என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, October 30, 2009

இண்டர்வியூ!


ராஜ் அண்ட் கோ கம்பெனியில் காலியாக இருந்த ஒரு டைப்பிஸ்ட் பதவிக்கு பத்து பேர் இண்டர்வியூவுக்காக அழைக்கப்பட்டிருந்தனர். அதில் பிளஸ் 2 முடித்ததும் மேலே படிக்க வசதியில்லாததால் டைப்ரைட்டிங் படித்து பாஸ் செய்த கையோடு அப்ளிகேஷன் போட்டிருந்த ஹரியும் ஒருவன்.

எம்.டி. ரூமுக்கு வெளியே ஆறாவது ஆளாக உட்கார்ந்திருந்த ஹரி இன்டர்வியூ முடித்து வெளியே வருபவர்களைக் கூர்ந்து கவனித்து வந்தான். மூன்றாவதாக வந்தவன் "மூணு கேள்வி கேட்டார், பதில் சொன்னேன். பிறகு பேப்பரை கொடுத்து ஒரு லெட்டர் டைப் செய்து தரச் சொன்னார். டைப் அடிச்சா பேப்பரில் ஒண்ணுமே தெரியலை. அந்த நிமிஷம் பார்த்துட்டு அனுப்பிட்டார்" என்றான் அழாத குறையாக.

ஐந்தாவதாக வந்தவனும் அதையே சொல்லிட்டு "ரிப்பன் இல்லாத டைப்ரைட்டரில் எப்படி சார் டைப் அடிக்க முடியும்னு கேட்டேன், வெளியே போகலாம்னு கையால காண்பிச்சார், வந்துட்டேன் " என்று டைப்ரைட்டரில் ரிப்பன் இல்லாத புது தகவலைச் சொல்லிட்டுப் போனான்.

இதில் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தான் ஹரி.
அவனுடைய முறை வந்து உள்ளே அழைக்கப்பட்டான், அவனையும் ஒரு கடிதம் டைப் செய்து தரச் சொன்னார் எம்.டி.

ஹரி டைப் செய்து கொடுத்த கடிதத்தைப் பார்த்துவிட்டு, அவனுக்கு அப்பாயின்ட்மெண்ட் கொடுக்கச் சொன்ன எம்.டி.யை வியப்புடன் பார்த்தார் மேனேஜர்.

"இவன் மட்டும் எப்படி ரிப்பன் இல்லாத டைப்ரைட்டரில் கடிதத்தை டைப் செய்தான்னு தானே பார்க்கறீங்க? இவனுக்கும் எல்லோரையும் போலவே இரண்டு பேப்பர் மட்டுமே கொடுத்தேன். டைப்ரைட்டருக்குப் பக்கத்தில் வச்சிருந்த கார்பனை பேப்பர்களுக்கு நடுவில் வச்சு டைப் அடிச்சிருக்கான். மேலே இருக்கற பேப்பரில் ஒன்னும் தெரியாதுன்னாலும் கார்பனுக்கு கீழே இருந்த பேப்பரில் டைப் அழகா பதிஞ்சு கடிதத்தை ரெடி பண்ணிட்டான். இவனை மாதிரி சமயோசிதமா நடந்துக்கறவங்களால்தான் எந்த இடையூறுகளையும் சமாளிக்க முடியும்" என்றார் எம்.டி சிரித்துக்கொண்டே.
( குமுதம் 5.2.98 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)
உங்கள் கைகளுக்கு வேலை கொடுங்கள். நிச்சயம் வயிற்றுப் பசியை ஆற்றும்

Tuesday, October 27, 2009

மன ஓட்டம்

ந்த பஸ் ஸ்டாண்டின் நடைமேடை மேல்
உன்னையும் உன் ஆறு மாத குழந்தையையும்
பார்த்த மாத்திரத்தில் யாரிவள் என்று உன்னை
எடைமேடை மேல் நிற்கவைத்து பார்க்கத்
தோன்றியதேன் எனக்கு?

டுப்பில் இருந்த கைக்குழந்தையிடம்
எதையோ சொல்லி நீ விசும்புவதும்
அந்த பிஞ்சு தன் கையால் உன் நெஞ்சை தடவி
உன்னையே கலக்கத்துடன் பார்க்கக் கண்டு
என் மனது சுக்குநூறாகிப் போனதேன்?

ன்னையும் உன் கைக்குழந்தையையும்
தவிக்க விட்டு ஓடிப்போனானா உன் புருஷன்?
இல்லை, வேலைக்குப் போன அவன் நீண்ட
நேரமாகியும் வரவில்லையே என்று
குழந்தையிடம் சொல்லி அழுதாயோ?

டுத்த வேளை உனக்கு கொடுக்க வேண்டிய
பாலுக்கான காசுக்கு நான் எங்கே போவேன்?
பிச்சை கேட்டால் இச்சையை தீர்க்க வர்றியா என்று
அச்சுறுத்தும் காமாந்தகாரர்களை
எப்படி நான் எதிர்கொள்ளப் போகிறேன் என்ற
கேள்வியை அதனிடம் முன் வைத்து நீ அழுதாயோ?

வள் புருஷன் இறந்ததால் தனித்து விடப்பட்டவளோ?
இவளுக்கு அப்பா அம்மா இல்லையோ?
இல்லை, எதிர்த்து காதல் மணம் புரிந்ததினால்
அவர்களிடம் போக தன்மானம் தடுக்கிறதோ?

யிரம் கேள்விகள் மனசுக்குள் ஓட
அப்போதைக்கு பையில் இருந்த ஐம்பது ரூபாயை
இந்தாம்மா, எடுத்துக்கோ என்று ஜன்னல்வழி போட
பாய்ந்து அவள் பற்றிய காட்சி வறுமைக்கு ஒரு சாட்சி.

செல்வம் செழிப்பு வறுமை கேலி சண்டை சச்சரவு
காதல் மோதல் பிரிவு சேர்க்கை பிறப்பு இறப்பு என
தினம் தினம் எத்தனை எத்தனை காட்சிகள்?
அத்தனையும் பார்த்தபடி நான் இன்னமும்
ஓடிக்கொண்டிருக்கிறேன்
...சொல்லாமல் சொன்னது பஸ்.

---ரேகா ராகவன்---

மரணம்

ரு அந்தி வேளையில் நான் இந்த இடத்தை விட்டுப்
போய்விடுவேன்;
எங்கே போகிறேன் என்று எனக்குத் தெரியாது;
விதைப்புக்காலமா அறுவடை காலமா என்பதும் தெரியாது;
மண் போல் மௌனம் என்னை அழுத்தும்
அந்த அந்தி வேளையில் வழக்கம் போல் நீ வருவாய் என்று
எனக்குத் தெரியும்
அப்போது உனக்குப் புரியும்; நான் நகரமுடியாதபடி முடமாக
இல்லை;
முதல் மெழுகுவர்த்தி போல் ஏதோ ஒன்று அந்த இடத்தில் இருக்கும்
யாரையும் நீ எதுவும் கேட்க மாட்டாய்--
மௌனமாக நிற்பாய்; புதிய ஆகாய வெளிகளை அறிய
வார்த்தைகள் தேவை!
பழம் நினைவுகள் செவிடாகி உன்னிடம் கிடக்கின்றன. ஆனால்
அவை புயலுக்குச் சமம்;
யூதர்களின் தேவவசனம் பொறித்த எந்தக் கல்லையும் நான்
நேசிக்கிறேன்.
சேரி மயானத்தில்
இலையுதிர்காலம் சோகம் பரப்பி நிற்கிறது
ரணத்திலிருந்து தப்பி இனிமேலும் என்னால் மறைந்து
கொண்டிருக்கமுடியாது!

(1972--ம் வருட கண்ணதாசன் புத்தகத்தில் வெளியான கவிதை. ரசித்த கவிதை என்பதால் டயரியில் குறித்து வைத்தேன்-- ரசித்த கவிதை தொடரும்.)



உழைக்காமல் கிடைக்கும் பரிசு மரணம்

Sunday, October 25, 2009

செல் போன் நடிகர்கள்

விகடன் வாங்கப் போனவன் உடனே வீடு திரும்பியிருக்கக்கூடாதா? அடுத்திருந்த டீக்கடை பெஞ்ச்சின் மேலிருந்த அன்றைய பேப்பர் ' வா! வா! வந்து என்னை எடுத்துப்படி! ' என்று என்னை அழைக்கவே அங்கே சென்று பேப்பரை எடுத்து படிக்க உட்கார்ந்ததுதான் தாமதம், " நான் அவசரமா போய்க்கிட்டு இருக்கேன் உங்கிட்ட பேசிகிட்டிருக்க இப்போ எனக்கு நேரமில்லை, நீ சாயங்காலமா கூப்பிடு"--ன்னு செல்போனில் பேசிகிட்டே வந்த ஒருவர் என் பக்கத்தில் அமர்ந்ததோடில்லாமல் என்னமோ அவசரமா டெல்லிக்கு போகிறவரைப் போல நான் படித்துக்கொண்டிருந்த பேப்பரை பிடுங்கிக்கொண்டு டீக்கடைக்காரரிடம் ' யப்பா அவசரமா ஒரு டீ போடு! ' --ன்னு சொல்லிவிட்டு அது வந்ததும் சாவகாசமாக குடித்துக்கொண்டே பேப்பரை முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை படித்துக் கொண்டிருந்தார். பார்த்துக்கொண்டிருந்த எனக்குப் பொறுக்கவில்லை. பாதியில் நின்ற டீக்கடை பெஞ்சை முழுமையாக படித்துவிடுவோமே என்ற ஆவலில் அவரிடம் "ஏங்க என்னமோ அவசரமா போய்க்கிட்டிருக்கிறதா யாரிடமோ செல் போனில் சொல்லிக்கிட்டிருந்தீங்களே, போகலியா?" என்று கேட்க, " அத்த ஏன் சார் கேட்கறீங்க? ஒரு வாரத்தில் திருப்பிக் கொடுக்கிறேன்னு போன வருஷம் பிசாத்து காசு ஆயிரம் ரூபா ஒருத்தன்கிட்டே கைமாத்தா வாங்கிட்டேன். அந்த பன்னாடை பணத்தை கொடுன்னு இதுவரைக்கும் ஆயிரம் தடவையாவது போன் பண்ணியிருப்பான். நீங்களே சொல்லுங்க! கைல இருந்தா கொடுக்க மாட்டேனா? அவன் கிடக்கறான் விட்டுத் தள்ளுங்க, சார் யாருன்னு தெரிஞ்சிக்கலாமா? " என்று அவன் கேட்க, அவனிடமிருந்து அந்த பேப்பரை எப்படியாவது வாங்கிடணும்னு " ஒ! நானா? சி.பி.சி.ஐ.டி. தென் மாவட்டத்தில் சீட்டு பணத்தை சுருட்டிக்கிட்டு ஓடின ஒருத்தனை வலை வீசி தேடிக்கிட்டிருக்கோம்" என்று ஒரு பிட்டை போட அடுத்த வினாடி பேப்பரை என் கையில் பவ்யமாக வைத்து விட்டு ஆள் எஸ்கேப்.

ஒரு வாரத்தில் திருப்பிக் கொடுக்கிறேன்னு போன வருஷம் பிசாத்து காசு ஆயிரம் ரூபாய் வாங்கினானாம் , அதை திருப்பிக் கேட்டா கடன் கொடுத்தவனுக்கு பன்னாடை பட்டம் வேற. எப்படி இருக்குது பாருங்க நியாயம்?


காலம் கெட்டுக் கிடக்கு. நாமதான் உஷாரா இருக்கணும்னு யோசிச்சுக்கிட்டே வீட்டை நோக்கி நடையைப் போட்டால் எதிரே வந்த ஆசாமி "யோவ் சும்மா சும்மா எனக்குபோன் பண்ணி ரங்கனாதனா?"--ன்னு கேட்கிறியே, என்னை யாருன்னு நினைச்சே? நான் தட்னா நீ தாராந்து பூடுவே! ஒழுங்கு மரியாதையா இப்ப நீ போனை வைக்கலே எனக்கு தெரிஞ்ச டி.எஸ்.பி.கிட்ட சொல்லி உன்னை உள்ளே தள்றேனா இல்லையான்னு பார் " என்று காற்றில் கையைக் காலை ஆட்டி நடித்துக்கொண்டே சவால் விட்ட தயிர்வடை தேசிகனைவிட ஒல்லியாக இருந்த அவரைப் பார்த்ததும் எனக்கு சிரிப்புத்தான் வந்தது. இவர் தட்னா அவர் தாராந்து பூடுவாராம்.


காற்றில் கையைக் காலை ஆட்டி என்னமா நடிக்கிறாங்க இந்த செல் போன் நடிகர்கள்!


பேச்சாற்றலை விட செயலாற்றல் சிறந்தது

Tuesday, October 20, 2009

மறுபக்கம்

" இந்திரா நீ இன்னும் ரெடியாகலியா? நேரம் ஆயிட்டிருக்கு சீக்கிரம் கிளம்பு, கோயில்ல எல்லோரும் காத்துக்கிட்டிருக்காங்க. உன்னை அழைச்சுக்கிட்டுப் போகத்தான் வந்தேன்"... அவசரப்படுத்தினான் மகேஷ்.

கோயிலில் அலங்காரம் முடிந்து கல்யாணப் பெண்ணாக மாறியிருந்த இந்திரா சுவாமி சன்னதியின் எதிரே மணமகனுடன் நின்ற போது தரிசனத்துக்காக வந்திருந்த அனைவரின் கண்களும் இருவரையும் மொய்த்தன. இந்திராவுக்கு வியர்க்க ஆரம்பித்தது.

இருவரும் மாலை மாற்றிக்கொண்டு சுவாமி தரிசனம் செய்வதை 'மறுபக்கம்' சீரியலுக்காக பல கோணங்களில் பதிவு செய்தார் வீடியோ கேமராமேன். எல்லா ஷாட்டும் முடிந்து பேக்கப் சொன்னதும் இந்திராவை ஆட்டோவில் ஏற்றி ... அவள் கையில் பணத்தை திணித்தான் மகேஷ்.

"உன்னோட கவலை எனக்குப் புரியுது இந்திரா. நடிக்க நீ சான்ஸ் தேடி அலைஞ்சப்பல்லாம் விதவைப் பெண் வேஷம். போன மாசம் உன் கணவர் இறந்த நிலையில் சர்வ அலங்காரத்தோட இன்று மணப்பெண் வேஷம். இன்னிக்கு கிடைச்ச பணம் குழந்தைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டறதுக்கு சரியா இருக்கும். நாளைக்கு இதே சீனோட கன்டினியூட்டி இருக்கு, ஆட்டோ பிடிச்சு வந்துடு."

அவளின் அழுகைச் சத்தம் ஆட்டோ சத்தத்தில் கரைந்து போனது.

(27.7.05 இதழ் குமுதத்தில் வெளியான என் ஒரு பக்கக் கதை)
எளிமையாக இருப்பதுதான் உண்மையாக வாழக் கற்றுக் கொடுக்கும்

Saturday, October 17, 2009

மீனுக்கும் கற்பு உண்டு


" ரவணன் சார்... லைப்ரரி புக் கொண்டுவந்திருக்கேன்!" . எதிரே அழகுச் சிலையாக ரமா. காலேஜில் படிக்கும் பக்கத்து வீட்டுப் பெண். சரவணனிடம் அவளுக்கு அப்படி என்னதான் ஈர்ப்போ...லைப்ரரி புத்தகம் வாங்கிப் போகிற, பாடப் புத்தகத்தில் சந்தேகம் கேட்கிற சாக்கில் அடிக்கடி வீட்டுக்கு வந்து ஒட்டிப் பழகுகிறாள்.

ஆருயிர் மனைவி சித்ரா இறந்து ஒரு வருஷம் ஆகப் போகிறது. இதுவரை அவன் மனதில் எந்தவித சஞ்சலமும் வந்ததில்லை.ஆனால் சமீப காலமாக அவனுக்குள்ளும் சில மாற்றங்கள். அவனும் அதை உணராமல் இல்லை.

ன்று காலை... பாடத்தில் சந்தேகம் கேட்டு வந்த ரமா, கிளம்பிச் செல்கிற வேளையில் தயங்கி நின்றாள். "சார்...என் வாழ்க்கையை உங்களோடு இணைச்சுக்க விரும்பறேன். உங்களுக்குச் சம்மதமா?" என்று கேட்டவள், "அவசரமில்லை நல்லா யோசிச்சு...நாளைக்குச் சொன்னால் போதும், சார்!" என்று கிளம்பிப் போய் விட்டாள்.

அன்றைய தினம் முழுக்க, ஆபீஸ் வேலையில் சரவணனால் கவனம் செலுத்த முடியவில்லை. சின்ன கணக்குகூடத் தப்பாக வந்தது. சித்ரா இருந்த இடத்தில் இன்னொருத்தியா என்று யோசனையாக இருந்தது.

சாயந்திரம் டூ வீலரில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது டயர் பஞ்சராகிவிட்டது. போன் செய்து மெக்கானிக்கை வரச் சொல்லிவிட்டு காத்திருந்தவனின் கண்களில் அந்த வண்ண மீன் விற்பனை நிலையம் பட்டது. உள்ளே நுழைந்து மீன்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் சரவணன். கோல்டு, ஏஞ்சல், ப்ளாக் மோலீஸ் எனவிதவிதமான மீன்கள் கண்ணாடித்தொட்டிகளில் நீந்திக் கொண்டு இருக்க, ஒரு மீன் மட்டும் எதனுடனும் சேராமல் தனியாக இருந்தது.

"அதுவா...அது ஆஸ்கர் மீன் சார்! அதன் ஜோடி ஆறு மாசத்துக்கு முந்தி செத்துப் போச்சு. இந்த வகை மீன் மட்டும் ஆண் இறந்து போனா பெண்ணும், பெண் இறந்து போனா ஆணும் வேறு எதோடும் சேராம, கடைசி வரைக்கும் தனியாகவே வாழ்ந்து செத்துப் போயிடும். மத்த பெண் மீன் இதோடு உரசுற மாதிரி வந்தாலும் இது ஒதுங்கிப் போயிடும். அவ்வளவு கற்புள்ள மீன் சார் இது!" என்றார் கடைக்காரர்.

அவனுக்குத் தெளிவு பிறந்த மாதிரி இருந்தது.

வீடு திரும்பியதும், ரமாவைக் கூப்பிட்டனுப்பினான் சரவணன். அவளிடம் அந்த ஆஸ்கர் மீன் பற்றிச் சொல்லி, "வாழ்க்கைத் துணை என்பது அந்த மீனுக்கே இவ்வளவு அழுத்தமான விஷயமாக இருக்கும்போது, ஆறறிவுள்ள நமக்கு மட்டும் அதுசாதாரண விஷயமா படலாமா? ஒருவனுக்கு ஒருத்தி என்கிற பண்பாட்டை மீறாம இருக்கறதுதான் மனித இனத்துக்கு அழகுன்னு நான் நினைக்கிறேன்" என்றான்.

"உங்க கண்ணியமும் பண்பாடும் உங்க மேலுள்ள என் மரியாதையை அதிகப்படுத்துது, சார்! ஆனா, நீங்க சொன்னதில் ஒரு சின்ன திருத்தம் . ஒருவனுக்கு ஒருத்தி என்பது வாழும்போது கடைப்பிடிக்க வேண்டிய அவசியமானதொரு கலாசாரம் தான். மத்தபடி தம்பதியில் ஒருவரது மறைவுக்குப் பின் அடுத்தவர் இன்னொரு திருமணம் பண்ணிக்கறது எந்தவிதத்திலும் மறைந்தவருக்குச் செய்யற துரோகமா நான் நினைக்கலை. மீனுக்குக் குடும்பம், குழந்தைகள் கிடையாது. ஆனா, மனைவி என்கிற ஒரு துணை உங்க வாழ்க்கைக்கும், தாய் என்கிற அரவணைப்பு உங்க மகள் சரண்யாவுக்கும் ரொம்ப முக்கியம் இல்லையா? எங்கோ விதிவிலக்கா இருக்கிறதை உதாரணமா எடுத்துக்காம, நம்ம அளவில் யோசிச்சு எடுக்கிற முடிவே சரியா இருக்கும்னு நான் நினைக்கிறேன், அதனால...'

" சரி உன் இஷ்டப்படியே ஆகட்டும்" என்றான் சரவணன். முன்பைவிட இப்போது இன்னும் தெளிவாகி இருந்தான்.


(31.1.07 இதழ் ஆனந்த விகடனில் வெளியான என் சிறுகதை)


வாழ்க வளமுடன்

Wednesday, October 14, 2009

மனிதன்


ரசித்த கவிதை-- 3

எவ்வளவு முயன்றும் என்னுருவை என்னால் மாற்றிக்கொள்ள
முடியவில்லை;
என் வாயும், கண்ணும்,மூக்கும், அப்படியேதான்
இருக்கின்றன.
இந்த உடலைத் தாங்கிக்கொண்டுதான் இரவும் பகலும்
அலைகிறேன்
சுவர்களில் என் நிழல் நகரும்போது பலரின் கண்கள்
புண்படுத்தப்படுகின்றன;
நான் யாருக்குச் சொந்தமானவன்?
என் தகப்பனும் பாட்டனும் என்னை நிராகரித்துவிட்டார்கள்
எந்த ஜீவராசியும் என்னைத் தங்கள் இனம் என்று
அங்கீகரிக்க இசையவில்லை; ஆனால்....
என்னை நானே துன்புறுத்திக் கதறும் போது மட்டும்,
காலம் என்னில் அழிக்க முடியாத தழும்பை விட்டுச்
செல்லும்போது மட்டும்;
அவர்கள் சொல்லுகிறார்கள்;
பரவாயில்லை, நன்றாய் இருக்கிறது
நான் சொல்லிக் கொள்கிறேன் நானும் மனிதனே!

"மனிதன் உலகத்தோடு தனக்குள்ள உறவை உணராவிட்டால் அவன் வாழும் இடம் சிறைக்கூடமாகும்."

(1972--ம் வருடம் வாங்கிய கண்ணதாசன் புத்தகத்தில் வெளியான கவிதை.
ரசித்த கவிதை என்பதால் டயரியில் குறித்து வைத்தேன்-- ரசித்த கவிதை தொடரும்.)





பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுவது எப்படி?


செய்ய வேண்டியவை:

1) பட்டாசுகளை முடிந்தவரை உங்கள் கைகளுக்கு அருகில் இல்லாமல் தூரமாக வைத்து வெடிக்கவும்.
2) பட்டாசுகளை வெடிக்கும்போது பருத்தி (காட்டன்) துணிகளை மட்டுமே அணிந்திருக்கவேண்டும்.
3) பட்டாசு கொளுத்தும்போது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் அருகிலேயே வைத்துக்கொள்ளவும்.
4) பட்டாசுகளை திறந்த வெளியில் வெடிக்கவும்.
5) பட்டாசுகளை ஒவ்வொன்றாக வெடிக்கவும்.
6) வெடித்த பட்டாசுகளை ஒழுங்கான முறையில் அப்புறப்படுத்தவும்.
7) பட்டாசுகளை தனி அறையில் வைக்கவும்.

8) ராக்கெட் பட்டாசுகளை நேரான நிலையில் நிறுத்தி கொளுத்தவும் .

செய்யக்கூடாதவை :
1) பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் காயங்களுக்கு சாயங்களையோ மையையோ தடவக்கூடாது.
2) பட்டாசுகளை கொளுத்தும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணிய வேண்டாம்.
3) வெடிக்காத பட்டாசுகளை கைகளில் எடுக்காதீர்கள்'
4) அறைக்குள் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.
5) பட்டாசுகளை வெடிக்கும் போது மற்ற பட்டாசுகளை அருகில் வைக்கக்கூடாது.
6) பட்டாசுகளை டப்பாவிற்குள் வைத்து வெடிக்க வேண்டாம்.

முதலுதவி:

1) பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட காயங்களை பச்சை தண்ணீரில் நனைக்கவும்.
2) பிறகு சுத்தமான துணியால் காயத்தை மூடியபடி அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும்.
3) காயங்களில் துணி ஒட்டியிருந்தால் அதனை எடுக்க முயற்ச்சிக்காதீர்.
4) ஆராய்ச்சிகளின்படி தீக்காயங்களுக்கு சிறந்த முதலுதவி காயங்களை தண்ணீரில் துடைப்பது.

நன்றி: Dept. of Plastic Surgery, Govt. Stanley Hospital, Chennai-600001--வெளியிட்ட துண்டு பிரசுரம்.


Tuesday, October 13, 2009

இருதயம்

ரசித்த கவிதை-2

இருதயம்


எனக்குத் தெரியும்---
இருதயமே
நீ மிகவும் களைத்துப் போய்விட்டாய்
வாழ்க்கை மிகவும் கடினமாகி வருகிறது
ஒவ்வொன்றும் காலதாமதமாகித் தெரிகிறது
அறுபது ஆண்டுகளாய் நீ துடித்துக்
கொண்டிருக்கிறாய்.
நான் வாழ்கிறவரை
நீ மேலும் மேலும் துடிக்கத்தான் வேண்டும்
நாமிருவரும் ஒரே விதியைப் பகிர்ந்து கொள்ள
கட்டளையிடப்பட்டிருக்கிறோம்
நீ ஓய்வு பெறுவதற்கு உரிமை இருக்கிறது
ஜீரணிக்க முடியாத கனவுகளிலும், காதலிலும்
நீ பல வருஷங்கள் கஷ்டப்பட்டுவிட்டாய்
கடந்த காலத்தின் கவலைகளை மறந்துவிடு!
மேலும் மேலும் துடித்துக்கொண்டிரு!
நான் சொல்வதற்கும், பாடுவதற்கும் இன்னும்
நிறைய இரு...க்...கி...ன்...ற.........ன.

The way is not in the sky. The way is in the heart.


(இது நான் 1972--ம் வருடம்
வாங்கிய கண்ணதாசன் புத்தகத்தில் வெளியான கவிதை.
ரசித்த கவிதை என்பதால் டயரியில் குறித்து வைத்தேன். யார்
எழுதியது என்பதை குறித்து வைக்கவில்லை
-- ரசித்த கவிதை தொடரும்.)

Monday, October 12, 2009

யதார்த்தம் (கவிதை)

ரசித்த கவிதை-- 1

யதார்த்தம்

நெருப்பாய்த் தகித்த வெயிலிலும்
உடலை நடுங்க வைத்த கடு மழையினிலும்
உழன்ற போதவனுக்குக் குடை தராத உறவு
அவன் பிணத்திற்குக் குடை பிடித்துச் செல்கிறது
வாழ்ந்தபோது கிழிந்த கந்தலை உடுத்தியிருந்த அவன்
இறந்த பின்பு புது வேட்டி போர்த்தி ஊர்வலம்
போகின்றான்;
இருக்கும்போது கிடைக்காதவை
இறந்தபின்புதான் கிடைக்கும் எனில்
ஒ நிஜங்களே! நீங்கள் விரைவில் நிழலாகிவிடுங்கள்!

(இது நான் 1972--ம் வருடம் தணிக்கைக் குழுவில் பணியாற்றியபோது
வாங்கிய தினமணி கதிர் புத்தகத்தில் வெளியான கவிதை.
ரசித்த கவிதை என்பதால் டயரியில் குறித்து வைத்தேன். யார்
எழுதியது என்பதை குறித்து வைக்கவில்லை
-- ரசித்த கவிதை தொடரும்.)

Friday, October 9, 2009

சாம்பார் பொடி செய்வது எப்படி?

முன்பு ரசப்பொடி செய்வது பற்றிய பதிவில் அதை யாரிடமிருந்து கேட்டறிந்து போட்டேனோ அவரே சாம்பார் பொடி செய்வது எப்படி என்றும் சொன்னார். அப்போதே போட்டிருந்தால் பதிவு மிகவும் நீளமாக இருக்குமே என்று ரசப் பொடி எப்படி செய்வது என்று மட்டும் பதிவிட்டிருந்தேன். இப்போ சாம்பார் பொடி எப்படி தயாரிப்பது என்று அறிந்து கொள்வோமா?


சாம்பார் பொடி:

தேவையான பொருள்கள் :

துவரம் பருப்பு : 1/2 கிலோ

கடலைபருப்பு : 1/2 கிலோ

பெருங்காயம் : 50 கிராம்

மிளகாய் வத்தல் : 250 கிராம்

தனியா : 3/4 கிலோ

வெந்தயம் : 25 கிராம்

செய்முறை:


வாணலியை அடுப்பில் வைத்து முதலில் வெந்தயத்தை போட்டு பொன் நிறமாக வறுக்க வேண்டும். பிறகு கடலைப்பருப்பை அதில் போட்டு பொன் நிறமாக வருகிறவரை வறுக்க வேண்டும். தொடர்ந்து துவரம் பருப்பு , மிளகாய் , தனியா போட்டு வறுக்கவும் (இந்த வரிசையை மாற்றக்கூடாது ).


ஒரு 50 கிராம் கெட்டி பெருங்காயத்தை கொஞ்சம் எண்ணையில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


இப்படி பொரித்து எடுத்த பெருங்காயத்தை வாணலியில் இருக்கிற வறுத்த அயிட்டங்களோடு சேர்த்து ஒரு புரட்டு புரட்டிவிட்டு இறக்கி விடுங்கள்.


இந்த கலவையை மிக்ஸ்சியில் ரவை பதத்துக்கு அரைத்துக்கொள்ளுங்கள். இந்த பொடியை சாம்பார் வைக்கும் போது போட்டு செய்து பாருங்கள். கம கமன்னு மணக்கற சாம்பாரை இன்னும் ஒரு கரண்டி ஊற்றிக்கொள்ள தோணும்.

EVERY DAY IS A GIFT THATS WHY THEY CALL IT THE PRESENT

Tuesday, October 6, 2009

வராத கண்ணீர் வந்தபோது...

அது 1982-ம் வருடம் அக்டோபர் மாதத்தின் கடைசி நாள்.அப்போதெல்லாம் இப்போ மாதிரி வீட்டுக்கு வீடு டெலிபோன் வசதி இருக்காது. ஒரு தெருவில் ஒன்று அல்லது இருவர் வீட்டில் இருந்தால் ஆச்சர்யம். குழந்தை பிறந்ததை, உறவினர் இறந்ததை தெரிவிக்க இருந்த ஒரே சாதனம் தந்தி தான் .

அன்று இரவு மணி பதினொன்றரை ." சார் தந்தி" என்ற குரல் கேட்டு பதறியடித்து எழுந்தேன். "அப்பா இறந்து விட்டார். உடனே புறப்படவும் " என்ற தந்தி வாசகத்தை படித்துவிட்டு அப்படியே இடிந்து போய் உட்கார்ந்தேன். நான் இருப்பது சென்னை அம்பத்தூரில். அப்பா இறந்தது விழுப்புரத்தில். இப்போ மாதிரி இரவு பேருந்தெல்லாம் அப்போ கிடையாது. கொட்ட கொட்ட முழித்திருந்து அதிகாலை நாலு மணிக்கு வரும் ட்ரைன் பிடித்து சென்ட்ரல் போய் அங்கிருந்து தாம்பரம். ஒரு லாரி டிரைவரிடம் தந்தியை காண்பித்து ஏறி உட்கார்ந்து விழுப்புரம் போய் சேர்ந்த போது மணி ஒன்பதை தொட்டுவிட்டிருந்தது.

இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடெல்லாம் நடந்து கொண்டிருந்தது. கூடத்தில் கிடத்தப்பட்டிருந்த அப்பாவின் சடலத்தின் பக்கம் போய் உட்கார்ந்து அவரின் தலையை வருடிக்கொடுத்து சிறிது நேரம் அவரையே உற்று பார்த்துக்கொண்டிருந்துவிட்டு நிமிர்ந்தபோது எல்லோர் கண்களும் என்னையே உற்று நோக்குவதை கண்டேன். என் கண்களிலிருந்து ஒரு பொட்டு கண்ணீர் கூட வராதது அவர்களுக்கெல்லாம் ஆச்சரியமான ஆச்சரியம். "ஏண்டா அப்பா செத்ததுக்கு உனக்கு அழுகையே வரலயாடா?" என்று ஒரு உறவினர் வாயைத் திறந்து கேட்டே விட்டார். "வரல்லியே மாமா நான் என்ன பண்றது?" என்று அவரிடமே கேட்டேன். ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டார் அவர் . அதன் பின்பும் ஏனோ தெரியவில்லை மயானம் செல்லும் வழி நெடுகிலும் எனக்கு சுத்தமாக அழுகையே வரவில்லை. இத்தனைக்கும் என் அப்பாவுக்கு என் மேல் தனி பாசம் இருந்தது. " இப்படி அப்பாவியாக இருக்கிறாரே!" என்று நானும் அவர் மேல் கூடுதல் பாசத்தோடிருந்தேன்.
சடங்குகள் முடிந்ததும் வெட்டியான் "இன்னும் யாராவது பார்க்கணுமா? முகத்தை மூடப்போறேன் என்று கூறவும் தூரத்தே "அண்ணா!" என்று கத்திக்கொண்டே வெளியூரிலிருந்து  என் அத்தையும் இன்னொரு உறவினரும்அப்போதுதான் வரவும் சரியாக இருந்தது.

அதன் பின்பு நடந்ததுதான் கிளைமாக்ஸ்.

என் அத்தை பார்ப்பதற்கு அச்சு அசல் என் அப்பாவைப் போலவே இருப்பார். அவர் ஓடி வருவதைப்பார்த்ததும் எனக்கு என் அப்பாவே வருகிற மாதிரி தோன்றியதோ என்னமோ, உடனே " டேய் ஏண்டா எங்கப்பாவை எரிக்கறீங்க?" என்று ஆவேசமாகக் கேட்டுக்கொண்டே சிதையை கலைக்க முற்பட்டிருக்கிறேன். அதை பாய்ந்து தடுத்த உறவினர்கள் என்னை ஒரே அமுக்காக அமுக்கி பிடித்துக்கொள்ள என் பெரிய அண்ணன் சிதைக்கு தீ வைக்க அதை பார்த்து மயங்கி சரிந்திருக்கிறேன் நான். மயக்கம் தெளிந்த பின்னர் " நானா அப்படியெல்லாம் செய்தேன்?" என்று எனக்குள் ஒரு அதிர்ச்சி அலை .

" அதுதானே பார்த்தேன் என்னடா உங்கப்பா செத்ததுக்கு நீ துளி கூட அழலியேன்னு! அதையெல்லாம் தூக்கி அடிக்கற மாதிரி இப்படி பண்ணி எங்களையெல்லாம் பதற வச்சிட்டயே!" என்று என் உறவினர் ஒருவர் கேட்க எனக்கும் அப்போதுதான் விடை கிடைத்தது.

டெய்ல் பீஸ்: 10.10.1910-இல் என் அப்பா பிறந்தார். அவரது நினைவாக இப் பதிவு.
இந்த சம்பவத்தை நான் என் எழுத்தாள நண்பியிடம் விவரிக்கப் போக அவர் அதை ஒரு அழகிய சிறுகதையாக எழுதி அது பிரபல வாரப் பத்திரிகையில் பிரசுரமானது.
I HAD THE WHOLE WORLD IN MY HANDS BUT I GAVE IT AWAY


Friday, October 2, 2009

வடக்கு பக்கம் ஏன் தலை வச்சு படுக்கக்கூடாது ?

" இனிமே இந்த பக்கம் தலை வச்சு படுக்கக் கூடாது என்ன ? " என்று யாரையாவது பயமுறுத்துவதற்காக சொல்வதுண்டு.

" அது சரி, தூங்கும்போது ஏன் வடக்கே தலை வச்சு படுக்கக்கூடாதுன்னு சொல்லுறாங்க?" --ன்னு கேள்வி கேட்கிறவங்க மேலே படிங்க.

கிழக்குப் பக்கமாக தலை வைத்துப் படுப்பது உத்தமம். தெற்குப் பக்கமும் சிறந்தது. மேற்குத் திசை மத்திமமான பலனைத் தரும். வடக்குப் பக்கம் தலை வைத்து படுத்தால் கெடுதலான பலனையே விளைவிக்கும் என்று நூல்களில் போடப்பட்டுள்ளது.

எமதர்மன் வாழும் திசை தெற்கு. அந்த திசையில் கால் வைத்து படுத்தால் எமனை அவமதித்து அவன் கோபத்துக்கு இலக்காக வேண்டும் என்பதால்தான் இன்றைக்கும் நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் வடக்கே தலை வச்சு படுக்காதே என்று சொல்வதுண்டு. வடக்கே தலை வைத்து தெற்க்கே கால் நீட்டிப் படுத்தால் மரணம் ஏற்படக்கூடிய நிலை தோன்றும் என்பதுதான் அதன் உட்பொருள். எதையும் மறுத்தே பேசும் இக்காலத்தவர்களுக்கு இதற்கு விஞ்ஞான ரீதியாக ஆதாரம் இருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கும்.

பூமியின் வடக்கு திசையில் வடதுருவம் அமைந்துள்ளது. பூமியின் வட திசை எப்போதுமே காந்த சக்தியின் ஈர்ப்புச் சக்தி கொண்டதாக உள்ளது. வடக்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் வடதுருவத்து காந்த சக்தியின் ஈர்ப்பு சிரசின் மூலமாக உடலைத் தாக்கத் தொடங்கும். இந்த காந்த சக்தியின் ஆற்றல் உடலின் முக்கிய உள்ளுறுப்புக்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இதனால் முக்கியமாக இதயம் மற்றும் சுவாசப் பகுதிகள் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. தொடர்ந்து பல காலம் வடக்கு திசையில் தலை வைத்து படுத்தோம் என்றால் நமது உடலின் பிராண சக்தி பாதிக்கப்பட்டு நாளடைவில் ஆபத்தான நிலையை நமது உடல் அடைந்துவிடும் என்பதே விஞ்ஞானம் நமக்கு கூறும் உண்மை.

அட! இதனால்தான் நமது பெரிசுகள் வடக்கு திசையில் தலை வைத்து தெற்கு திசையில் காலை நீட்டி படுக்காதீங்கன்னு சொன்னாங்களா?"--ன்னு கேட்கத்தோணுதா?"

நல்லது. இப்போ அவர்கள் வாழ்ந்த திசையை நோக்கி ஒரு பெரிய கும்பிடு போட உங்களுக்கு தோன்றி இருக்குமே?