என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, August 16, 2012

அறிவிப்பு




வாசகர்களுக்கு,

வணக்கம்.  பத்திரிக்கைகளில் வெளியான எனது சிறுகதைகள் மற்றும் சில பதிவுகளை எனது இன்னொரு ப்ளாக்கான http://www.anbesivam2009.blogspot.com - ல் இதுநாள் வரை வெளியிட்டு வந்தேன்.  ஆனால் "அன்பேசிவம்" என்ற பெயரில் வேறு சிலரும் ப்ளாக் நிர்வகித்து வருவதால் குழப்பங்களை தவிர்க்க வேண்டி எனது புனைப் பெயரான "ரேகா ராகவன்" என்ற ப்ளாக்-ல் இனி எனது படைப்புகளை வெளியிட தீர்மானித்துள்ளதால் "அன்பே சிவம்" என்ற ப்ளாக்கில் இனி பதிவுகள் எதுவும் வெளிவராது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். "அன்பே சிவம்" என்ற ப்ளாக்கிற்கு வரும் வாசகர்களை இனி "ரேகா ராகவன்" என்ற ப்ளாக்கிற்கு இட்டுச் செல்லும் வகையில் தக்க மாற்றங்கள் செய்துள்ளேன் என்பதையும்  தெரிவித்துக் கொண்டு தொடர்ந்து தங்கள் நல் ஆதரவை நல்குமாறு வேண்டுகிறேன்.

என்றென்றும் அன்புடன்
ரேகா ராகவன்.

Tuesday, August 14, 2012

கேட்டதில் பிடித்தது




கண்களுக்கு கெடுதல்  தராத பொழுதுபோக்கு ஒன்று உண்டென்றால் அது ரேடியோ தான் என்பதில் மாற்று கருத்து எதுவும் இருக்காதென நினைக்கிறேன். அந்த வகையில் தொலைக்காட்சி பார்ப்பதை  விட நான் அதிகம் விரும்புவது ரேடியோவைத்  தான். இதில் இன்னொரு சௌகரியமும் உண்டு. தொலைக்காட்சியை   இயக்கிவிட்டு  நீங்கள் மற்ற வேலைகளை பார்க்க முடியாது.  ஆனால் ரேடியோவை  இயக்கிவிட்டு அவற்றைப் பார்க்க முடியும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

ரேடியோவில் தினமும் நான் விரும்பிக் கேட்பது சென்னை வானொலியின்  அலை வரிசை 1 -ஐ. தினமும் காலை 06.55 முதல்  07.45 வரை அருமையான நிகழ்ச்சிகளை  ஒலிபரப்புகிறார்கள்.  நம்மைச் சுற்றியுள்ள பூமி  எப்படியெல்லாம் மாசு படுத்தப்படுகிறது, அதை கட்டுப்படுத்த என்னவெல்லாம் செய்யலாம் என்பதை  "சுற்றுச் சூழல் சிந்தனை" என்ற தலைப்பிலும்,மருத்துவம் சம்பந்தப்பட்ட  செய்திகளை "நலமாய் வாழ" என்ற தலைப்பிலும், பல்வேறு நிகழ்வுகள், மற்றும் ஒரு பொருளைப் பற்றிய முழுமையான தகவல்களை "நாளும் அறிவோம்" என்ற தலைப்பிலும் நிகழ்ச்சிகளை  தொகுத்தளிக்கிறார்கள். தவிர, அறிவியல் செய்திகளுக்காக   "புதியதோர் உலகம்",   மக்களின் சமூக பொருளாதார பிரச்சனைகளுக்காக " நகர்வலம்", என்று  சுவையான நிகழ்ச்சிகள். 

சென்ற வாரத்தில் ஒரு நாள்  "இன்சொல் அமுது " என்ற தலைப்பின் கீழ் திரு. ஆறுமுகத் தமிழன் என்பவர் சொன்ன ஒரு சம்பவம்:

எனது மேலதிகாரி ஆங்கிலமும் தமிழும்  பேசுவார். ஒரு நாள் அலுவலகப் பணியிலிருந்தபோது அவர்  என்னிடம் " மதியம் இரண்டரை மணிக்கு ஒருவர் என்னைப் பார்க்க வருவார். அவரை அப்படியே அனுப்பிடுங்க!" என்று கூறினார். நானும் சரியென்று கூறி விட்டு  காத்திருந்தேன். அந்த நபரும் சரியான நேரத்திற்கு வந்து,  தான் இன்னாரை  சந்திக்க  வந்திருப்பதாக  கூற, நானோ  அதிகாரியின் கட்டளையை நிறைவேற்றுவதாக எண்ணிக்கொண்டு  அவரிடம், "இப்போது அவரை சந்திக்க முடியாது," என்று கூறி அனுப்பிவிட்டேன். பின்னர் அவர் வந்ததையும், திருப்பி அனுப்பியதையும் இன்டர்காமில் என் மேலதிகாரியிடம் தெரிவிக்க, அவர்  "என் அப்படி செய்தீர்கள்?" என்று கேட்க, "நீங்கள்தானே சார் வருபவரை "அப்படியே அனுப்பிடுங்க!"ன்னு சொன்னீங்க?"ன்னு நான் சொல்ல, அவரோ கோபத்தின் உச்சிக்கே சென்று "அவரை எதுவும் விசாரிக்காமல் என் ரூமிற்கு அனுப்புங்கன்னு சொன்னதை அப்படியா நீங்க புரிஞ்சுக்குவீங்க!" என்று கத்த எனக்கு என்ன பதில் சொல்வதென்பதே தெரியவில்லை. எதேச்சையாக ஜன்னலை எட்டிப்  பார்க்க வந்தவன் அப்போதுதான் அந்த நபர் காருக்குள் ஏறிக்கொண்டிருந்ததை கவனித்தேன். உடனடியாக கேட்டிலிருக்கும் காவலாளியிடம் அந்த காரை சில நிமிடங்கள்  நிறுத்தி வைக்குமாறு இன்டர்காமில் கூறிவிட்டு, தட தடவென கீழே இறங்கிப் போய் அவரிடம், "சார், இப்போ  நீங்கள் அவரை பார்க்கலாம், ஃப்ரீயாகிவிட்டார்"  என்று  கூறி சமாளித்து மேலே அழைத்து வந்தேன்.


எப்படி இருக்கு பாருங்கள்! மேலதிகாரி முதலிலேயே, "அவர் வந்ததும் எதுவும் கேட்காமல் என் ரூமிற்கு அனுப்பிடுங்கன்னு" சொல்லியிருக்கலாம்.  இல்லை, முதலிலேயே ஆங்கிலத்தில் அதை சொல்லியிருக்கலாம். அதை விடுத்து, "அவரை அப்படியே அனுப்பிடுங்க!"ன்னு சொன்னது அர்த்தமறிந்து பேச  அவர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டுமென்பதை சொல்லாமல் சொல்லுதுன்னு  மனதுக்குள்  நினைத்துக்கொண்டே இதர வேலைகளில் மூழ்கிப் போனேன்.

எடைக்குப் போடவேண்டிய பழைய பேப்பர்களை அடுக்கிக்கொண்டே இதைக் கேட்ட நான் இனி பேசும்போதும் எழுதும் போதும் மிகவும்  கவனமாக இருக்க வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொண்டேன். நீங்களும்தானே?

Friday, August 3, 2012


படித்ததில் பிடித்தது

மாம்பழக் கவிச்சிங்க நாவலரின் உயிர் போகும்  தறுவாய்.  அருகிலிருப்போர், அவரது உதடுகள் உலர்ந்து போயிருப்பதைப் பார்த்தது, பாலில் ஒரு துணியை நனைத்து அவரது வாயில் ஒற்றுகிறார்கள். என்ன காரணமோ, அவர் அதனைத் 'தூ' என்று துப்புகிறார்.

"ஐயய்யோ பால் கசக்கிறதோ?" என்று பயந்து கொண்டே கேட்கின்றனர் பக்கத்திலிருப்போர்.

"மாம்பழக் கவி பதிலுரைக்கிறார்: "பாலும் கசக்கவில்லை; துணியும் கசக்கவில்லை!"

கசக்கப்படாத (துவைக்கப்படாத) அழுக்குத் துணியைப் பாலில் நனைத்துப் பிழிந்துவிட்டார்கள் என்று எவ்வளவு நயமாகக் கூறியிருக்கிறார்!

செத்துப் போகும் போதுகூடச் சிலேடை சொல்ல முடிகிறது என்றால், சாவு அவருக்கு அவ்வளவு சர்வ சாதாரணமாகிவிட்டது என்றுதானே அர்த்தம்!

( சுகி சிவம் எழுதிய "அச்சம் தவிர்" என்ற புத்தகத்திலிருந்து)