என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, September 18, 2009

ரசம் ஆஹா ! என்ன ருசி!

சமீபத்தில் ஒரு திருமணத்துக்கு போயிருந்தேன். அறுசுவையான சாப்பாடை உண்டு மகிழ்ந்ததும் உடனே சமையல் கட்டுக்கு போய் சமையல் செய்த கைகளை பிடித்துக் (குறிப்பாக அந்த ரசம் ஆஹா ! என்ன ருசி! ) குலுக்கி பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. அடுத்த நிமிடம் அங்கே ஆஜர்.

அங்கே நான் கண்ட காட்சி.

சமையல்காரர் ஒரு சின்ன இலையில் தயிர் சாதத்தை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். " எங்களுக்கெல்லாம் அறுசுவை உணவை படைத்துவிட்டு நீங்கள் வெறும் தயிர் சாதம் மட்டும் சாப்பிடறீங்களே, ஏன் சார்?" என்று கேட்டதும், "அதுவா சமையல் செய்யும் போது அதிலிருந்து கிளம்பும் வாசனை நாசிக்குள் புகுந்து வயிறை அடைச்சிடுதா, அதான் வெறும் தயிர் சாதம் தான் சாப்பிட பிடிக்குது " என்றார் (ஓஹோ அதான் சமையல் செய்யும் பெண்கள் தன் சமையலை தானே சாப்பிட பிடிக்காமல் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லுமாறு கணவர்களை நச்சரிக்கிறாங்களோ? ) . அவரின் சமையலை பாராட்டிவிட்டு அவரிடம் இந்த சூப்பர் ரசம் எப்படீங்க செய்வது என்று கேட்டேன். ரசத்துக்கு போடும் பொடியில் தான் இருக்கு அந்த ருசி என்றார். அவரிடம் கேட்டு அறிந்து கொண்ட ரசப் பொடி செய்முறை கீழே:

ரசப்பொடி:

தேவையான பொருள்கள்

துவரம் பருப்பு : 1/2 கிலோ

மிளகு : 250 கிராம்

சீரகம் : 200 கிராம்

பெருங்காயம் : 100 கிராம்

மிளகாய் வத்தல் : 300 கிராம்

தனியா : 3/4 கிலோ

மஞ்சள் பொடி : 50 கிராம்

கறிவேப்பிலை : 1 கைப்பிடி

செய்முறை : வாணலியை அடுப்பில் வைத்து முதலில் மிளகை லேசாக வறுக்கவும். பின்னர் துவரம் பருப்பு. அது லேசாக வறுபட்டதும் மிளகாய் வத்தலை கிள்ளிப் போட்டு விடுங்கள். தனியாவை சேருங்கள் . அதன் பின் கறிவேப்பிலை. பிறகு கடைசியாக சீரகம் போட்டு வறுத்து விடுங்கள். பெருங்காயத்தை பொடித்து எடுத்து வைத்திருந்து (சூடான வெறும் வாணலியில் கெட்டி பெருங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக்கி போட்டு பொறித்து எடுத்துக்கொண்டு) இந்த கலவையில் போட வேண்டும். இதை மிக்ஸ்சியில் சின்ன ரவை பதத்துக்கு அரைத்து எடுத்துக் கொண்டு பிறகு மஞ்சள் பொடியை நன்றாக கலந்து விடுங்கள். 4 டம்ளர் தக்காளி அல்லது பருப்பு ரசத்துக்கு இந்த ரசப்பொடி 1-1/2 ஸ்பூன் போட வேண்டும்.

என்ன உங்கள் வீட்டிலும் இனி ஆஹா ரசம் தானே!

Monday, September 14, 2009

"டெல்லி கணேஷும் நானும் "

அவ்வை ஷண்முகி படத்தில் நடிகர் டெல்லி கணேஷை மணிவண்ணன் கோஷ்டியினர் தெளிய வைத்து அடிக்கும் காட்சியில் அவரது நடிப்பு மட்டும் தனித்து தெரியும். அதை இப்போது நினைத்தாலும் எனக்கு குபுக் என்று சிரிப்பு வருகிறது.
கடந்த ஞாயிறு அன்று அவர் அம்பத்தூர் ஹுமர் கிளப் நடத்திய கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அப்போது அவர் சில நகைச்சுவையான காட்சிகளை விவரித்தார். அது...


ஒரு நாள் ஏ.வி.எம் படப்பிடிப்பு நிலையத்தின் பின் புறம் உள்ள சுடுகாட்டில் ஒரு படத்துக்கான ஷூட்டிங் எடுத்தார்கள். நான் அங்கே நடிக்க சென்றிருந்தேன்.லஞ்ச் பிரேக்கின் போது அந்த சுடுகாட்டின் நிஜமான வெட்டியானுடன் அவரைப் பற்றியும் அவர் செய்யும் வேலைகளைப் பற்றியும் பேச்சுக் கொடுத்ததில் அவர் நெருங்கிய நண்பர் போல என்னிடம் பேச ஆரம்பித்துவிட்டார். அவருக்கு லஞ்ச் வரவழைத்து கொடுத்து மேலும் குஷிப்படுத்தினேன். மாலை ஷூட்டிங் முடிந்து எல்லோரும் சென்றுவிட்டோம். அதற்கு அப்புறம் வேறு ஷூட்டிங்குகளில் கலந்து கொண்டதால் அதைப் பற்றி மறந்தே போய்விட்டேன்.

ஒரு பதினைந்து நாள் கழித்து கோடம்பாக்கத்தில் என் கார் சிக்னலுக்காக காத்திருந்தபோது காரை ஓட்டி வந்த என்னை அந்த வெட்டியான் சைக்கிளில் இருந்தவாறே பார்த்து " என்ன சார் அங்கே எப்ப வர்றீங்க?" என்று ஒரு அணுகுண்டை வீசினார். நான் ஆடிப் போய்விட்டேன். அந்த இடத்தில் அந்த சூழ்நிலையில் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு அவனிடம் "இல்லப்பா எனக்கு இன்னும் மூணு நாலு கமிட்மென்ட்ஸ் இருக்கு, அது முடிந்ததும் நானே வந்துடுவேன் !" என்றேன்.
அதுக்கு அந்த வெட்டியான் " ஐயோ சார் நான் அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை,மறுபடியும் ஷூட்டிங்குக்காக எப்போ அங்கே வர்றீங்க? என்று தான் கேட்டேன். தப்பா இருந்தா மன்னிச்சிக்கோ சார்! " என்றான். " இதை அப்போதே இப்படி கேட்டிருக்க வேண்டியதுதானே?" என்று நான் அவனிடம் சொல்லவும் சிக்னல் விழவும் சரியாக இருந்தது. அப்புறம் நான் காரை கிளப்பிக்கொண்டு போய்விட்டேன்.

என்ன நண்பர்களே அவரின் நகைச்சுவையை ரசித்தீர்களா?
எல்லாம் சரி. தலைப்புக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம் என்றுதானே கேட்கிறீர்கள்? சம்பந்தம் இருக்கு.நடிகர் டெல்லி கணேஷ் என் நீண்ட நாள் நண்பர். அவரை மாதிரி நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவரைப் பற்றி நான் என் நண்பர்களிடம் பேசும்போது டெல்லி கணேஷும் நானும் என்றுதான் பேச்சை ஆரம்பிப்பேன். இப்போ தலைப்பு சரியாப் போச்சா?


Friday, September 11, 2009

கோவணம் என்பது என்ன?

நான் படிக்கும் போது ஒவ்வொரு சனிக்கிழமையும் என் அம்மா என்னையும் என் அண்ணனையும் கூப்பிட்டு கோவணம் கட்டச் சொல்லி எங்கள் தலையிலும் உடம்பிலும் நல்லெண்ணையை தேய்த்துவிட்டு அது நன்றாக ஊறும் வரை தோட்ட வேலை செய்துவிட்டு வாங்க என்று அன்புக் கட்டளை இடுவாள். " எதுக்கும்மா கோவணம் கட்டிண்டு எண்ணெய் தேச்சுக்கணும்? நிஜாரோடேயே தேய்ச்சிக்கரேனே ?" என்று நான் கேட்டா " அப்புறம் நிஜாரெல்லாம் எண்ணெய் ஆயிடும் , ஸ்கூலுக்கு எதை போட்டுக்கிட்டு போவே?" என்பாள். அப்புறம் என்ன? அண்ணனுடன் குஷியாக வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்துக்கு சென்று அங்கு உள்ள வாழை மரங்களுக்கு தண்ணீர் செல்ல வழி அமைத்தும், பூச்செடிகளை அழகு படுத்தியும், களை பிடுங்கியும் ஆடு மாடுகள் வராத மாதிரி வேலியை நெருக்கமாக கட்டிவிட்டு பிறகு சுகமாக ஒரு வெந்நீர் குளியல் போட்டு விட்டு வந்தால் அம்மா தட்டில் சாப்பாடு போட்டு "சாப்பிடுங்கடா ! " என்பாள்.


படித்து முடித்து அரசு வேலைக்கு போய் மாடு மாதிரி உழைத்துவிட்டு இப்போது ஓய்வு பெற்ற பின் நேரத்தை பயனுள்ள விதத்தில் செலவிட தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ ஒரு மணி நேரம் தோட்ட வேலை செய்வதில் ஒரு தனி சுகத்தை அடைகிறேன். ஆனால் என் மனைவியோ " நீங்க தோட்ட வேலை செய்கிறேன் பேர்வழின்னு இப்படி வேட்டி பூரா மண்ணை பூசிக்கிட்டு வரீங்களே, இனிமே பேசாம கோவணம் கட்டிக்கிட்டு வேலை செய்யுங்க!" என்கிறாள். அது சின்ன வயசில் சரி. இப்போ?

இதைப் பற்றி சிந்தித்தும் புத்தகங்களை படித்தும் பார்த்தேன். இந்த கோவணம் என்பது என்ன? ஒரே துண்டுத் துணியால் ஆன இடைக்கு கீழ் அணியும் ஆடை. பொதுவாக, ஆண்கள் மட்டுமே இதை அணிகிறார்கள். துண்டு மற்றும் பழைய வேட்டிகளில் இருந்து கிழிக்கப்பட்ட துண்டுத் துணியைத்தான் இதற்கு பயன்படுத்துகின்றனர் . இதை இடையில் கட்ட அரைஞாண் கயிறு (அருணாக் கயிறு) உதவுகிறது.

வயலில் வேலை செய்பவர்கள் மற்றும் வெயிலில் வேலை செய்யும் ஏழைகள் முன்பு இதை பயன்படுத்தி வந்தார்கள். பழைய கால சினிமாக்களில் ஆண்கள் இதை கட்டிக்கொண்டு ஏர் உழுவதையும், நாத்து பறிப்பதையும் , நடுவதையும் பார்க்கலாம். இப்போதும் ரயில் பயணங்களின்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக வயலில் வேலை செய்பவர்களை கோவணத்துடன் காண முடிகிறது. நாகரீகம் முன்னேறவும் கிராமத்தில் வசிப்பவர்களும் இதை துறந்து விட்டு அண்டர்வேர் (வடிவேலு, ராமராஜன், ராஜ்கிரண் ஆகியோர் இது தெரிகிற மாதிரி வேட்டியை தூக்கி கட்டி இருப்பார்கள்) எனப்படும் உள்ளாடையையே தற்போது அணிகின்றனர். தற்போது இளைய தலைமுறையினர் யாரும் இதை அணிய விரும்புவதில்லை. எனினும் நடிகர் கமலஹாசன் அந்த காலத்தில் " பதினாறு வயதினிலே" படத்தில் வெறும் கோவணத்துடன் தோன்றி அவருடைய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். உள்ளாடையாக இதை அணிவதை தற்காலத்தில் நாகரிகமாக எவராலும் கருதப்படுவதில்லை. ஆயத்த உள்ளாடைகள் வந்து விட்ட பிறகும் வறுமை மற்றும் பழக்கம் காரணமாகவோ எளிமை கருதியோ சிலர் கோவணம் அணிகிறார்கள். அந்த காலங்களில் ஆண்கள் குளிக்கும்போது கோவணத்துடன் குளித்து பின் உலர்ந்த கோவணம் ஒன்றை கட்டிக்கொள்வார்கள். இதை வயது வித்தியாமின்றி, சிறியவர் முதல் பெரியவர், முதியவர் என எல்லோரும் கட்டிக்கொண்டனர். சிறு ஆண் பிள்ளைகளுக்கு வீட்டில் இருக்கும் போது இதை மட்டுமே கட்டி விடுவதுண்டு. கிராமங்களில் சின்ன பெண் குழந்தைகளுக்கு கூட இதை கட்டிவிடுவதுண்டு. காசியில் சாதுக்கள், சாமியார்கள் கோவணம் மட்டுமே அணிந்து திரிவதை பார்கிறோம். இவ்வளவு ஏன்?முருகக் கடவுளே ஆண்டியாக இருந்த போது கோவணத்துடன் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.

இதையெல்லாம் இப்போ எதுக்கு எங்களுக்கு சொல்லிக்கிட்டு இருக்கே என்கிறீர்களா? இப்போதுள்ள சிறுவர்களிடம் (ஏன் உங்களில் சிலரிடம் கூட) கோவணம் என்றால் என்ன என்று கேட்டுப் பாருங்கள். நீங்களோ அல்லது அவர்களோ பதில் சொல்லிவிட்டால் நான் இந்த பதிவையே போடவில்லை என்று நினைத்து விட்டுப் போகிறேன்.

Sunday, September 6, 2009

கடப்பா செய்வது எப்படி?



நாகப்பட்டினத்தில் நான் பணி புரிந்த போது பெருமாள் கோயில் எதிரே உள்ள "லக்ஷ்மி கபே"-யில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். வாரம் ஒரு முறை காலையிலோ அல்லது மாலையிலோ அங்கே "கடப்பா" என்று ஒன்று போடுவார்கள். இட்லி, பூரி, தோசைக்கு தொட்டுக்கொள்ள இது ஜோராக இருக்கும். மற்ற நாட்களில் வராதவர்கள் கூட அன்று தவறாமல் ஆஜராகி விடுவார்கள். சின்ன வயசில் விழுப்புரத்தில் படித்த போது இதை ருசித்திருக்கிறேன். அதன் பின்பு இங்கேதான் சாப்பிடும் பாக்கியம் கிடைத்தது. யான் பெற்ற சுவையை நீங்களும் பெற வேண்டும் என்பதற்காக அதன் செய் முறையை கீழே தந்துள்ளேன்:-

கடப்பா

தேவையான பொருள்கள் :

உருளைக்கிழங்கு : இருநூறு கிராம்
பெரிய வெங்காயம் : முன்னூறு கிராம்
பயத்தம் பருப்பு : நூறு கிராம்
பூண்டு : எட்டு பல்
பச்சை மிளகாய் : ஆறு
தேங்காய் : அரை மூடி
பட்டை : பத்து கிராம்
லவங்கம் : பத்து கிராம்
கசகசா : இருபது கிராம்
பொட்டு கடலை : ஐம்பது கிராம்
மஞ்சள் தூள் : ஒரு டீ ஸ்பூன்
எண்ணெய் : இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
எலுமிச்சம் பழம் : அரை மூடி
செய்முறை:முதலில் பயத்தம் பருப்பையும் உருளைக் கிழங்கையும் வேகவைத்துக் கொள்ளவும்.தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு பொட்டுக் கடலை, தேங்காய்த் துருவல், 4 பல் பூண்டு, கசகசா, பச்சை மிளகாய்இவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதன் பின்பு வாணலியில் எண்ணை வைத்துக் காய்ந்ததும், 4 பல் பூண்டு போட்டு சிவக்க வறுத்து , பின் பட்டை, இலவங்கம், நறுக்கிய வெங்காயம் என்ற வரிசையில்சேர்த்து வதக்கவும்.வெங்காயம் சிவந்ததும், வேகவைத்த பயத்தம்பருப்பு, 2 கப் தண்ணீர், உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.கொதிக்க ஆரம்பித்ததும், உதிர்த்து வைத்துள்ள உருளைக் கிழங்கு, அரைத்துவைத்துள்ள மசாலாவைச் சேர்த்து மேலும் சில நிமிடங்களுக்குக் கொதிக்கவைத்துஇறக்கவும்.இறக்கிய சூட்டோடு எலுமிச்சம் பழம் 1/2 மூடி பிழிந்து, கொத்தமல்லித் தழையை அதன் மேல் தூவி விடுங்கள். கடப்பா ரெடி. செய்யுங்க , சாப்பிடுங்க ,அசத்துங்க .

Saturday, September 5, 2009

புகை (சிறுகதை)


பஸ் ஸ்டாண்டில் காலியாக இருந்த பஸ்சுக்குள் ஏறி ஜன்னல் ஓரமாய் உட்கார இடம் கிடைத்ததில் என்னவோ என் குழந்தைக்கு எல்.கே.ஜி-யில் சேர ஸீட் கிடைத்தது போன்ற மகிழ்ச்சி எனக்கு.
கொஞ்சம் கொஞ்சமாய் பஸ் நிரம்ப பிச்சைக்காரர்கள் ஒவ்வொருவராய் வந்து காசு வாங்கிக்கொண்டு போனார்கள். டிரைவர்களோ சீட்டுக்கட்டுக்களை அடுக்கி தள்ளிவிடும் விளையாட்டு மாதிரி பஸ்களை நெருக்கமாக நிறுத்தி இருந்தார்கள்.

அழுக்கு லுங்கியுடனிருந்த ஒருவன் இரண்டு பஸ்களுக்கிடையில் நின்று கொண்டு சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தான். அவன் நின்றிருந்த இடம் போயும் போயும் என்னோட ஜன்னலுக்கு கீழேதான் இருக்க வேண்டுமா? சிகரெட் புகையை நான் கேட்காமலேயே சுவாசிக்க அனுப்பிக் கொண்டிருந்தான்.

தலையை வெளியே நீட்டி அவனிடம் " சார் அப்படி எங்கேயாவது போய் சிகரெட் பிடிக்கக்கூடாதா? " என்று நான் கேட்க--

" தோடா பஸ்சுக்குள்ளார புடிக்க கூடாதுங்கராங்கலேன்னு வெளியே நின்னு பிடிச்சா பெரீசா கேட்க வந்துட்டியே, ஏன் நீ தள்ளி உட்காரு "

" இதுவும் பப்ளிக் இடம் தான். இங்கெல்லாம் சிகரெட் பிடிக்கக் கூடாது "

" யேய் என்னா? என்னான்ர இப்ப?" மிரட்டலுடன் அவன் கேட்கவும் மௌனமானேன்.

என்னை வென்றுவிட்ட நினைப்பில் அலட்சிய பார்வையினை என்னை நோக்கி வீசியவன் மற்றவர்களை பார்த்து சிரித்தவாறே புகை பிடிப்பதை தொடர்ந்தான். பஸ்சுக்குள்ளிருந்தவர்கள் இதை கண்டும் காணதவர்கள் போல படிப்பதிலும் மொபைலிலும் மும்முரமாய் இருந்தனர்.

அடங்கி அவதிப்பட வேண்டியதுதானா? யோசித்தேன்.

அடுத்த நிமிடம்...

திடீரென்று பயங்கர குமட்டல் சத்தத்துடன் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி வாந்தி எடுப்பது போல நாலைந்து முறை சவுண்ட் கொடுத்தேன்.

அதை சற்றும் எதிர்பார்க்காத அந்த லுங்கிக்காரன் பதறிப் பாய்ந்து தூர ஓடினான் பதட்டத்தில் கீழே விழுந்துவிட்ட சிகரெட்டை எடுக்காமலேயே.

பஸ்சும் புகையை கக்கியபடி புறப்பட எனக்கு நிஜமாகவே வயித்தை குமட்டியது.