட்டு "ரொம்ப நன்றிங்க முதலாளி" என்றார் .


" இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன். ஓவ்வொரு மாசமும் உன் பையனை இங்க வரவைச்சு சம்பளப்பணத்தை கொடுத்தனுப்பணுமா? ஒரு நடை கிராமத்துக்கு போய் உன் பொண்டாட்டிகிட்டே கொடுத்துட்டு வந்தாத்தான் என்ன? " என்று கேட்ட முதலாளியிடம் ...


"நான் படும் கஷ்டம் என் மகன் படக்கூடாதுங்கறதில நான் உறுதியா இருந்தாலும் அவனை பணக்கஷ்டமே தெரியாமல் வளர்க்க நான் விரும்பலை. நான் கஷ்டப்பட்டுத்தான் சம்பாதிக்கிறேன் என்பதை அவனும் உணரணும்கிறதுக்காகத்தான் ஓவ்வொரு மாசமும் சம்பள நாள் அன்று அவனை வரச்சொல்லி சமயலறையில் காக்க வச்சு நான் படற கஷ்டங்களை நேரடியா பார்க்க வைக்கிறதுனால அவனும் அதை உணர்ந்து பொறுப்பா நடந்துகிட்டு நல்லா படிச்சுமுதல் ரேங்க் வாங்கறான் அய்யா" என்றார்.


" நீ ரொம்ப படிக்கலை என்றாலும் வாழ்க்கையை நல்லாவே படிச்சு வச்சிருக்கேய்யா " என்ற முதலாளியை நெகிழ்ச்சியுடன் பார்த்தார் மாசிலாமணி.

-ரேகா ராகவன்.

தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்!

Friday, April 30, 2010

பாராட்டு/ பசி/ இருவர்/வலை




பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம். முதலில் பதிவுலகத்துக்குள் " ரேகா ராகவன் " என்ற இந்த வலைப்பூவில்தான் என் பயணத்தை தொடங்கினேன். அதன் பின்னர் பத்திரிக்கைகளில் வெளியான என் சிறுகதைகளுக்காகவும் வலைப்பூவுக்கென வடிவமைத்து எழுதும் சிறுகதைகளை வெளியிடவும் "அன்பே சிவம்" என்ற வலைப்பூவையும் தொடங்கி என்னால் இயன்ற வரையில் நல்ல கருத்துக்களை சொல்ல ஓரளவுக்கு முயன்று வருகிறேன். அந்த வகையில் இரு வலைப்பூக்களிலும் இதுவரை 49 பதிவுகளை இட்டிருக்கிறேன். இது எனது 50-வது பதிவு. உங்களின் நல் ஆதரவோடு மேலும் பல நல்ல பதிவுகளை எதிர் காலத்தில் தர விழைகிறேன்.



1. பாராட்டு

வெற்றி பெற்ற சினிமாவின்
இயக்குனருக்கு பாராட்டு விழா.
மூலக் கதையை எழுதியவன்
சோகத்தோடு மூலையில்.

2. பசி

பொம்மைக் குழந்தைக்கு
பால் கொடுப்பது போல
நடித்துக்கொண்டிருந்தது
பசியோடிருந்த குழந்தை.

3 . இருவர்

பெண் பார்த்து நிச்சயித்த பின்பு
அவனுக்கு ஏற்பட்டது தவிப்பு
அவளுக்குள் ஏற்பட்டது குறுகுறுப்பு.

4. வலை

திருடனை வலை வீசி
தேடினது போலீஸ்
கடைசியில் அகப்பட்டான்
ஒரு அப்பாவி.



கவிதை எழுதும் கலைஞன் பெருமைக்கு உரியவன் என்றால், ஒரு நிலத்தை உழுபவனும் கவிஞன்தான்!

Thursday, April 22, 2010

நம்பிக்கை



தினமும் வெளியே புறப்படும்போது தெரு முனை பிள்ளையார் கோயில் முன் காரை நிறுத்தி இறங்கி தரிசித்துவிட்டு செல்வது வழக்கம். "நீயும் வாயேண்டா! என்று காரிலிருந்த என் நண்பன் கார்த்திக்கை கூப்பிட்டேன். அவனோ "இல்லடா நீ போயிட்டு வா ! " என்றான்.

தரிசனம் முடித்து மீண்டும் காரை எடுத்தேன். பாதி வழி போகவில்லை. "நிறுத்து நிறுத்து " என்றான். என்ன ஏது என்று பார்த்தால் நடைபாதையிலிருந்த கிளி ஜோஸ்யரிடம் போய் உட்கார்ந்திருந்தான்.

மனைவி, மகன், மகள்னு ஒவ்வொருத்தரா சொல்லி கடைசியில் அவன் பெயரையும் சொல்லி ஜோஸ்யம் கேட்டுவிட்டுத்தான் காருக்குத் திரும்பினான்.

எனக்கு பொறுக்கவில்லை. "ஏண்டா கைரேகை, நியூமராலஜி, வாஸ்துன்னு என்னவெல்லாமோ இருக்குதே! அதையெல்லாம் விட்டுட்டு போயும் போயும் கிளி ஜோஸ்யம் பார்க்கறயே! "என்று கேட்டேன்.

" போடா எங்க நாலு பேருக்குமான பலன்களை வரிசையா சொல்ல சீட்டை எடுக்கறதுக்காக அந்த ஜோஸ்யக்காரன் கிளியை இருபது நிமிஷம் வெளியே சுதந்திரமா இருக்க விட்டானில்லே" அதுக்காகத்தாண்டா என்றான்.

நண்பர்கள் பட்டியலில் அவன் மிகவும் உயர்ந்தவனாக தெரிந்தான்.


அன்பை எப்போதும் ரகசியமாக வைத்திருக்காதீர்கள். ஒவ்வொரு முறையும் நல்ல நல்ல செயல்கள் மூலம் அதை வெளிப்படுத்திக் கொண்டே இருங்கள்

Saturday, April 10, 2010

யார் அழகு?




கபாலீஸ்வரர் கோவில்.

பிரதோஷ பூஜை தரிசித்து கோயில் பிரகாரத்தை மஞ்சள் நிற சுடிதாரில் கமலாவும்
ஆரஞ்சு சுடிதாரில் வைதேகியும் வலம் வந்துகொண்டிருந்தனர் .

அதற்கு ஒரு காரணம் இருந்தது.

முதல் நாள் தான் முடிந்திருந்தன கமலாவின் காலேஜ் தேர்வுகள். அரியர்ஸ் இல்லாமல் எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெறணும் என்று வேண்டிக் கொள்வதற்காகவும் இருவரில் யார் அழகுன்னு வைதேகிக்கு புரிய வைக்கவும் பக்கத்து வீட்டு வைதேகியையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தாள் அவள்.
இரண்டாவது சுற்று வந்துகொண்டிருக்கும்போதுதான் முன்னே சென்று கொண்டிருந்த மாமி அவள் பெண்ணிடம் " பின்னாடி மஞ்சள் சுடிதாரில் வர்றவ அழகா இருக்கா இல்லே?" என்று கேட்க, அவளுடைய பெண் திரும்பி பார்த்துவிட்டு " போம்மா உனக்கு ரசனையே இல்லே. அவளை விட அவள் பக்கத்தில் ஆரஞ்சு சுடிதாரில் வர்ற பொண்ணுதாம்மா நகை எதுவும் போட்டுக்காமலேயே களையா கண்ணுக்கு லட்சணமா இருக்கா " என்றாள்.

" பார்த்தியாடி! நான் ஏழை, போட்டுக்க நகைநட்டுன்னு ஒண்ணும் இல்லே, அதான் யாருமே வராத நேரம் பார்த்து கோவிலுக்கு போயிட்டு வருவேன்னியே? நகைக்கடையா வந்திருக்கிற என்னை விட நீ தான் அழகுன்னு சொன்னதை இப்ப உன் காதால கேட்டே இல்ல? உன் தாழ்வு மனப்பான்மையை இனிமேலாவது மூட்டை கட்டி வெச்சுட்டு வாழக் கத்துக்கோ! " என்று கமலா கூறவும் ...

மூன்றாவது சுற்றை சந்தோஷமாக வலம் வந்தாள் வைதேகி.


Thursday, March 11, 2010

வேட்டை

கிண்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சத்யகுமாருக்கு மகாபலிபுரம் சென்று உள்ளூர் போலீஸ் உதவியுடன் அறிவழகனின் வீட்டைக் கண்டுபிடிப்பதில் எவ்வித சிரமமும் இருக்கவில்லை.
அதிரடியாய் வீட்டுக்குள் புகுந்தார். அங்கிருந்த பீரோவை குடைந்து அதிலிருந்த ஒரு போட்டோவை எடுத்தார் .

"இந்தப் பெண்ணை எங்கேடா ஒளிச்சு வச்சிருக்கே நாயே?" இன்ஸ்பெக்டர் கேட்கவும், ஆடிப் போய்விட்டான் அறிவழகன்.

" அவங்க எங்கிருக்காங்கன்னு எனக்குத் தெரியாது சார்".

"எ...ன்னது உனக்குத் தெரியாதா? அவ பக்கத்தில் இருக்கிறது நீதானே?"

"ஆ...ஆமாம். சார்"

'பின்னே தெரியாதுங்கறே! அவ யாருன்னு தெரியுமா? தீவிரவாதிங்க கும்பல்ல அவ ஒருத்தி. மூணு வருஷமா அவளைத் தேடிக்கிட்டிருக்கோம். அவளோட தலைக்கு அரசாங்கம் நிர்ணயிச்சிருக்கற விலை எவ்வளவு தெரியுமா? மூணு லட்சம்! மரியாதையா அவ இருக்கற இடத்தைக் காட்டிடு . இல்லே உனக்கு எப்படி ட்ரீட்மெண்ட் கொடுத்தா நீ உண்மையை கக்குவேன்னு எனக்குத் தெரியும்டா ராஸ்கல்".

அதிர்ந்தான் அறிவழகன். தீபா தீவிரவாதி கும்பலை சேர்ந்தவளா? தெரியாமல் போய்விட்டதே!

டூரிஸ்ட் பஸ்ஸில் மகாபலிபுரத்தை சுற்றிப் பார்க்க வந்தவளிடம் சிரிக்கச் சிரிக்கப் பேசி எல்லா இடங்களையும் சுற்றிக்காண்பித்துவிட்டு, அவள் புறப்படுகிற சமயத்தில் வழக்கமாக எல்லோரிடமும் கேட்பது போல கேட்டான். "உங்க ஞாபகமா உங்களோட ஒரு போட்டோ எடுத்துக்கறேனே ப்ளீஸ்.."

அவள் சம்மதித்தாள். அவனுடைய சகாவை விட்டு போட்டோ எடுக்க வைத்து, அவளுடைய அட்ரசையும் வாங்கிக் கொண்டு அனுப்பியது இவ்வளவு பெரிய சிக்கலில் தன்னை மாட்டிவிடும் என்று அவன் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

"சார்..சார், உண்மையை சொல்லிடறேன் சார்," என்று கூறிவிட்டு, மகாபலிபுரத்திற்கு வந்து சேர்ந்ததிலிருந்து அவளோடு அவன்
போட்டோ எடுத்துக் கொண்டது வரை விலாவாரியாக சொன்னான்.

"ம்... அப்ப நான் சொல்ற மாதிரி இந்த பேப்பரில் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடு!".

" எனக்கும் இந்தப் போட்டோவில் இருக்கும் தீபாவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. டூரிஸ்ட் கைடு என்ற முறையில் பக்கத்தில் நின்று நட்புடன் போட்டோ எடுத்துக்கொண்டதுதான் உண்மை."

--- அறிவழகன்.

என்று இன்ஸ்பெக்டர் சொல்லச் சொல்ல எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான்.

"இந்த போட்டோவோட நெகடிவ் எங்கேடா வச்சிருக்கே?'--இன்ஸ்பெக்டர் அதட்டவும் பெட்டியில் பத்திரப்படுத்தியிருந்ததை
எடுத்து பவ்யமாக நீட்டினான்.

கிண்டி போலீஸ் ஸ்டேஷன்.

"தீபா உங்கிட்டே என்ன சொன்னான் அந்தப் பொறுக்கி?அவனோட ஆசைக்கு இணங்கலைன்னா அவனை நீ காதலிச்சதா சொல்லி அதுக்கு அத்தாட்சியா இந்த போட்டோவை காண்பிப்பேன்னுதானே? இனிமே நீ இருக்கிற திசையின் பக்கம் கூட அவன் தலை வச்சு படுக்கமாட்டான். இனி முன்பின் தெரியாதவங்களோட நின்னு போட்டோ எடுத்துக்காதே! உன்னோட படிக்கற பொண்னுங்ககிட்டேயும் சொல்லு" .

"இந்தாங்க சார் அந்தப் பையன் எழுதிக் கொடுத்த லெட்டரும் போட்டோவின் நெகட்டிவ்வும்"--தீபாவின் அப்பாவிடம் இரண்டையும் கொடுத்த இன்ஸ்பெக்டர் கடமை செய்துவிட்ட திருப்தியோடு அடுத்த வேலையைக் கவனிக்கப் புறப்பட்டார்.

( "பாக்யா" இதழில் வெளியான என் சிறுகதை )

எதையும் செய்த பிறகு அழுவதைவிட அதை செய்யாமல் இருப்பதே நலம்