என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, January 31, 2010

ஏன் உன் மனைவி வரலை?


"என்னங்க இது... திடீர்னு இப்படிச் சொன்னா எப்படி? நேத்து வரை ஜனார்த்தனன் பொண்ணு கல்யாணத்துக்கு நாம ரெண்டு பெறும் போகிறதாதானே இருந்தது? இப்ப திடீர்னு நீங்க மட்டும் போறதா சொல்றீங்களே?" ஏமாற்றத்துடன் கணவன் கணேசனிடம் கேட்டாள்.

"இல்ல மீனா, எனக்கு மதுரைல திடீர்னு இன்ஸ்பெக் ஷன் போட்டுட்டாங்க. கல்யாணத்துல தலைய காட்டிட்டு அப்படியே டிரெயின் எறிடறேன்!"

"என்னமோ போங்க. கல்யாணத்துக்குன்னு புதுசா புடவைலேர்ந்து சகலமும் வாங்கியிருந்தேன். ம்... ஏமாற்றத்துடன் சமையலறைக்குள் புகுந்தாள் மீனாட்சி.

திருமண மண்டபத்தில்...

"என்னடா நீ மட்டும் வந்திருக்க? உன் மனைவியையும் அழைச்சிட்டு வந்திருக்கலாமே?" கேட்ட ஜனார்த்தனனை ஓரமாக அழைத்துச் சென்றான் கணேசன்.

"பத்து நாளைக்கு முன்னாடி உன் வீட்டுக்கு வந்திருந்தப்ப என்ன சொன்ன? உன் பெண்ணுக்கு சீர் கொடுக்கப் போற பீரோ,கட்டில்,மெத்தை,மைக்ரோவேவ் அவன், கிரைண்டர், வாஷிங்மெஷின், பாத்திரங்கள்,புத்தம் புது கார்... எல்லாத்தையும் கல்யாண மண்டபத்துல காட்சிக்கு வைக்கப் போறேன்னு சொன்னல்ல? அதனாலதான் என் பெண்டாட்டிய கூட்டிட்டு வரலை..."

"என்னடா சொல்ற?"

"பின்னே என்னடா... என் பையனுக்கு வரன் பேசி முடிச்சிருக்கேன். சீர் பத்தி பேச அடுத்த வாரம் அவங்க வீட்டுக்குப் போறோம். இந்த நேரத்துல நீ ஷோவுக்கு வச்சிருக்கற சீரை என் பெண்டாட்டி பார்த்தா, அவளுக்கும் இதெல்லாம் வேணும்னு ஆசை வந்துடாதா? அதனாலதான் அவள கூட்டிட்டு வரலை!" என்றான் கணேசன்.

(21.8.2008 "குங்குமம்" இதழில் வெளியான என் ஒருபக்கக் கதை.)
"சிறியவர்களுடன் பழகினால் மனது இளமையாகும்! பெரியவர்களுடன் பழகினால் அறிவு விருத்தியாகும்! சமமானவர்களுடன் பழகினால் மகிழ்ச்சி அதிகமாகும்!"

Tuesday, January 26, 2010

பாசம்.


பாசம்.


கூட்டில் குஞ்சுகளை

பொத்திப் பாதுகாக்கும்

தாய்ப்பறவை நெஞ்சிலிருப்பதும்

வீட்டில் குழந்தைகளை

போற்றிப் பாதுகாக்கும்

தாயின் நெஞ்சிலிருப்பதும்

ஒன்றே...


<> <> <> <> <> <> <> <> <> <> <> <> <> <>



'ம்'


பார்த்தேன் படித்தேன் செய்தேன்.

ருசித்தான் என் நண்பன்.

சமையல் கலை

புத்தகத்தைப் பார்த்து நான் செய்த

உப்புமாவுக்கு அவன் அடித்த கமெண்ட்

'ஒரே உப்பும்மா!'.


<> <> <> <> <> <> <> <> <> <> <> <> <> <> <>



மீட்சி

எல்லா சேனலுக்குள்ளும் போய் பார்த்தாயிற்று.

அதே மாவை

அரைத்து அரைத்து...ஒரே போர்!

தினசரி,வார,மாத

இதழ்களையும் புரட்டியாச்சு.

கொலை, கொள்ளை, மோசடி,

ஊழல், கற்பழிப்பு, அரசியல் தந்திரம்..

ஒரே எரிச்சல்!

அத்தனையும் கடாசிவிட்டு

படுக்கையில் விழுந்தேன்

ரேடியோவுடன்

இணைத்த ஹெட் போனை

காதில் மாட்டிக் கொண்டதும்

தேவாமிர்தமாக இசை

காதுக்குள் நுழைய

ஆஹா... இதுவல்லவோ சொர்க்கம்!

<> <> <> <> <> <> <> <> <> <> <> <> <>

Friday, January 22, 2010

செல்லமே!




கிணற்றடியில் துணிகளைத் துவைத்துக்கொண்டு இருந்தாள் திலகா, அந்த வீட்டுச் சின்ன மருமகள். பக்கத்தில், தேய்க்க வேண்டிய பாத்திரங்கள் நிறைய!

கைக்கெட்டுகிற தூரத்தில் வாஷிங் மிஷின்! அது மட்டுமா? ஃபிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர், கலர் டி.வி-னு எல்லாம்தான் இருக்கு. ஆனால் எல்லாம் பணக்காரப் பெரிய மருமகள் பானு கொண்டு வந்ததாச்சே! எப்படி உரிமையோடு எடுத்து உபயோகிக்கமுடியும்?

அதுதான், இந்த ஒண்ணரை வருஷமாகத் துணி துவைக்கற கல்லோடும் அம்மிக்கல்லோடும் அல்லாடிக்கொண்டிருக்கிறாள் திலகா.

மறுநாள் காலை... விடாமல் தன் குழந்தையின் அழுகுரல் கேட்கவே, குளித்துக் கொண்டிருந்த திலகா அவசர அவசரமாகத் துணிகளைச் சுற்றிக்கொண்டு ஓடிவந்தாள்.

குழந்தை அலறிக்கொண்டிருக்க, பக்கத்தில் சாவகாசமாக அமர்ந்து டி.வி. பார்த்துக்கொண்டிருந்தாள் பானு.

"இப்படிப் பச்சைக் குழந்தையை யாராவது அலற விடுவாங்களா? கொஞ்சம் குழந்தையைத் தூக்கிச் சமாதானப்படுத்தக்கூடாதா?" ..பொருமலுடன் கேட்டாள் திலகா.

"எடுத்துக் கொஞ்சி, சமாதானப்படுத்தி இருப்பேன் திலகா. ஆனா, குழந்தை இல்லாத நான், உன் குழந்தையைத் தொட்டுத் தூக்கினா உனக்குப் பிடிக்குமோ, பிடிக்காதோ! நீதான், நான் கொண்டு வந்த எதையுமே தொடுறது இல்லையே!, சரி, இப்ப நீயே சொல்லிட்ட இல்ல... இனிமே எனக்கென்ன தயக்கம்!" என்ற பானு, "என் செல்லமே! அழாதடி! பெரியம்மா இருக்கேன்டி உனக்கு!" என்றபடி குழந்தையை வாரியணைத்து முத்த மழையால் குளிப்பாட்டினாள்.

(5.9.04 "ஆனந்த விகடன்" இதழில் 14 சிறுகதைகளின் தலைப்பை அப்போது வெளியான படங்களின் பெயர்களில் வெளியிட்டு அசத்தியதில் பிரசுரமான என் ஒரு பக்கக் கதை)


பெருமையோடு இல்லாமல் பொறுமையோடு இருப்பவளே பெண்

Thursday, January 14, 2010

குருதட்சணை

கொலுப் படிகளில் ரங்கநாதர், ராமன்,லக்ஷ்மணன், சீதை,முருகன்,காந்தி,நேரு என ஏகப்பட்ட பேர் குழுமியிருந்தார்கள். எதிரே, தரையில் அமர்ந்து 'குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா...' என்ற ராகமாலிகை பாடலில், ஒவ்வொரு ராகத்தையும் சந்தியா வயலினில் கையாண்ட விதத்தில் மயங்கி, 'அடடா! இவங்களுக்குத்தான் எப்பேர்ப்பட்ட சங்கீத ஞானம்? முகத்தில் எத்தனை களை? ' என்று வியந்து அமர்ந்திருந்த கோபாலுக்கு, ஆறு மாதங்களுக்கு முன் இதே இடத்தில் அவளுடன் பேசினவைகள் ஞாபகத்துக்கு வந்தன.

" வயலின் கத்துக்கறதை விட்டுடலாம்னு இருக்கேன் மேடம்!"

"என்ன இது திடீர்னு... என்ன ஆச்சு உங்களுக்கு?"

"இதுக்கு மேலேயும் உங்ககிட்டே தொடர்ந்து வயலின் கத்துக்கிட்டா, அது ரெண்டு பேருக்குமே நல்லாயிருக்காதுன்னு நினைக்கிறேன்."

"நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை. எதுவாக இருந்தாலும், என்னிடம் தயங்காம சொல்லலாம்."

"ஊர்ல நம்ம ரெண்டு பேரையும் இணைச்சுக் கன்னாபின்னான்னு பேசறாங்க!"

"வேலை வெட்டி இல்லாதவங்க எது வேணா பேசிட்டுப் போகட்டும். அதுக்காக நீங்க வயலின் கத்துக்கறதைப் பாதியிலேயே நிறுத்திடறேன்னு சொல்றது எந்த விதத்தில் சரின்னு நினைக்கறீங்க?"

"அது...வந்து..."

"இதோ பாருங்க, கோபால்! நான் பூவும் போட்டும் வச்சு அலங்காரம் பண்ணிக்கிட்டாத்தான் என் கணவருக்குப் பிடிக்கும். இளம் வயசிலேயே நான் விதவை ஆகிட்டாலும், அவரோட நினைவுகளோடையே வாழ்ந்துகிட்டிருக்கறதாலதான், அவர் விருப்பப்படியே இன்னும் அலங்கார பூஷணியா வலம் வந்துகிட்டிருக்கேன். அதே போல இனி நான் யாரையும் மறுமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்பதிலும் உறுதியா இருக்கேன். அவர் இல்லாத வெற்றிடத்தை இசை ஓரளவு நிரப்பும்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. எனக்குத் தெரிந்த வித்தையை உங்களுக்குச் சொல்லிக் கொடுத்துக்கிட்டிருக்கேன். அதை பாதியில் நிறுத்தறது, கருவிலேயே குழந்தையைக் கொல்றதுக்குச் சமம். அந்தப் பாவத்தைச் செய்தவளா நான் ஆகணும்னு நினைச்சா, தாராளமா நின்னுக்குங்க!".

சொல்லிவிட்டு விறுவிறுவென்று மாடிப்படி ஏறிச் சென்ற சந்தியாவை மறுநாள் கோபால் சந்தித்து மன்னிப்புக் கேட்டு, தொடர்ந்து வயலின் கற்று அரங்கேற்றம் செய்தததில் சந்தோஷமானாள்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்திருக்கிறான்.

'குறையொன்றுமில்லை' பாட்டை வயலினில் சந்தியா வாசித்து முடிக்கவும் வராந்தாவிலிருந்து கை தட்டிப் பாராட்டியவாறே வந்து அமர்ந்த பெண்ணை அறிமுகம் செய்தான் கோபால்.

"இவள் கஸ்தூரி. கல்யாணமாகி மூன்றே மாதத்தில், பைக் ஆக்ஸிடென்ட்டில் கணவனைப் பறிகொடுத்தவள். நான் அரங்கேற்றம் முடிச்சு ஊருக்குப் போன இடத்தில் இவளைப் பற்றிக் கேள்விப்பட்டேன். உடனே பார்த்துப் பேசி, பெரியவங்க சம்மதத்தோட தாலி கட்டி, என் மனைவியா உங்களிடம் அறிமுகப்படுத்த அழைச்சுகிட்டு வந்திருக்கேன். நல்ல உறவுகளை கொச்சைப்படுத்தினவங்களுக்கு இதுதான் பதிலாக இருக்கும்னு தோணிச்சு, கூடவே, குருதட்சணையாகவும் அமையும்னு நினைக்கிறேன். எங்களை ஆசிர்வதியுங்கள் மேடம்!" என்றான் கோபால்.

இருவரையும் ஆசிர்வதித்த சந்தியா வாசல் வரை வந்து தயாராக இருந்த ஆட்டோவில் அவர்கள் இருவரும் ஏறி அமர்ந்து, அக்கம்பக்கத்தார்கள் பார்த்துக்கொண்டிருக்க கையசைத்து அவர்களை வழியனுப்பிவிட்டு வீட்டினுள் சென்றாள்.

அவளின் மனசு இப்போது நிறைந்திருந்தது.

( 2006 "ஆனந்த விகடன் " தீபாவளி மலரில் வெளியான என் சிறுகதை )

எந்த வீட்டில் பெண்கள் அவமதிக்கப்படுகிறார்களோ அந்த வீட்டில் எல்லாக் காரியங்களும் அவலமாகும்

Wednesday, January 13, 2010

ஒரு பக்கக் கதைகள் எழுதுவது எப்படி?


என்னுடைய ஒரு பக்கக் கதைகளை படித்துவிட்டு பதிவர்கள் சிலர் இந்த ஒரு பக்கக் கதைகளை நீங்க எப்படி சார் எழுதறீங்க? நான் எப்படி எழுதினாலும் மூணு நாலு பக்கக்களுக்கு குறையாம வருதே! அந்த வித்தையை கத்துக் கொடுத்தீங்கன்னா நாங்களும் எழுதுவோம்ல என்று மெயில் மூலமாகவும் சாட் பண்ணும்போதும் என்னிடம் கேட்கிறாங்க. என்னுடைய முதல் ஒரு பக்கக் கதை "இதயம் பேசுகிறது" இதழில் வெளியானது. அதன் பின்னர் பல ஒரு பக்கக் கதைகள் எழுதி வெளியானாலும் எனக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. அப்போதெல்லாம் புதுவை சந்திரஹரி, கே.பி.ஜனார்த்தனன், சுகந்தி, பாமா கோபாலன், வேதா கோபாலன், அமுதகுமார் மற்றும் மறைந்த எழுத்தாளர் நிவேதா ஆகியோரின் ஒரு பக்கக் கதைகள் வார இதழ்களில் அடிக்கடி பிரசுரமாகும். அவைகளைப் படிக்கும் போதெல்லாம் நாமும் இவர்களைப் போல ஒரு பக்கக் கதைகளை எழுதி பெயர் வாங்கணும் என்று நினைப்பேன். அதற்காக அவர்களுடன் நேரிலும் தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு அவர்களிடம் எப்படி ஒரு பக்கக் கதைகளை எழுதுவது என்று கேட்பேன். அவர்களும் அன்புடன் சொல்லித் தருவார்கள். அப்படி அவர்கள் சொன்னதை உள்வாங்கி என்னுடைய கதை எழுதும் திறமையை மேம்படுத்திக் கொண்டு நிறைய ஒரு பக்கக் கதைகளையும் சற்றே பெரிய கதைகளையும் எழுதி வார இதழ்களில் பிரசுரம் கண்டிருக்கிறேன். மேலும் என்னுடைய எழுத்தை மேம்படுத்தியதில் புதுவை சந்திரஹரி, சத்யராஜ்குமார்,அமுதகுமார், கே.பி.ஜனார்த்தனன், ரிஷபன், ஆகியோரின் பங்கு மகத்தானது. அவர்களுக்கெல்லாம் இந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய நன்றியை காணிக்கையாக்குகிறேன். மேலும் கதைகள் எழுதுவதற்காக இவர்கள் எனக்கு சொல்லித்தந்தவைகளை தொகுத்து கீழே கொடுத்துள்ளேன்.
( 1 ) பெரிய தீம்களை எடுத்துக்கொள்ளக்கூடாது.
( 2) நடை மிக மிக எளிமையாக ஓட வேண்டும் .
( 3 ) தேவையில்லாத வர்ணனைகள் கூடாது.
( 4 ) பட் பட்என்று சுருக்கமாக சொல்லிக்கொண்டே போக வேண்டும். அது போகப் போக கை வரும்.
( 5 ) எடுத்துக்கொண்ட பிரச்னையை முதல் ஐந்து வரிகளுக்குள் சொல்லிவிட வேண்டும்.
( 6 ) பிரச்சினையினால் ஏற்ப்பட்ட/தீர்க்க முயல்கிற நாயகன்/நாயகியின் நடவடிக்கைகளை கூறிக்கொண்டே போகவேண்டும்.
( 7 ) முடிவு நாயகன்/நாயகியே எதிர்பாராததாக அமைக்க வேண்டும். அதாவது அதிசயமான ஒரு முடிவு சொல்லிவிடவேண்டும் என்கிற ஆர்வம் கூடாது. (நிறைய பேர் செய்கிற தவறு இது). புன் சிரிப்பை ஏற்படுத்துகிற முடிவு ஒன்று இருந்தாலே போதும்.
( 8 ) வள வள என்று எழுதக்கூடாது.
( 9 ) எழுதிய பின் தேவையில்லாத வரிகளை துணிந்து அடித்துவிட வேண்டும்.
(10 ) பல வார்த்தைகளில் சொன்னதை ஒரு சில வார்த்தைகளில் சொல்ல முயன்று மாற்ற வேண்டும்.
(11 ) ஒரு கதைக்கு தோன்றுகிற பல முடிவுகளை எழுதுங்கள்.
(12 ) அவை அனைத்தையும் விட்டுவிட்டு புதிய ஒரு முடிவை (சில நாட்கள் ஆனாலும் பரவாயில்லை) துணிந்து எழுதுங்கள்.
ரடானின் கிரியேட்டிவ் கார்னரில்
இன்றைய டாப் டென் பிளாக்ஸில்
இந்த பதிவு
சக எழுத்தாள நண்பர்கள், பதிவர்கள் மற்றும் வாசகர்களுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துகள்



.

Monday, January 11, 2010

இது, அது, எது?

தமிழ்ப் பேராசிரியை புனிதாவிடம் பத்திரிகையை நீட்டி, "மேடம் நீங்க அவசியம் வரணும்" என்றேன்.

"லவ் மேரேஜா?அரேன்ஜ்டா?" என்று கேட்டவாறே வாங்கிக்கொண்டார்.

பல்வேறு துறை பேராசிரியைகள் சுற்றி உட்கார்ந்திருக்க அவர் 'சடார்' என்று அப்படிக் கேட்கவும் எனக்கு தர்மசங்கடமாகிவிட்டது.

"காலம் மாறிக்கிட்டே இருக்கு, இப்ப லவ்தானே பெஸ்ட் சாய்ஸ் ஆனந்தி?" கணிதப் பேராசிரியை கனகா சிரித்துக் கொண்டே கேட்டார்.

"இல்ல மேடம், 'பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணம்தான்' என்ற அணியில் நான் பேசுகிறேன்" என்றேன்.

"காதல் திருமணமா? பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணமா? எது உயர்ந்தது?" எங்கள் காலேஜ் ஆண்டு விழாவில் நடைபெறப் போகும் பட்டிமன்றத்துக்கு, மாணவியர் தலைவியான நான் பத்திரிகையை ஒவ்வொருவரிடமும் நேரில் கொடுத்து அழைத்துக்கொண்டிருந்தேன்.

" 9.1.05 "கல்கி" இதழில் வெளியான என் போஸ்ட் கார்டு கதை "

இனிய பொங்கல் வாழ்த்துகள்