என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, September 30, 2009

உபதேசம் (சிறுகதை)

மனைவியிடம் கோபமாய் மறுத்தார் வாத்தியார் வேதாசலம்.


"வாஷிங்மெஷினா? திடீர்னு பத்தாயிரத்துக்கு எங்கே போறது? உன் புருஷன் ஒண்ணும் கை நிறைய சம்பளம் வாங்கற கவர்ன்மெண்ட் ஸ்கூல் வாத்தியார் இல்லை. அதெல்லாம் இப்ப வாங்க முடியாது."

"வர வர என்னால துணியே தோய்க்க முடியலைங்க...கையெல்லாம் வலிக்குது. வாசுகி வீட்ல கூட தவணை முறையில் வாங்கிட்டாங்க. அதுக்குக்கூடவா உங்களால முடியாது? எப்பப் பார்த்தாலும் பஞ்சப்பாட்டு பாடறீங்களே"...கோபமாய் பொரிந்தாள் மனைவி அகிலா.

"இதோ பார்... எப்பவும் மேலே இருக்கிறவங்களைப் பார்த்து பொருமிக்கிட்டிருக்காதே! நம்மளை விட கீழே இருக்கிறவங்களை கொஞ்சம் நினைச்சுப் பாரு! குடிசையிலும் பிளாட்பாரத்திலும் ஒரு வேளை கஞ்சிக்குக்கூட வழியில்லாம எத்தனை பேர் வாழறாங்க. நமக்காவது சொந்தத்தில் ஒட்டு வீடு இருக்கு. அதை நினைச்சு ஆறுதல் பட்டுக்கோ. வாஷிங் மெஷின், ப்ரிட்ஜ்ன்னு வீணா ஆசையை வளர்த்துக்காதே!" என்று மனைவியின் வாயை அடைக்கவும் வாசலில் "சார்" என்ற குரல் கேட்கவும் சரியாக இருந்தது.

டியூசனுக்கு வந்த இரண்டு பையன்களையும் முன் அறையில் உட்கார வைத்தார் வேதாசலம்.

"என்னடா பாலு ...டெஸ்ட் பேப்பர் தந்துட்டாங்களா? கணக்கில் எவ்வளவு மார்க் வாங்கியிருக்கே?"

தயக்கத்துடன் பேப்பரை நீட்டினான் பாபு. " அறுபத்தோரு மார்க் சார்."

"என்னடா இவ்வளவு குறைச்சலா வாங்கியிருக்கே! தொண்டைத் தண்ணீர் வறண்டு போற அளவுக்கு தினமும் உங்களுக்கெல்லாம் சொல்லித் தர்றேன். அட்லீஸ்ட் தொண்ணூறு மார்க்காவது வாங்க வேண்டாமா?"

"கிளாஸ்ல நிறையைப் பேர் நாற்பதை தாண்டலை சார்."

"எப்பவும் கீழே பார்க்காதேடா, மேலேதான் பார்க்கணும். உனக்கு மேலே எத்தனை பேர் அதிகமா மார்க் வாங்கியிருக்காங்க. அவர்களை விட அதிகமா மார்க் வாங்கிக்காட்டணும்னு மனசுல ஒரு வெறி இருக்கணும். அப்போதான் வாழ்க்கையில் முன்னேற முடியும். புரிஞ்சுதா?"

நிமிர்ந்த வேதாசலத்தின் பார்வை கதவுக்கருகில் சென்றது . அங்கே உஷ்ணப் பார்வையை வீசியபடி நின்றிருந்த அகிலாவைப் பார்த்ததும் நெஞ்சுக்குள் கத்தி இறங்கியது மாதிரி சட்டென்று ஒரு குற்ற உணர்ச்சி.

"எப்பாடு பட்டாவது அடுத்த மாதத்திற்குள் அகிலாவுக்கு வாஷிங் மெஷின் வாங்கித் தந்துடணும்" ... தீர்மானித்தார் வேதாசலம்.

( 25.5.2000 " குமுதம் " இதழில் வெளியான எனது சிறுகதை )

( ரேகா ராகவன் )






Monday, September 28, 2009

இன்று இனிதே உதயம்

அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு,

மற்றுமொரு வலைப்பூவில் உங்களையெல்லாம் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் .

அன்புடன்

ரேகா ராகவன்.

EVERY DAY IS A GIFT THATS WHY THEY CALL IT THE PRESENT

Friday, September 25, 2009

அஸ்தேயம் / மிதஹாரம் என்ன இவைகள்?

சமீபத்தில் யோகாசனம் பற்றிய புத்தகம் ஒன்றை படித்தேன். அதில் மனத்தாலோ, உடலாலோ, செயலாலோ பிறர் பொருள் எதனையும் அபகரிக்காத பெருந்தன்மையை " அஸ்தேயம் " எனப்படுவதாக போடப்பட்டிருந்தது.

இந்த " அஸ்தேயம் " பற்றி யோசித்தேன். இதில் மனம், உடல் ஆகியவற்றை தவிர்த்து செயலால் பிறர் பொருள் எதனையும் அபகரித்தலை திருட்டு என்று அழைக்கிறோம். இந்த திருட்டு தான் எத்தனை வகை? பணம், நகை மற்றும் பொருள்கள் பிறரிடமிருந்து எப்படியெல்லாம் திருடப்படுகின்றன ?

வங்கியில் இருந்து ஒருவர் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வரும் போது அவர் கவனத்தை திசை திருப்ப " சார் உங்க பணம் கீழே விழுந்திருக்கு பாருங்க! " என்பான். அவர் கீழே குனிந்து பணத்தை எடுப்பதற்குள் அவர் வைத்திருந்த பணம் அபேஸ் ஆகியிருக்கும். அதைச் சொன்னவனே கீழே சில ரூபாய் நோட்டுக்களை போட்டுவிட்டு மொத்தமாக அடித்துக்கொண்டு போயிருப்பான். சில நூறுகளுக்கு ஆசைப்பட்டு பல நூறுகளை இழந்திருப்பார்.

"அம்மா இந்த அட்ரஸ் எங்கே இருக்கு பாருங்க! " என்று கேட்பார்கள் பைக்கில் வந்த இருவர். பாவம் உதவலாமே என்று எண்ணி அந்த துண்டு சீட்டை வாங்கி அந்த அம்மா படிப்பதற்குள் அவர் கழுத்தில் அணிந்திருக்கும் ஐந்து பவுன் தங்க செயின் அல்லது தாலியை பறித்துக்கொண்டு சிட்டாய் பறந்துவிடுவார்கள் பைக் ஆசாமிகள். உதவப்போய் இழந்ததுதான் மிச்சம்.

மேலும் தங்க காசு என்று பித்தளை காசுகளை கொடுத்து பல லட்ச ரூபாய்கள் மோசடி, பாலிஷ் போட்டு தருகிறோம் என்று கூறி நகைகளுக்கு பதிலாக பொட்டலத்தில் கல்லைக் கட்டி கொடுத்துவிட்டு டிமிக்கி கொடுத்த ஆசாமி, ரூபாய் நோட்டுக்களை இரட்டித்துத் தருகிறோம் என்று கள்ள நோட்டுக்களை தந்துவிட்டு ஓடிய கும்பல், இன்னும் பலவிதங்களில் மக்களை ஏமாற்றும் ஆசாமிகள் என்று தினமும் பத்திரிக்கைகளில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. மக்கள் ஏமாறாமல் உஷாராக இருப்பதற்காகத்தான் அவைகளை செய்தியாக போடுகிறார்கள். படிக்கும் நாம்தான் அவைகளை கவனத்தில் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும்.

சரி. பஸ்களில் எப்படி பிக்பாக்கெட் அடிக்கிறார்கள் என்பதை பார்ப்போமா? இது நான் கண்ணால் பார்த்த அனுபவம். அதிக கூட்டமுள்ள பஸ்களை தேர்ந்தெடுத்து மூன்று பேர் கொண்ட கும்பல் ஏறும். அதில் முதலாமவன் கண்கள் எல்லாம் சிவந்து குடிகாரன் மாதிரி இருப்பான். இரண்டாமவன் யாரிடம் தேட்டை போடலாம் என்று நோட்டம் விட்டு பாக்கெட்டில் பர்சை வெளியே தெரியும்படி வைத்திருப்பவன் எவனாவது சிக்கி விட்டால் அவன் பக்கத்தில் போய் நிற்பான். இவனிடமிருந்து சிக்னல் வந்ததும் முதலாமவன் முன்னே சென்று அவன் மேல் விழுவான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இரண்டாமவன் பர்சை இரண்டு விரல்களால் லாவகமாக எடுத்து மூன்றாவது ஆளிடம் பாஸ் செய்துவிடுவான். அடுத்த ஸ்டாப்பில் மூவரும் இறங்கி போனதுக்கு அப்புறம்தான் பர்ஸ் போன விவரம் தெரிய வரும். அப்புறமென்ன? குய்யோ! முய்யோ! என்று ஒரே கத்தல்தான். இப்படித்தான் ஒரு முறை சைதாப்பேட்டையில் 5-B பஸ்ஸில் ஒரு காலேஜ் மாணவனிடம் இருந்த பர்சை ஒருவன் எடுக்க இருந்ததை கவனித்த நான் அதை முறியடிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பஸ்ஸில் இல்லாத என் மாமாவிடம் சொல்வது போல "மாமா பர்ஸ் பத்திரம் அதில்தான் என்னோட ரயில் டிக்கெட் பணமெல்லாம் இருக்கு! " என்று ஒரு புருடா விட்டேன். உடனே அந்த மாணவன் உள்பட எல்லோரும் உஷாராகி தங்கள் பொருள்களை பத்திரப்படுத்தி விட்டனர்.

பிக் பாக்கெட் கோஷ்டி பஸ்ஸில் ஏறி இருப்பது தெரிந்தால் கண்டக்டர் "முன்னே போங்க! முன்னே போங்க! " என்று கத்துவார். அவர் காட்டிக்கொடுத்தால் பின்னால் அந்த ரூட்டில் அவர் தொழில் செய்ய முடியாது.

அஸ்தேயம் பற்றி சொன்னீங்க சரி. மிதஹாரம் பற்றி ஒண்ணுமே சொல்லலியேன்னு தானே கேட்கறீங்க? அது வந்துங்க ஒரு கெட்ட செயலைப் பற்றி சொன்னோமே ஒரு நல்ல செய்தியா நாம எப்படி சாப்பிடனும் என்று மிதஹாரம் சொல்லித்தருதேன்னுதான் அதையும் தலைப்பில் சேர்த்து இருக்கேன். ஆகார விஷயத்தில் மிதமான மனப்போக்கு அமையவேண்டும் என்பதை மிதஹாரம் (அதாவது எப்போதும் அரை வயிறு அளவே உணவு உண்ண வேண்டும், மீதமுள்ள அரை வயிற்றை நீருக்காகவும், வாயு சஞ்சாரத்துக்காகவும் ஒதுக்கி விடவேண்டும்) எனப்படுவதாக போடப்பட்டிருந்தது.

என்ன இதை படிக்கும் நீங்கள் இரண்டிலுமே இனி உஷாராக இருப்பீர்கள் தானே?.

Friday, September 18, 2009

ரசம் ஆஹா ! என்ன ருசி!

சமீபத்தில் ஒரு திருமணத்துக்கு போயிருந்தேன். அறுசுவையான சாப்பாடை உண்டு மகிழ்ந்ததும் உடனே சமையல் கட்டுக்கு போய் சமையல் செய்த கைகளை பிடித்துக் (குறிப்பாக அந்த ரசம் ஆஹா ! என்ன ருசி! ) குலுக்கி பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. அடுத்த நிமிடம் அங்கே ஆஜர்.

அங்கே நான் கண்ட காட்சி.

சமையல்காரர் ஒரு சின்ன இலையில் தயிர் சாதத்தை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். " எங்களுக்கெல்லாம் அறுசுவை உணவை படைத்துவிட்டு நீங்கள் வெறும் தயிர் சாதம் மட்டும் சாப்பிடறீங்களே, ஏன் சார்?" என்று கேட்டதும், "அதுவா சமையல் செய்யும் போது அதிலிருந்து கிளம்பும் வாசனை நாசிக்குள் புகுந்து வயிறை அடைச்சிடுதா, அதான் வெறும் தயிர் சாதம் தான் சாப்பிட பிடிக்குது " என்றார் (ஓஹோ அதான் சமையல் செய்யும் பெண்கள் தன் சமையலை தானே சாப்பிட பிடிக்காமல் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லுமாறு கணவர்களை நச்சரிக்கிறாங்களோ? ) . அவரின் சமையலை பாராட்டிவிட்டு அவரிடம் இந்த சூப்பர் ரசம் எப்படீங்க செய்வது என்று கேட்டேன். ரசத்துக்கு போடும் பொடியில் தான் இருக்கு அந்த ருசி என்றார். அவரிடம் கேட்டு அறிந்து கொண்ட ரசப் பொடி செய்முறை கீழே:

ரசப்பொடி:

தேவையான பொருள்கள்

துவரம் பருப்பு : 1/2 கிலோ

மிளகு : 250 கிராம்

சீரகம் : 200 கிராம்

பெருங்காயம் : 100 கிராம்

மிளகாய் வத்தல் : 300 கிராம்

தனியா : 3/4 கிலோ

மஞ்சள் பொடி : 50 கிராம்

கறிவேப்பிலை : 1 கைப்பிடி

செய்முறை : வாணலியை அடுப்பில் வைத்து முதலில் மிளகை லேசாக வறுக்கவும். பின்னர் துவரம் பருப்பு. அது லேசாக வறுபட்டதும் மிளகாய் வத்தலை கிள்ளிப் போட்டு விடுங்கள். தனியாவை சேருங்கள் . அதன் பின் கறிவேப்பிலை. பிறகு கடைசியாக சீரகம் போட்டு வறுத்து விடுங்கள். பெருங்காயத்தை பொடித்து எடுத்து வைத்திருந்து (சூடான வெறும் வாணலியில் கெட்டி பெருங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக்கி போட்டு பொறித்து எடுத்துக்கொண்டு) இந்த கலவையில் போட வேண்டும். இதை மிக்ஸ்சியில் சின்ன ரவை பதத்துக்கு அரைத்து எடுத்துக் கொண்டு பிறகு மஞ்சள் பொடியை நன்றாக கலந்து விடுங்கள். 4 டம்ளர் தக்காளி அல்லது பருப்பு ரசத்துக்கு இந்த ரசப்பொடி 1-1/2 ஸ்பூன் போட வேண்டும்.

என்ன உங்கள் வீட்டிலும் இனி ஆஹா ரசம் தானே!

Monday, September 14, 2009

"டெல்லி கணேஷும் நானும் "

அவ்வை ஷண்முகி படத்தில் நடிகர் டெல்லி கணேஷை மணிவண்ணன் கோஷ்டியினர் தெளிய வைத்து அடிக்கும் காட்சியில் அவரது நடிப்பு மட்டும் தனித்து தெரியும். அதை இப்போது நினைத்தாலும் எனக்கு குபுக் என்று சிரிப்பு வருகிறது.
கடந்த ஞாயிறு அன்று அவர் அம்பத்தூர் ஹுமர் கிளப் நடத்திய கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அப்போது அவர் சில நகைச்சுவையான காட்சிகளை விவரித்தார். அது...


ஒரு நாள் ஏ.வி.எம் படப்பிடிப்பு நிலையத்தின் பின் புறம் உள்ள சுடுகாட்டில் ஒரு படத்துக்கான ஷூட்டிங் எடுத்தார்கள். நான் அங்கே நடிக்க சென்றிருந்தேன்.லஞ்ச் பிரேக்கின் போது அந்த சுடுகாட்டின் நிஜமான வெட்டியானுடன் அவரைப் பற்றியும் அவர் செய்யும் வேலைகளைப் பற்றியும் பேச்சுக் கொடுத்ததில் அவர் நெருங்கிய நண்பர் போல என்னிடம் பேச ஆரம்பித்துவிட்டார். அவருக்கு லஞ்ச் வரவழைத்து கொடுத்து மேலும் குஷிப்படுத்தினேன். மாலை ஷூட்டிங் முடிந்து எல்லோரும் சென்றுவிட்டோம். அதற்கு அப்புறம் வேறு ஷூட்டிங்குகளில் கலந்து கொண்டதால் அதைப் பற்றி மறந்தே போய்விட்டேன்.

ஒரு பதினைந்து நாள் கழித்து கோடம்பாக்கத்தில் என் கார் சிக்னலுக்காக காத்திருந்தபோது காரை ஓட்டி வந்த என்னை அந்த வெட்டியான் சைக்கிளில் இருந்தவாறே பார்த்து " என்ன சார் அங்கே எப்ப வர்றீங்க?" என்று ஒரு அணுகுண்டை வீசினார். நான் ஆடிப் போய்விட்டேன். அந்த இடத்தில் அந்த சூழ்நிலையில் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு அவனிடம் "இல்லப்பா எனக்கு இன்னும் மூணு நாலு கமிட்மென்ட்ஸ் இருக்கு, அது முடிந்ததும் நானே வந்துடுவேன் !" என்றேன்.
அதுக்கு அந்த வெட்டியான் " ஐயோ சார் நான் அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை,மறுபடியும் ஷூட்டிங்குக்காக எப்போ அங்கே வர்றீங்க? என்று தான் கேட்டேன். தப்பா இருந்தா மன்னிச்சிக்கோ சார்! " என்றான். " இதை அப்போதே இப்படி கேட்டிருக்க வேண்டியதுதானே?" என்று நான் அவனிடம் சொல்லவும் சிக்னல் விழவும் சரியாக இருந்தது. அப்புறம் நான் காரை கிளப்பிக்கொண்டு போய்விட்டேன்.

என்ன நண்பர்களே அவரின் நகைச்சுவையை ரசித்தீர்களா?
எல்லாம் சரி. தலைப்புக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம் என்றுதானே கேட்கிறீர்கள்? சம்பந்தம் இருக்கு.நடிகர் டெல்லி கணேஷ் என் நீண்ட நாள் நண்பர். அவரை மாதிரி நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவரைப் பற்றி நான் என் நண்பர்களிடம் பேசும்போது டெல்லி கணேஷும் நானும் என்றுதான் பேச்சை ஆரம்பிப்பேன். இப்போ தலைப்பு சரியாப் போச்சா?


Friday, September 11, 2009

கோவணம் என்பது என்ன?

நான் படிக்கும் போது ஒவ்வொரு சனிக்கிழமையும் என் அம்மா என்னையும் என் அண்ணனையும் கூப்பிட்டு கோவணம் கட்டச் சொல்லி எங்கள் தலையிலும் உடம்பிலும் நல்லெண்ணையை தேய்த்துவிட்டு அது நன்றாக ஊறும் வரை தோட்ட வேலை செய்துவிட்டு வாங்க என்று அன்புக் கட்டளை இடுவாள். " எதுக்கும்மா கோவணம் கட்டிண்டு எண்ணெய் தேச்சுக்கணும்? நிஜாரோடேயே தேய்ச்சிக்கரேனே ?" என்று நான் கேட்டா " அப்புறம் நிஜாரெல்லாம் எண்ணெய் ஆயிடும் , ஸ்கூலுக்கு எதை போட்டுக்கிட்டு போவே?" என்பாள். அப்புறம் என்ன? அண்ணனுடன் குஷியாக வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்துக்கு சென்று அங்கு உள்ள வாழை மரங்களுக்கு தண்ணீர் செல்ல வழி அமைத்தும், பூச்செடிகளை அழகு படுத்தியும், களை பிடுங்கியும் ஆடு மாடுகள் வராத மாதிரி வேலியை நெருக்கமாக கட்டிவிட்டு பிறகு சுகமாக ஒரு வெந்நீர் குளியல் போட்டு விட்டு வந்தால் அம்மா தட்டில் சாப்பாடு போட்டு "சாப்பிடுங்கடா ! " என்பாள்.


படித்து முடித்து அரசு வேலைக்கு போய் மாடு மாதிரி உழைத்துவிட்டு இப்போது ஓய்வு பெற்ற பின் நேரத்தை பயனுள்ள விதத்தில் செலவிட தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ ஒரு மணி நேரம் தோட்ட வேலை செய்வதில் ஒரு தனி சுகத்தை அடைகிறேன். ஆனால் என் மனைவியோ " நீங்க தோட்ட வேலை செய்கிறேன் பேர்வழின்னு இப்படி வேட்டி பூரா மண்ணை பூசிக்கிட்டு வரீங்களே, இனிமே பேசாம கோவணம் கட்டிக்கிட்டு வேலை செய்யுங்க!" என்கிறாள். அது சின்ன வயசில் சரி. இப்போ?

இதைப் பற்றி சிந்தித்தும் புத்தகங்களை படித்தும் பார்த்தேன். இந்த கோவணம் என்பது என்ன? ஒரே துண்டுத் துணியால் ஆன இடைக்கு கீழ் அணியும் ஆடை. பொதுவாக, ஆண்கள் மட்டுமே இதை அணிகிறார்கள். துண்டு மற்றும் பழைய வேட்டிகளில் இருந்து கிழிக்கப்பட்ட துண்டுத் துணியைத்தான் இதற்கு பயன்படுத்துகின்றனர் . இதை இடையில் கட்ட அரைஞாண் கயிறு (அருணாக் கயிறு) உதவுகிறது.

வயலில் வேலை செய்பவர்கள் மற்றும் வெயிலில் வேலை செய்யும் ஏழைகள் முன்பு இதை பயன்படுத்தி வந்தார்கள். பழைய கால சினிமாக்களில் ஆண்கள் இதை கட்டிக்கொண்டு ஏர் உழுவதையும், நாத்து பறிப்பதையும் , நடுவதையும் பார்க்கலாம். இப்போதும் ரயில் பயணங்களின்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக வயலில் வேலை செய்பவர்களை கோவணத்துடன் காண முடிகிறது. நாகரீகம் முன்னேறவும் கிராமத்தில் வசிப்பவர்களும் இதை துறந்து விட்டு அண்டர்வேர் (வடிவேலு, ராமராஜன், ராஜ்கிரண் ஆகியோர் இது தெரிகிற மாதிரி வேட்டியை தூக்கி கட்டி இருப்பார்கள்) எனப்படும் உள்ளாடையையே தற்போது அணிகின்றனர். தற்போது இளைய தலைமுறையினர் யாரும் இதை அணிய விரும்புவதில்லை. எனினும் நடிகர் கமலஹாசன் அந்த காலத்தில் " பதினாறு வயதினிலே" படத்தில் வெறும் கோவணத்துடன் தோன்றி அவருடைய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். உள்ளாடையாக இதை அணிவதை தற்காலத்தில் நாகரிகமாக எவராலும் கருதப்படுவதில்லை. ஆயத்த உள்ளாடைகள் வந்து விட்ட பிறகும் வறுமை மற்றும் பழக்கம் காரணமாகவோ எளிமை கருதியோ சிலர் கோவணம் அணிகிறார்கள். அந்த காலங்களில் ஆண்கள் குளிக்கும்போது கோவணத்துடன் குளித்து பின் உலர்ந்த கோவணம் ஒன்றை கட்டிக்கொள்வார்கள். இதை வயது வித்தியாமின்றி, சிறியவர் முதல் பெரியவர், முதியவர் என எல்லோரும் கட்டிக்கொண்டனர். சிறு ஆண் பிள்ளைகளுக்கு வீட்டில் இருக்கும் போது இதை மட்டுமே கட்டி விடுவதுண்டு. கிராமங்களில் சின்ன பெண் குழந்தைகளுக்கு கூட இதை கட்டிவிடுவதுண்டு. காசியில் சாதுக்கள், சாமியார்கள் கோவணம் மட்டுமே அணிந்து திரிவதை பார்கிறோம். இவ்வளவு ஏன்?முருகக் கடவுளே ஆண்டியாக இருந்த போது கோவணத்துடன் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.

இதையெல்லாம் இப்போ எதுக்கு எங்களுக்கு சொல்லிக்கிட்டு இருக்கே என்கிறீர்களா? இப்போதுள்ள சிறுவர்களிடம் (ஏன் உங்களில் சிலரிடம் கூட) கோவணம் என்றால் என்ன என்று கேட்டுப் பாருங்கள். நீங்களோ அல்லது அவர்களோ பதில் சொல்லிவிட்டால் நான் இந்த பதிவையே போடவில்லை என்று நினைத்து விட்டுப் போகிறேன்.

Sunday, September 6, 2009

கடப்பா செய்வது எப்படி?



நாகப்பட்டினத்தில் நான் பணி புரிந்த போது பெருமாள் கோயில் எதிரே உள்ள "லக்ஷ்மி கபே"-யில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். வாரம் ஒரு முறை காலையிலோ அல்லது மாலையிலோ அங்கே "கடப்பா" என்று ஒன்று போடுவார்கள். இட்லி, பூரி, தோசைக்கு தொட்டுக்கொள்ள இது ஜோராக இருக்கும். மற்ற நாட்களில் வராதவர்கள் கூட அன்று தவறாமல் ஆஜராகி விடுவார்கள். சின்ன வயசில் விழுப்புரத்தில் படித்த போது இதை ருசித்திருக்கிறேன். அதன் பின்பு இங்கேதான் சாப்பிடும் பாக்கியம் கிடைத்தது. யான் பெற்ற சுவையை நீங்களும் பெற வேண்டும் என்பதற்காக அதன் செய் முறையை கீழே தந்துள்ளேன்:-

கடப்பா

தேவையான பொருள்கள் :

உருளைக்கிழங்கு : இருநூறு கிராம்
பெரிய வெங்காயம் : முன்னூறு கிராம்
பயத்தம் பருப்பு : நூறு கிராம்
பூண்டு : எட்டு பல்
பச்சை மிளகாய் : ஆறு
தேங்காய் : அரை மூடி
பட்டை : பத்து கிராம்
லவங்கம் : பத்து கிராம்
கசகசா : இருபது கிராம்
பொட்டு கடலை : ஐம்பது கிராம்
மஞ்சள் தூள் : ஒரு டீ ஸ்பூன்
எண்ணெய் : இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
எலுமிச்சம் பழம் : அரை மூடி
செய்முறை:முதலில் பயத்தம் பருப்பையும் உருளைக் கிழங்கையும் வேகவைத்துக் கொள்ளவும்.தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு பொட்டுக் கடலை, தேங்காய்த் துருவல், 4 பல் பூண்டு, கசகசா, பச்சை மிளகாய்இவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதன் பின்பு வாணலியில் எண்ணை வைத்துக் காய்ந்ததும், 4 பல் பூண்டு போட்டு சிவக்க வறுத்து , பின் பட்டை, இலவங்கம், நறுக்கிய வெங்காயம் என்ற வரிசையில்சேர்த்து வதக்கவும்.வெங்காயம் சிவந்ததும், வேகவைத்த பயத்தம்பருப்பு, 2 கப் தண்ணீர், உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.கொதிக்க ஆரம்பித்ததும், உதிர்த்து வைத்துள்ள உருளைக் கிழங்கு, அரைத்துவைத்துள்ள மசாலாவைச் சேர்த்து மேலும் சில நிமிடங்களுக்குக் கொதிக்கவைத்துஇறக்கவும்.இறக்கிய சூட்டோடு எலுமிச்சம் பழம் 1/2 மூடி பிழிந்து, கொத்தமல்லித் தழையை அதன் மேல் தூவி விடுங்கள். கடப்பா ரெடி. செய்யுங்க , சாப்பிடுங்க ,அசத்துங்க .

Saturday, September 5, 2009

புகை (சிறுகதை)


பஸ் ஸ்டாண்டில் காலியாக இருந்த பஸ்சுக்குள் ஏறி ஜன்னல் ஓரமாய் உட்கார இடம் கிடைத்ததில் என்னவோ என் குழந்தைக்கு எல்.கே.ஜி-யில் சேர ஸீட் கிடைத்தது போன்ற மகிழ்ச்சி எனக்கு.
கொஞ்சம் கொஞ்சமாய் பஸ் நிரம்ப பிச்சைக்காரர்கள் ஒவ்வொருவராய் வந்து காசு வாங்கிக்கொண்டு போனார்கள். டிரைவர்களோ சீட்டுக்கட்டுக்களை அடுக்கி தள்ளிவிடும் விளையாட்டு மாதிரி பஸ்களை நெருக்கமாக நிறுத்தி இருந்தார்கள்.

அழுக்கு லுங்கியுடனிருந்த ஒருவன் இரண்டு பஸ்களுக்கிடையில் நின்று கொண்டு சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தான். அவன் நின்றிருந்த இடம் போயும் போயும் என்னோட ஜன்னலுக்கு கீழேதான் இருக்க வேண்டுமா? சிகரெட் புகையை நான் கேட்காமலேயே சுவாசிக்க அனுப்பிக் கொண்டிருந்தான்.

தலையை வெளியே நீட்டி அவனிடம் " சார் அப்படி எங்கேயாவது போய் சிகரெட் பிடிக்கக்கூடாதா? " என்று நான் கேட்க--

" தோடா பஸ்சுக்குள்ளார புடிக்க கூடாதுங்கராங்கலேன்னு வெளியே நின்னு பிடிச்சா பெரீசா கேட்க வந்துட்டியே, ஏன் நீ தள்ளி உட்காரு "

" இதுவும் பப்ளிக் இடம் தான். இங்கெல்லாம் சிகரெட் பிடிக்கக் கூடாது "

" யேய் என்னா? என்னான்ர இப்ப?" மிரட்டலுடன் அவன் கேட்கவும் மௌனமானேன்.

என்னை வென்றுவிட்ட நினைப்பில் அலட்சிய பார்வையினை என்னை நோக்கி வீசியவன் மற்றவர்களை பார்த்து சிரித்தவாறே புகை பிடிப்பதை தொடர்ந்தான். பஸ்சுக்குள்ளிருந்தவர்கள் இதை கண்டும் காணதவர்கள் போல படிப்பதிலும் மொபைலிலும் மும்முரமாய் இருந்தனர்.

அடங்கி அவதிப்பட வேண்டியதுதானா? யோசித்தேன்.

அடுத்த நிமிடம்...

திடீரென்று பயங்கர குமட்டல் சத்தத்துடன் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி வாந்தி எடுப்பது போல நாலைந்து முறை சவுண்ட் கொடுத்தேன்.

அதை சற்றும் எதிர்பார்க்காத அந்த லுங்கிக்காரன் பதறிப் பாய்ந்து தூர ஓடினான் பதட்டத்தில் கீழே விழுந்துவிட்ட சிகரெட்டை எடுக்காமலேயே.

பஸ்சும் புகையை கக்கியபடி புறப்பட எனக்கு நிஜமாகவே வயித்தை குமட்டியது.


Wednesday, September 2, 2009

சுவரேறிக் குதித்தால் கோர்ட்

அப்போது நான் ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். விழுப்புரத்தில் இருந்த எங்கள் வீடு சின்னதாக இருந்தாலும் தோட்டம் பெரிதாக இருக்கும். மதிய சாப்பாட்டிற்காக (?) வீட்டுக்கு வந்தால் அம்மா என்னை அப்பாவிடம் போய் பணம் வாங்கி வாடா என்பாள். நானும் தாய் சொல்லை தட்டாமல் உடனே தோட்டத்தின் பக்கம் ஓடுவேன் . ( தெரு வழியாக போகணும் என்றால் இரண்டு தெருக்களை சுத்திக்கொண்டு போகணுமே! ),தோட்டக் கடைசியில் ஒரு பெரிய காம்பவுண்ட் சுவர் இருக்கும். அது அந்த காலத்து சுவர் என்பதால் காரைகள் பெயர்ந்து அங்கங்கே பொந்துகளுடன் இருக்கும். அவைகளில் லாவகமாக காலை வைத்து ஏறி அந்த பக்கம் குதித்தால் ...
அங்கே...
பல்வேறு பறவைகளின் இனிய சத்தங்களை கேட்டுக்கொண்டே சுள்ளி,வேப்பங் கொட்டைபொறுக்கும் கிழவிகளையும் சிறுவர்களையும் கடந்து போனால் ஓரிடத்தில் கும்பலாக சிலர் நின்றுகொண்டிருப்பார்கள். ஒருவர் சேரை போட்டுக்கொண்டு எதையோ படிப்பார். (அது கேஸ் நம்பர் என்பது பெரியவனானதும் தெரிந்துகொண்டேன்) இன்னொருவர் அந்த கேஸ் சம்பந்தப்பட்ட பானையையோ அல்லது பாட்டிலையோ எடுத்து வைப்பார். காத்திருப்பவர் கையில்வைத்திருக்கும் இரும்புத் தடியால் ஒரு போடு போட கள்ளச் சாராயமோ, பிராந்தியோ, விஸ்கியோ ஆறாக ஓடும். அந்த 'பிராந்தி' யமே ஒருவித வாசனையுடன் இருக்கும். பக்கத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் என்னைப் பார்த்து " சாமி கொஞ்சம் குடிக்கறீங்களா?" என்று கிண்டலான கேள்வி வேறு. அடுத்த வினாடி அங்கிருந்து ஓட்டமெடுத்தால் என் அப்பா இருக்குமிடத்தில் தான் போய் நிற்பேன்.

அப்போது பூரண மதுவிலக்கு இருந்த காலம். கள்ளச் சாராயம் , பாண்டிச்சேரியிலிருந்து திருட்டுத்தனமாக எடுத்து வரப்படும் மது வகைகள் போன்றவைகளை பிடித்து கேஸ் போட்டு கேஸ் முடிந்ததும் இது மாதிரி வெட்ட வெளியில் அவைகளை அழிக்கும் சம்பவம் அவ்வப்போது நடக்கும்.

சமீப காலங்களில் " குடித்துவிட்டு ஓட்டலில் தகராறு செய்த போலீஸ்காரர்களை சுற்றி வளைத்த போலீஸ்காரர்களுடன் குஸ்தியில் இறங்கிய போலீஸ்காரர்கள்", " குடித்துவிட்டு பஸ்சில் இருந்து இறங்க மறுத்த போலீஸ்காரரை வலுக்கட்டாயமாக இறக்கிய போலீஸ் " என்று பத்திரிகைகளில் கட்டம் போட்டு வரும் செய்திகளை படிக்கும்போது சிரிப்புத்தான் வருகிறது. வேலியே பயிரை மேயலாமா?

அது சரி. நீங்க ஏன் அங்கெல்லாம் போய் நிக்கறீங்கன்னு நீங்க கேட்கறது காதில் விழுது. பின்னே என் அப்பா அந்த கோர்ட்டில் தானே வக்கீலாக பிராக்டீஸ் செய்தார், அங்கே போகாமல் வேறெங்கே போவேன்?